×

70 மாட்டு வண்டிகளில் 500 பக்தர்கள் ஸ்ரீரங்கம் கோயிலுக்கு வந்து தரிசனம்

திருச்சி : கரூர் ஆர்டி மலையில் இருந்து சுற்றுப்பகுதி கிராமங்களை சேர்ந்த 500க்கும் மேற்பட்ட பக்தர்கள் 70 மாட்டு வண்டிகளில் ஸ்ரீரங்கம் கோயிலுக்கு வந்து சிறப்பு வழிபாடு நடத்தினர். கரூர் மாவட்டம் ஆர்டி மலையை சேர்ந்த கிராம மக்கள், ஸ்ரீரங்கம் நம்பெருமாளை குலதெய்வமாக கொண்டு பரம்பரை பரம்பரையாக வழிபாடு செய்து வருகின்றனர். இந்த கிராம மக்கள் 5 ஆண்டுகளுக்கு ஒருமுறை மாட்டு வண்டியில் வந்து ரங்கம் நம்பெருமாளை வழிபட்டு செல்வது வழக்கம்.

 அதன்படி ஆர்டி மலை, பாறைகிழம், அழகாபூர், கிராமனம்பட்டி கிராமங்களை சேர்ந்த 500க்கும் மேற்பட்ட பக்தர்கள் இரட்டை மாடு பூட்டிய 70 வண்டிகளில் வழிபாடு, அன்னதானத்துக்கு தேவையான பொருட்களுடன் நேற்று முன்தினம் இரவு அங்கிருந்து புறப்பட்டனர்.
இந்நிலையில் நேற்று காலை ஸ்ரீரங்கம் கோயிலுக்கு வந்தடைந்தனர்.

பின்னர் மேலூர் சாலையில் உள்ள தோப்பில் அன்னதானம் வழங்கியதுடன் கொள்ளிடம் ஆற்றங்கரையில் முடி காணிக்கை செலுத்திவிட்டு ஸ்ரீரங்கம் கோயிலுக்கு சென்று நம்பெருமாள், தாயாரை வழிபாடு செய்தனர். இது குறித்து ஆர்டி மலை பக்தர்கள் கூறுகையில், 5 ஆண்டுக்கு ஒருமுறை வைகாசி மாதத்தில் 7 பூசாரிகளிடம் குறி கேட்டுவிட்டு ஊர் பெரியவர்கள் தலைமையில் புறப்பட்டு வந்து வழிபாடு நடத்தி செல்வோம்.

தங்களது பாட்டன், முப்பாட்டன் காலம்தொட்டே இவ்வாறு வழிபாடு செய்வதால் கடவுளின் அனுக்கிரகம் கிடைப்பதோடு சுபிட்சமாக ஒற்றுமையுடன் வாழ்ந்து வருகிறோம் என்றனர். மாட்டு வண்டிகளில் ஆட்டம் பாட்டம் கொண்டாட்டத்துடன் நகர்ப்புறங்களில் பக்தர்கள் வந்ததை நகர்ப்புற மக்கள் ஆச்சரியத்துடன் பார்த்ததோடு தங்களது செல்போனில் புகைப்படங்களையும் எடுத்துக்கொண்டனர்.

Tags : srirangam , Srirangam, Temple
× RELATED ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில்...