நடப்பு நிதியாண்டிற்குள் பாம்பன் புதிய ரயில் பாலம் போக்குவரத்து தயாராகி விடும்; ரயில்வே அதிகாரிகள் தகவல்.!

மதுரை: நடப்பு நிதியாண்டிற்குள் பாம்பன் புதிய ரயில் பாலம் போக்குவரத்துக்கு தயாராகி விடுமென அதிகாரிகள் தெரிவித்தனர். ராமேஸ்வரம் அருகே பாக்ஜலசந்தி கடலில் பாம்பன் ரயில் பாலம் கடந்த 1914ல் கட்டப்பட்டு, ரயில் போக்குவரத்து நடந்து வருகிறது. சுமார் 2.06 கி.மீ தூரமுள்ள இந்த பாலத்தின் மையத்தில், கப்பல் போக்குவரத்திற்கு வசதியாக, தூக்குப்பாலம் அமைக்கப்பட்டுள்ளது. மீட்டர் கேஜ் ரயில்களுக்காக கட்டப்பட்ட பாம்பன் பாலம், கடந்த 2006-07ம் நிதியாண்டில் அகலப்பாதை ரயில் போக்குவரத்திற்கு ஏற்றவாறு மாற்றப்பட்டது. 100 ஆண்டு பழமையான பாலம் என்பதால், பாம்பன் கடலில் புதிய பாலம் கட்ட ஒன்றிய அரசு முடிவு செய்தது. இதற்காக கடந்த 2019ல் ரூ.279 கோடி நிதி ஒதுக்கப்பட்டது.

இதுகுறித்து ரயில்வேத்துறை அதிகாரிகள் கூறியதாவது: பாம்பன் கடலில் புதிய ரயில் பால கட்டுமானப்பணிகள் தீவிரமாக நடந்து வருகின்றன. புதிய பாலம் 18.3 மீட்டர் உயரத்தில் 99 கர்டர்களுடன் அமைக்கப்பட்டு வருகிறது. பாலத்தின் மத்தியில் இருபுறங்களையும் இணைத்து லிப்ட் போல மேலே செல்லும் வகையில் தூக்குப்பாலம் அமைய உள்ளது. பிற்காலத்தில் இரட்டை ரயில் பாதை அமையும் வகையில் தூண்கள் அகலமாக அமைக்கப்பட்டுள்ளன. தற்போது ரயில் பாதை பணியில் கர்டர்கள் பொருத்தப்பட்டு வருகின்றன.  பாம்பன் பாலத்திற்கான கட்டுமான பணிகளை வடிவமைப்பதற்காக சத்திரக்குடி ரயில் நிலையத்தில் பிரமாண்ட தொழிற்சாலை அமைக்கப்பட்டுள்ளது.

இங்கு கட்டுமான பொருட்கள் சர்வதேச தரத்துடன் வடிவமைக்கப்பட்டு, பாம்பன் கடலுக்கு கொண்டு செல்லப்பட்டு, புதிய கட்டுமானத்திற்கு பயன்படுத்தப்படுகிறது. பாம்பன் புதிய பாலத்தை சாலை போக்குவரத்து பாலத்துக்கு இணையாக 17 மீட்டர் வரை உயர்த்த முடியும். இதன் மூலம் பெரிய கப்பல்களும் ராமேஸ்வரம் வந்து செல்ல வழிவகை ஏற்படும். பாம்பன் கடலுக்கு நடுவில் 35 மீட்டர் ஆழத்தில் அஸ்திவாரத்துடன் தூண்கள் கட்டும் பணி நடந்து வருகிறது.  இந்த பணிகள் அடுத்த மாதம் முடியும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பாம்பன் புதிய ரயில் பாலம் இந்த நிதியாண்டிற்குள் போக்குவரத்திற்கு தயாராகிவிடும். இவ்வாறு கூறினர்.

Related Stories: