×

உசிலம்பட்டி அருகே 400 ஆண்டு பழமையான வளரி வீரன் நடுகல் கண்டெடுப்பு

*வடபழஞ்சியில் பழங்கால கல்வெட்டு கிடைத்தது

உசிலம்பட்டி/தி.குன்றம் : உசிலம்பட்டி அருகே புத்தூர் மலை அடிவாரத்தில் கள்ளபட்டி கிராமம் உள்ளது. கிராமத்தின் வடக்கு பகுதியில் அமைந்துள்ள விநாயகர் கோவில் அருகே பழங்கால கற்சிலை ஒன்றை மக்கள் வழிபட்டு வருகின்றனர். இந்த கற்சிலையை தொல்லியல் ஆய்வாளர் காந்திராஜன், வரலாற்று ஆய்வாளர் அருண்குமார் தலைமையிலான குழுவினர் நேற்று ஆய்வு செய்தனர். இதில் கற்சிலை 400 ஆண்டுகள் பழமையானது என கண்டுபிடிக்கப்பட்டது.

ஆய்வாளர்கள் கூறுகையில், இந்த கற்சிலை நடுகல் வடிவில் சுமார் 3.5 அடி உயரத்திலும், 2.8 அடி அகலத்திலும் உள்ளது. இந்த நடுகல் உள்ளூர் மக்களால் பட்ட வினையன் என அழைக்கப்படுகிறது. நடுகல்லின் தலை உச்சியில் ஒரு பக்க கொண்டையுடனும், கழுத்தணிகள் மற்றும் இடது கையில் வேலும், வலது கையில் வளரித்தடியும் உள்ள ஒரு வீரனின் சிற்பம் அமைந்துள்ளது.

இப்பகுதியில் வாழ்ந்த இரண்டு இனக்குழு மக்களிடையே நடைபெற்ற போரின் போது உயிரிழந்த வீரனின் அடையாளமாக அமைக்கப்பட்ட சிற்பமாக இருக்கலாம். இன்றளவும் வெளியூர்களிலிருந்து மக்கள் வந்து வழிபட்டு செல்கின்றனர். ஆங்கிலேயர் ஆட்சி காலத்தில் தடை செய்யப்பட்ட வளரி என்ற தொன்மையான ஆயுதங்களை இப்பகுதி மக்கள் பயன்படுத்தி வந்துள்ளனர் என்பதற்கு சான்றாக கோவிலாங்குளம் அருகே வளரி கோவில் அமைந்துள்ளது.

 அதுபோல இந்த பகுதியில் அடுத்தடுத்து வளரி சார்ந்த தொல்லியல் எச்சங்கள் கண்டறியப்பட்டு வருகின்றன என்றனர். இதேபோல் நாகமலை புதுக்கோட்டை அருகே வடபழஞ்சி கிராமத்தில் உள்ள பாண்டி விநாயகர் கோயிலின் முன்பு பழங்கால கல்வெட்டு இருப்பது தெரியவந்தது. இதனை தொல்லியல் மூத்த அறிஞர் சாந்தலிங்கம் மற்றும் வரலாற்று ஆர்வலர்கள் ராமகிருஷ்ணன், அறிவு செல்வம், தேவி ஆகியோர் ஆய்வு செய்தனர். இதில் 175 செமீ உயரமும் 1 அடி நீளம் மற்றும் அகலம் கொண்ட செவ்வக வடிவிலான கல்வெட்டு 15ம் நூற்றாண்டை சேர்ந்தது.

கல்வெட்டில் தமிழ் எழுத்துக்களில் 21 வரிகள் உள்ளன. மகாபலி வாணாதிராயர் என்பவர் காலத்தில் இக்கிராமம் சர்வ மானியமாக கொடுக்கப்பட்டதாக செய்தி உள்ளது. இதன் மேற்புறத்தில் சூலமும் அதற்கு கீழே மயில் ஒன்று வாயில் பாம்பை கவ்வியபடி உள்ளது. எனவே இங்குள்ள முருகன் கோயிலுக்கு உரிய எல்லை கல்லாக இருக்கலாம் என ஆய்வாளர்கள் தெரிவித்தனர்.

Tags : Usilampatti , Usilampatti, Tiruparankundram, Valari Veeran nadukal
× RELATED கடைகளை கையகப்படுத்துவதற்கு எதிர்ப்பு...