செங்கல்பட்டு - மதுராந்தகம் தேசிய நெடுஞ்சாலையில் எரிந்த நிலையில் ஆண் சடலம் மீட்பு: போலீசார் விசாரணை

மதுராந்தகம்: செங்கல்பட்டிலிருந்து மதுராந்தகம் நோக்கி செல்லும் தேசிய நெடுஞ்சாலையை ஒட்டி அமைந்துள்ளது புக்கத்துறை கிராமம். இங்கு உள்ள நெடுஞ்சாலையில் இருந்து சிறிது தூரத்தில் நேற்று அதிகாலை மனித உடல் ஒன்று எரிந்து கொண்டிருப்பதை அப்பகுதி வழியாக சென்றவர்கள் பார்த்துள்ளனர். உடனே, படாளம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு படாளம் போலீசார் மற்றும் டிஎஸ்பி பரத் விரைந்து வந்தனர். இதில், உடலின் பெரும்பகுதி எரிந்த நிலையில் காணப்பட்டது. அது ஆண் சடலம் என்பது தெரியவந்தது. எரிந்த நிலையில் காணப்பட்ட நபருக்கு சுமார் 40 வயது இருக்கலாம் என கூறப்படுகிறது. இறந்தவர் குறுந்தாடியுடனும், பச்சை நிறத்தில் ஷார்ட்்ஸ் அணிந்திருந்தார். உடலை மீட்ட போலீசார் செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து இவரை யாராகிலும் கொலை செய்து இங்கு கொண்டு வந்து போட்டு எரித்தனரா அல்லது வேறு ஏதேனும் காரணமா என போலீசார் விசாரித்து வருகின்றனர். மேலும், இது குறித்து செங்கல்பட்டு டிஎஸ்பி பரத்  கூறுகையில், இது போன்ற அடையாளம் உள்ள நபர் யாராவது காணாமல் போயிருந்தால், படாளம் போலீசாருக்கு தகவல் கொடுக்க வேண்டும் என்றார். கடந்த சில மாதங்களுக்கு முன்பு, மதுராந்தகம் அடுத்த அச்சிறுப்பாக்கம் மற்றும் ஒரத்தி காவல் நிலைய எல்லைகளில் மூன்று உடல்கள் வெவ்வேறு சம்பவங்களில், இதேபோன்று எரிந்த நிலையில் கண்டெடுக்கப்பட்டது. இது குறித்து, வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். ஆனால், அந்த மூன்று வழக்குகளிலும் இதுவரை எந்த முன்னேற்றமும் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Related Stories: