அடுத்தடுத்து நடக்கும் படுகொலைகள் அமெரிக்காவில் ஆயுத சட்டத்தை கடுமையாக்க பைடன் அழைப்பு: துப்பாக்கி வாங்கும் வயதை 21 ஆக உயர்த்த ஆலோசனை

வாஷிங்டன்: ``அமெரிக்காவில் அதிகரித்து வரும் துப்பாக்கி வன்முறை கலாசாரம் கவலை அளிக்கிறது. எனவே, ஆயுத சட்டத்தை கடுமையாக்க எம்பி.க்கள் முன்வர வேண்டும்,’ என்று அதிபர் பைடன் தெரிவித்தார்.

அமெரிக்காவில் துப்பாக்கிச்சூடு சம்பவங்கள் கடந்த சில மாதங்களாக தொடர்ந்து அதிகரித்து வருகின்றன. கடந்த புதன்கிழமை துல்சா நகரில் 4 பேர், கடந்த மாதம் 25ம் தேதி ராப் ஆரம்பப் பள்ளியில் 19 குழந்தைகள், 2 ஆசிரியர்கள் உள்பட 21 பேர், மே 14ம் தேதி, நியூயார்க்கில் பப்பல்லோ பகுதியில் 10 கருப்பினத்தவர்கள் என அடுத்தடுத்து நடந்த துப்பாக்கிச்சூடு சம்பவங்களில் கொல்லப்பட்டனர். இது, அதிபர் பைடனுக்கு கவலை அளித்துள்ளது.

இந்நிலையில், வெள்ளை மாளிகையில் இருந்தபடி பைடன் நேற்று ஆற்றிய உரையில் கூறியதாவது:அமெரிக்காவில் அதிகரித்து வரும் துப்பாக்கி வன்முறை கலாசாரம் கவலை அளிக்கிறது. துப்பாக்கி போன்ற ஆயுதங்களை பயன்படுத்துவதை தடை செய்ய வேண்டும்.  துப்பாக்கி வாங்குவதற்கான வயதை 18ல் இருந்து 21 ஆக உயர்த்த வேண்டும். கைத்துப்பாக்கி வாங்குபவர்களின் பின்னணி பற்றிய விசாரணைகளை அதிகப்படுத்த வேண்டும். இன்னும் எத்தனை படுகொலைகளை பார்த்துக் கொண்டு  இருக்கப் போகிறோம்?இது யாருடைய உரிமையையும் பறிப்பதல்ல.  நமது குழந்தைகளை, குடும்பத்தினரை, சமுதாயத்தை பாதுகாக்கும் நடவடிக்கையாகும். பள்ளிகள், தேவாலயங்கள், மருத்துவமனைகளை கொலைக் களங்களாக மாற்றும் துப்பாக்கி வன்முறையில் இருந்து பாதுகாக்கவும், கட்டுப்படுத்தவும் ஆயுத சட்டத்தை கடுமையாக்க வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.

Related Stories: