வீட்டு பால்கனியில் தடுப்பு கம்பிக்குள் தலையை விட்டு சிக்கிய குழந்தை; தஞ்சை அருகே பரபரப்பு

கும்பகோணம்: தஞ்சை மாவட்டம் கும்பகோணம் அருகே தாராசுரம் மெயின் ரோட்டில் உள்ள ஒரு மாடி வீட்டில் வசித்து வருபவர் விஜய். இவர், வீடுகள் மற்றும் கடைகளுக்கு தண்ணீர் கேன் போடும் தொழில் செய்து வருகிறார். இவரது மனைவி கீர்த்திகா. இவர்களுக்கு ஒன்றரை வயதில் ஹரிப்ரியன் என்ற குழந்தை உள்ளது. இந்நிலையில் நேற்று வீட்டின் பால்கனியில் விளையாடிக்கொண்டிருந்த குழந்தை, எதிர்பாராத விதமாக இரும்பு தடுப்பு கம்பிகளுக்கு இடையே தலையை விட்டபோது தலை மாட்டிக்கொண்டது.

தலையை வெளியில் எடுக்க முடியாததால் குழந்தை கதறி அழுதது. இந்த சத்தம் கேட்டு ஓடிவந்த பெற்றோர் அதிர்ச்சி அடைந்தனர்.  உடனே கம்பிகளுக்கு இடையே சிக்கிய குழந்தையின் தலையை வெளியில் இழுக்க முடியாமல் தவித்தனர். அப்போது அந்த வழியாக வந்தவர்கள், அக்கம்பக்கத்தினர் உடனடியாக மாடிக்கு சென்று கம்பிகளை உடைத்து சுமார் அரை மணி நேரம் போராட்டத்துக்கு பின் குழந்தையை மீட்டனர். குழந்தையை காப்பாற்றியவர்களுக்கு பெற்றோர் கண்ணீர் மல்க நன்றி தெரிவித்தனர்.

Related Stories: