×

ஆழ்வார்திருநகரி கோயிலில் வைகாசி அவதார திருவிழா கொடியேற்றத்துடன் துவங்கியது

ஸ்ரீவைகுண்டம் : ஆழ்வார்திருநகரி ஆதிநாதர் கோயிலில் வைகாசி அவதார திருவிழா கொடியேற்றத்துடன் துவங்கியது.  ஸ்ரீ வைகுண்டத்தை சுற்றிலும் ஆன்மீக சிறப்புவாய்ந்த நவதிருப்பதி கோயில்கள் அமைந்துள்ளன. இக்கோயில்களில் 9வது ஸ்தலமாக மற்றும் குரு ஸ்தலமாக விளங்கக் கூடிய ஆழ்வார்திருநகரி ஆதிநாதர் கோயிலில் வைகாசி அவதார திருவிழா விமரிசையாக நடைபெறும்.

இந்தாண்டுக்கான வைகாசி அவதார விழாவை முன்னிட்டு நேற்று  காலை 4 மணிக்கு விஸ்வரூபம் 5 மணிக்கு திருமஞ்சனம் 6.15 மணிக்கு நித்தியல் கோஷ்டி 7.15 மணிக்கு கொடிபட்டம் சுற்றி வந்தது. 7.45 மணிக்கு கொடியேற்றம் நடந்தது. விழாவில்  நிர்வாக அதிகாரி  அஜித், தக்கார் கோவலமணிகண்டன், முன்னாள் அறங்காவலர் குழு தலைவர்  ராஜப்பாவெங்கடாச்சாரி உள்பட பக்தர்கள் கலந்து  கொண்டனர்.   

பின்னர் அகோபில மடத்தில் விடையாற்று மண்டகப்படி, திருக்குறுங்குடி மடத்தில் திருமஞ்சனம் கோஷ்டி நடந்தது.  இரவு இந்திர விமானத்தில் நம்மாழ்வார் வீதியுலா நடந்தது.  திருவிழாவை முன்னிட்டு தினசரி காலையில் வீதி புறப்பாடு, மாலையில் புஷ்ப பல்லக்கு, பல்வேறு வாகன சப்பரத்தில் நம்மாழ்வார் வீதியுலா நடக்கிறது.

7ம் தேதி  வைகுண்டம் கள்ளபிரான், நத்தம் எம்இடர்கடிவான், திருப்புளியங்குடி காய்சினிவேந்தபெருமாள், பெருங்குளம், மாயக்கூத்தப்பெருமாள், தென்திருப்பேரை நிகரில் முகில்வண்ணன், தொலைவில்லிமங்கலம் செந்தாமரைகண்ணன், இரட்டைதிருப்பதி தேவர்பிரான், திருக்கோளூர் வைத்தமாநிதி பெருமாள் ஆகியோரை வரவேற்று மங்களாசாசனம் நடக்கிறது. பின்னர் நம்மாழ்வாரை மங்களா சாசசனம் செய்து அவரிடம் இருந்து மதுரகவி ஆழ்வார் பிரசாதங்களை பெற்று கொள்ளுவார்.

மதியம் 11.30 மணிக்கு நம்மாழ்வார் வீதியுலா நடக்கிறது. மாலையில் மண்டபத்தில் எழுந்தருளி திருமஞ்சனம் நடைபெறுகிறது. இரவு 10 மணியளவில் 9 கருடசேவை, நம்மாழ்வார் அன்னவாகனத்திலும் மதுரகவிஆழ்வார் தந்தபல்லக்கில் ரதவீதி உலா நடக்கிறது. வருகிற 11ம் தேதி 9ம் திருவிழாவை முன்னிட்டு தங்க தேரோட்டம் நடக்கிறது.

 12ம் தேதி  காலையில் மாடவீதி புறப்பாடு, பின்னர் சிங்கபெருமாள் சன்னதியில் திருமஞ்சனம், தாமிரபரணி நதியில் தீர்த்தவாரி, பெரிய சன்னதிக்கு எழுந்தருளி கோஷ்டி, தீர்த்த விநியோகம் நடக்கிறது. 13ம்தேதி 11ம் திருவிழா முன்னிட்டு காலை சுவாமி நம்மாழ்வார், மணவாள மாமுனிகள் சன்னதிக்கு எழுந்தருளி கந்தபொடி உத்சவம், திருமஞ்சனம் கோஷ்டி பல்லக்கில் சன்னதிக்கு எழுந்தருளி ஆஸ்தானம் எழுந்தருளல் நடக்கிறது. இரவு வெட்டிவேர் சப்பரத்தில் பொழிந்து நின்றபிரான், சுவாமி நம்மாழ்வார் வீதியுலா, 17ம் தேதி வரை விடையாற்றும் வைபவம் நடக்கிறது. ஏற்பாடுகளை காரிமாறன் கழைகாப்பகம் மற்றும் பக்தர்கள் உபயதாரர்கள்  செய்து வருகின்றனர்.

Tags : Vaikasi incarnate festival ,Alvarthanagi Temple , Srivaikundam, Alwarthirunagari,Aathinathar Temple
× RELATED தண்டுமாரியம்மன் கோயில் சித்திரை...