×

காது கேளாதோருக்கான ஒலிம்பிக் போட்டியில் பதக்கம் வென்றவர்களுக்கு ரூ.1.10 கோடி ஊக்கப் பரிசு: முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்

சென்னை: காதுகேளாதோருக்கான ஒலிம்பிக் போட்டியில் பதக்கங்கள் வென்ற வீரர் மற்றும் வீராங்கனைக்கு ரூ.1.10 கோடிக்கான காசோலைகளை முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கினார். இதுகுறித்து தமிழக அரசு வெளியிடப்பட்ட அறிக்கை: பிரேசில் நாட்டில் 24வது கோடைகால காது கேளாதோருக்கான ஒலிம்பிக் போட்டி-2022, கடந்த மே 1ம் தேதி முதல் 15ம் தேதி வரை நடந்தது. இதில் இந்திய அணி சார்பில் தமிழகத்தை சேர்ந்த ஜெர்லின் அனிகா (18) இறகு பந்து போட்டியில், ஒற்றையர் பிரிவு, கலப்பு இரட்டையர் பிரிவு மற்றும் குழு போட்டி ஆகியவற்றில் 3 தங்ப் பதக்கங்களை வென்றுள்ளார். அவருக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று தலைமை செயலகத்தில், ரூ.75 லட்சத்துக்கான காசோலையை ஊக்கத்தொகையாக வழங்கினார். ஜெர்லின் அனிகா, மதுரையில் உள்ள அவ்வை மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் 12ம் வகுப்பு பயின்று வருகிறார்.

இவர் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தில் பன்னாட்டு அளவிலான போட்டிகளில் பதக்கங்கள் வெல்வதற்கு ஊக்குவிக்கும் திட்டத்தின் கீழ் ஆண்டொன்றுக்கு ரூ.10 லட்சம் நிதியுதவி பெற்றுவரும் விளையாட்டு வீராங்கனை ஆவார். மேலும், இந்த போட்டிகளில் ஆடவருக்கான டென்னிஸ் போட்டியில் இந்தியாவின் சார்பாக பங்கேற்ற சென்னையை சேர்ந்த பிரித்வி சேகர் (39) இரட்டையர் பிரிவில் 1 வெள்ளிப்பதக்கமும், ஒற்றையர் பிரிவு மற்றும் கலப்பு இரட்டையர் பிரிவு போட்டிகளில் 2 வெண்கலப்பதக்கமும் என 3 பதக்கங்களை வென்றுள்ளார். அவருக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று தலைமைச் செயலகத்தில் ரூ.35 லட்சத்துக்கான காசோலையை ஊக்கத்தொகையாக வழங்கினார். நிகழ்ச்சியில் அமைச்சர் மெய்யநாதன், தலைமை செயலாளர் இறையன்பு, இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை முதன்மைச் செயலர் அபூர்வா, தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணைய தலைமை செயல் அலுவலர் கார்த்திகேயன், வீரர், வீராங்கனையின் குடும்பத்தினர் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Tags : Olympic ,Chief Minister ,MK Stalin , 1.10 crore incentive for Olympic medalists: Chief Minister MK Stalin
× RELATED பாரீஸ் ஒலிம்பிக் போட்டிக்கான தீபம்...