பிரெஞ்சு ஓபன் டென்னிஸ்; நடால்-காஸ்பர் ரூட் பைனலில் நாளை மோதல்

பாரீஸ்: கிராண்ட்ஸ்லாம் அந்தஸ்து பெற்ற பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ் தொடர் பாரீசில் நடந்து வருகிறது. இதில் நேற்று நடந்த அரையிறுதி போட்டியில் 5ம் நிலை வீரரான ஸ்பெயினின் ரபேல் நடால், 3ம் நிலை வீரரான ஜெர்மனியின் அலெக்சாண்டர் ஸ்வெரேவ் மோதினர். முதல் செட்டில் கடும் போட்டி ஏற்பட்டது. நடாலின் சர்வீஸ்களை முறியடித்து ஸ்வெரேவ் கடும் சவால் கொடுத்தார். டைபிரேக்கர் வரை சென்ற இந்த செட்டை 7-6 (10-8) என நடால் போராடி கைப்பற்றினார். இந்த செட் ஒருமணி நேரம் 31 நிமிடம் நடந்தது. தொடர்ந்து 2வது செட்டிலும் இதே நிலை தொடர்ந்தது. ஒரு கட்டத்தில் 5-3 என ஸ்வெரேவ் முன்னிலை பெற்றார். அதன்பின்னர் நடால் எழுச்சியுடன் ஆடி 6-6 என சமன் செய்தார்.இந்த சூழலில் ஷாட் அடிக்கும் போது கீழே விழுந்ததில் வலது கணுக்காலில் ஏற்பட்டது.

வலியால் துடித்த அவர் போட்டியில் இருந்து விலகுவதாக அறிவித்தார். பின்னர் சக்கர நாற்காலி உதவியுடன் மைதானத்தில் இருந்து வெளியேறினார். 3 மணி நேரம் 13 நிமிடம் நடந்த இந்த போட்டியில் ஸ்வெரேவ் பாதியில் வெளியேறியதால் நடால் பைனலுக்கு தகுதி பெற்றார். சிறிது நேரத்தில ஊன்றுகோல் உதவியுடன் ஸ்வெரேவ் களத்திற்கு வந்து ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்து கண்ணீர் மல்க வெளியேறினார். வெற்றிக்கு பின் நடால் கூறுகையில், இது அவருக்கு(ஸ்வெரேவ்) மிகவும் கடினமானது மற்றும் மிகவும் வருத்தமாக இருக்கிறது. அவர் ஒரு நம்பமுடியாத போட்டியை விளையாடிக்கொண்டிருந்தார்.

அவர் ஒரு நல்ல வீரர். கிராண்ட்ஸ்லாம் வெல்வதற்கு அவர் எவ்வளவு போராடுகிறார் என்பது எனக்குத் தெரியும். இந்த நேரத்தில், அவர் மிகவும் துரதிர்ஷ்டவசமாக இருந்தார். அவர் ஒன்று அல்ல, ஒன்றுக்கு மேற்பட்ட கிராண்ட்ஸ்லாம் பட்டம் வெல்வார் என்று நான் உறுதியாக நம்புகிறேன். அவருக்கு எனது வாழ்த்துகள், என்றார். மற்றொரு அரையிறுதியில் 8ம் நிலை வீரரான நார்வேயின் காஸ்பர் ரூட்(25), 20ம் நிலை வீரரான குரோஷியாவின் மரின் சிலிச்(33) மோதினர். இதில் காஸ்பர் ரூட் 3-6, 6-4, 6-2, 6-2 என்ற செட் கணக்கில்வெற்றி பெற்று இறுதிபோட்டிக்குள் நுழைந்தார். ரூட் முதன்முறையாக கிராண்ட்ஸ்லாம் தொடர்ஒன்றில் பைனலுக்குள் நுழைந்துள்ளார்.

நாளை மாலை நடைபெறும் பைனலில், நடால்-காஸ்பர்ரூட் மோதுகின்றனர். நடால் இதுவரை 13முறை பிரெஞ்ச் ஓபன் பட்டம் வென்றுள்ளார். களிமண்தரை நாயகனாக நடால் பிரெஞ்ச் ஓபனில் இதுவரை 111 போட்டிகளில் வென்றுள்ளார். 3ல் மட்டுமே தோற்றுள்ளார். ஒட்டு மொத்தமாக 21 கிராண்ட்ஸ்லாம் வென்று முதல் இடத்தில் உள்ள நடால் நாளை 22வது பட்டம் வெல்வாரா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. இன்று மாலை 6.30 மணிக்கு நடைபெறும் மகளிர் ஒற்றையர் பைனலில் போலந்தின் இகா ஸ்வியாடெக், அமெரிக்காவின் கோகோ காப் மோதுகின்றனர்.

Related Stories: