×

வேனில் கடத்த முயன்ற 648 நட்சத்திர ஆமைகள் பறிமுதல்

திருமலை: ஆந்திராவில் வனத்துறையினர் நடத்திய சோதனையில் வேனில் கடத்த முயன்ற 648 நட்சத்திர ஆமைகள் பறிமுதல் செய்யப்பட்டது. ஆமைகளை கடத்திய வேன் டிரைவரை வனத்துறையினர் பறிமுதல் செய்தனர். ஆந்திர மாநிலம் அல்லூரி சீதாராமராஜு மாவட்டம் சிந்தூர் பகுதியில் வனப்பகுதிக்கு உட்பட்ட துளசிபாக்கா வனத்துறை சோதனை சாவடியில் வனத்துறையினர் நேற்று சோதனையில் ஈடுபட்டனர். அப்போது, ராஜமுந்திரியில் இருந்து சிந்தூர் நோக்கி வந்த சரக்கு வேனை நிறுத்தி சோதனையிட்டனர். அதில் 36 பைகளில் 648 நட்சத்திர ஆமைகள் இருந்தது. வேனை ஓட்டிய டிரைவரான சேகர்ராய் என்பவரை பிடித்து விசாரித்தனர்.

அதில் ஆமைகளை கிழக்கு கோதாவரி மாவட்டத்தில் உள்ள ராவலபாலயத்தில் இருந்து ஒடிசா மாநிலத்திற்கு கடத்திச்செல்வது தெரியவந்தது. இதையடுத்து வேனில் ஆமைகளை கடத்திய சேகர்ராய் மீது வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்தனர். பின்னர் ஆமைகளை பறிமுதல் செய்தனர். கைது செய்யப்பட்ட சேகர்ராயை ரம்பசோடவரம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். இந்த ஆமை கடத்தலின் பின்னணியில் உள்ளவர்களையும் விரைவில் கைது செய்வோம் என மாவட்ட வன அலுவலர் சாய்பாபா கூறினார். பறிமுதல் செய்யப்பட்ட ஆமைகள் சிலேருவில் உள்ள ஏ.பி.ஜென்கோ நீர் மின்சார உற்பத்தி செய்யும் நீர்த்தேக்கத்தில் பாதுகாப்பாக விடப்பட்டது.


Tags : 648 star tortoises seized in van
× RELATED உபியின் பிரபல தாதா முக்தார் அன்சாரி மாரடைப்பால் மரணம்