பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ் ஸ்வியாடெக் சாம்பியன்

பாரிஸ்: பிரெஞ்ச் ஓபன் கிராண்ட் ஸ்லாம் டென்னிஸ் தொடரின் மகளிர் ஒற்றையர் பிரிவில், நம்பர் 1 வீராங்கனை இகா ஸ்வியாடெக் (போலந்து) 2வது முறையாக சாம்பியன் பட்டம் வென்றார். இறுதிப் போட்டியில் அமெரிக்காவின் கோகோ காப்புடன் (18 வயது, 23வது ரேங்க்) நேற்று மோதிய ஸ்வியாடெக் (21 வயது) 6-1, 6-3 என்ற நேர் செட்களில் மிக எளிதாக வெற்றியை வசப்படுத்தினார். ஏற்கனவே 2020ல் பிரெஞ்ச் ஓபன் கோப்பையை கைப்பற்றி இருந்த அவர், நேற்று 2வது முறையாக பட்டம் வென்று அசத்தினார். இது அவர் வெல்லும் 2வது கிராண்ட் ஸ்லாம் பட்டமாகும். நடப்பு சீசனில் இகா தொடர்ச்சியாக 6 சாம்பியன் பட்டங்களை வென்றுள்ளதுடன், 35 போட்டிகளில் தோற்காமல் அமெரிக்காவின் வீனஸ் வில்லியம்ஸ் சாதனையை சமன் செய்துள்ளார்.

* யாருக்கு வாய்ப்பு? இது சோம்தேவ் கணிப்பு

பிரெஞ்ச் ஓபன் ஆண்கள் ஒற்றையர் பைனலில் வெற்றி யாருக்கு என்பது குறித்து, சோனி நெட்வொர்க் சார்பில் நேற்று ஏற்பாடு செய்யப்பட்ட காணொலி கலந்துரையாடலில் முன்னாள் நட்சத்திரம் சோம்தேவ் தேவ்வர்மன் செய்தியாளர்களிடம் கூறியதாவது: அரையிறுதியில்  இளம் வீரர் கேஸ்பர் ரூ.ட், மூத்த வீரரான மரின் சிலிச்சுக்கு எதிராக வென்றுள்ளார். இந்த வெற்றி நடாலுக்கு எதிரான பைனலிலும் விளைவுகளை ஏற்படுத்தும்  என்று நான் நினைக்கவில்லை. நேர்மையாக சொல்ல வேண்டும் என்றால்  இரண்டுமே வேறு, வேறு  வகையான ஆட்டம். ஆனால், அந்த வெற்றி கேஸ்பருக்கு பைனலி எதிர்கொள்வதற்கான நம்பிக்கையை அளிக்கலாம். பொதுவாக களிமண் தரையில் நடாலின் வேகம் கூடுதலாக இருப்பதை பார்த்து இருக்கிறோம். அதுமட்டுமின்றி, கேஸ்பர் முதல்முறையாக கிராண்ட் ஸ்லாம் பைனலுக்கு முன்னேறியுள்ளார். அதனால் அவர் எந்த மனநிலையில் இப்போட்டியை எதிர்கொள்ள உள்ளார் என்பது முக்கியமானது. அதற்கான நெருக்கடியும் இருக்கலாம். அதனால் என்னைப் பொறுத்தவரை நடாலுக்கு தான் வெற்றி வாய்ப்பு. இவ்வாறு சோம்தேவ் கூறினார்.

Related Stories: