×

24-வது கோடைகால காதுகேளாதோருக்கான ஒலிம்பிக் போட்டியில் பதக்கம் வென்ற வீரர், வீராங்கனைகளுக்கு ரூ.1.10 கோடி-க்கான காசோலையை வழங்கினார் முதல்வர் மு.க.ஸ்டாலின்

சென்னை: 24-வது கோடைகால காதுகேளாதோருக்கான  ஒலிம்பிக் போட்டியில் பதக்கங்கள் வென்ற வீரர் மற்றும் வீராங்கனைக்கு 1.10 கோடி ரூபாய்க்கான காசோலைகள் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. மு.க.ஸ்டாலின் அவர்கள் வழங்கினார்.

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. மு. க. ஸ்டாலின் அவர்கள்  இன்று (4.6.2022) தலைமைச் செயலகத்தில், பிரேசில் நாட்டில் நடைபெற்ற 24-வது கோடைகால காதுகேளாதோருக்கான  ஒலிம்பிக் போட்டி 2022-ல் பதக்கங்கள் வென்ற செல்வி ஜெ.ஜெர்லின் அனிகா மற்றும் திரு.பிரித்வி சேகர்  ஆகியோருக்கு 1 கோடியே 10 இலட்சம் ரூபாய்க்கான காசோலைகளை ஊக்கத் தொகையாக வழங்கினார்.

பிரேசில் நாட்டில் 24-வது கோடைகால காதுகேளாதோருக்கான  ஒலிம்பிக் போட்டி-2022 கடந்த 1.05.2022 முதல் 15.05.2022 வரை நடைபெற்றது இப்போட்டியில் இந்திய அணி சார்பில் தமிழ்நாட்டை சேர்ந்த செல்வி ஜெ. ஜெர்லின் அனிகா (வயது 18) இறகுப்பந்து போட்டியில் பங்கேற்று ஒற்றையர் பிரிவு, கலப்பு இரட்டையர் பிரிவு மற்றும் குழுப் போட்டி ஆகியவற்றில் 3 தங்கப் பதக்கங்களை வென்றுள்ளார். மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் செல்வி. ஜெ. ஜெர்லின் அனிகா அவர்களுக்கு 75 இலட்சம் ரூபாய்க்கான காசோலையை ஊக்கத்தொகையாக வழங்கினார்.

செல்வி ஜெ. ஜெர்லின் அனிகா,  மதுரையில் உள்ள அவ்வை மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் 12ஆம் வகுப்பு பயின்று வருகிறார். இவர் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தில் பன்னாட்டு அளவிலான போட்டிகளில் பதக்கங்கள் வெல்வதற்கு ஊக்குவிக்கும் திட்டத்தின் (MISSION INTERNATIONAL MEDALS SCHEME)  கீழ் ஆண்டொன்றுக்கு 10 இலட்சம் ரூபாய் நிதியுதவி பெற்றுவரும் விளையாட்டு வீராங்கனை ஆவார்.   

மேலும், இந்தப்போட்டிகளில் ஆடவருக்கான டென்னிஸ் போட்டியில் இந்தியாவின் சார்பாக பங்குபெற்ற சென்னையைச் சேர்ந்த திரு. பிரித்வி சேகர் (வயது 39) இரட்டையர் பிரிவில் 1 வெள்ளிப்பதக்கமும், ஒற்றையர் பிரிவு மற்றும் கலப்பு இரட்டையர் பிரிவு போட்டிகளில் 2 வெண்கலப்பதக்கமும் என 3 பதக்கங்களை வென்றுள்ளார். மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் திரு. பிரித்வி சேகர் அவர்களுக்கு 35 இலட்சம்  ரூபாய்க்கான காசோலையை ஊக்கத்தொகையாக வழங்கினார்.

இந்நிகழ்ச்சியில்  மாண்புமிகு சுற்றுச் சூழல் - காலநிலை மாற்றத் துறை, இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர் திரு. சிவ. வீ. மெய்யநாதன், தலைமைச் செயலாளர் முனைவர் வெ. இறையன்பு, இ.ஆ.ப., இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை முதன்மைச் செயலர் செல்வி அபூர்வா, இ.ஆ.ப., தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணைய தலைமை செயல் அலுவலர் / உறுப்பினர் செயலர் டாக்டர் கா.ப. கார்த்திகேயன், இ.ஆ.ப. வீரர், வீராங்கனையின் குடும்பத்தினர் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.


Tags : Chief Minister ,MK Stalin ,24th Summer Deaf Olympics , Chief Minister MK Stalin presents check for Rs 1.10 crore to athletes who won a medal at the 24th Summer Olympics for the Deaf
× RELATED முன்னாள் அமைச்சர் இந்திரகுமாரி...