×

மகளிர் ஒற்றையர் பைனலில் இன்று நம்பர் 1 ஸ்வியாடெக்குடன் கோகோ காப் மோதல்

பிரெஞ்ச்: பிரெஞ்ச் ஓபன்  மகளிர் ஒற்றையர் பிரிவு பைனலில் முன்னாள் சாம்பியனும் தற்போதைய நம்பர் 1 வீராங்கனையுமான இகா ஸ்வியாடெக்குடன் (போலந்து), அமெரிக்காவின் இளம் நட்சத்திரம் கோகோ காப் இன்று மோதுகிறார்.நடப்பு சீசனில் இதுவரை தொடர்ச்சியாக 34 வெற்றிகளைக் குவித்து மகளிர் ஒற்றையர் பிரிவில் அசைக்க முடியாத சக்தியாக விஸ்வரூபம் எடுத்து வரும் ஸ்வியாடெக்(21வயது), அரையிறுதியில் டாரியா கசட்கினாவை 6-2, 6-1 என நேர் செட்களில் மிக எளிதாக வீழ்த்தி பிரெஞ்ச் ஓபன் பைனலுக்கு 2வது முறையாக  முன்னேறினார்.மற்றொரு அரையிறுதியில்  கோகோ காப் (18வயது, 23வது ரேங்க்), இத்தாலியின் மார்டினா டிரெவிசானை 6-3, 6-1 என நேர் செட்களில் வென்று முதல் முறையாக பைனலுக்கு தகுதி பெற்றார்.இன்று நடைபெறும் இறுதிப் போட்டியில் ஸ்வியாடெக் - கோகோ காப் மோத உள்ளனர்.

ஆஸி.யின் ஆஷ்லி பார்டி திடீரென ஓய்வு பெற்றதையடுத்து, 2வது இடத்தில் இருந்த ஸ்வியாடெக் நம்பர் 1 வீராங்கனையானார். ஆனாலும், தனது அபாரமான ஆட்டத்தால் முதல் இடம் வகிக்க முற்றிலும் தகுதியானவர் என்பதை நிரூபிக்க அவர் தவறவில்லை. இந்த ஆண்டு அவர் பங்கேற்ற கத்தார் ஓபன், பாரிபா ஓபன்,  மயாமி ஓபன், ஸ்டுட்கார்ட் ஓபன், இத்தாலி ஒபனில் சாம்பியன் பட்டங்களை வென்றுள்ளார். பில்லி ஜீன் கிங்  தகுதிச் சுற்று ஆட்டங்களையும் சேர்த்து இதுவரை தொடர்ந்து 34 ஆட்டங்களில்  வெற்றியை சுவைத்துள்ளார்.எதிர்பார்த்தது போலவே பைனலுக்கு முன்னேறியுள்ள இகா, 2வது முறையாக பிரெஞ்ச் ஓபன் கோப்பையை முத்தமிடும் வாய்ப்பு மிகப் பிரகாசமாகவே உள்ளது. அதே சமயம்   முதல் முறையாக  கிராண்ட் ஸ்லாம் பைனலுக்கு முன்னேறியுள்ள கோகோவையும் குறைத்து மதிப்பிட முடியாது. இளமைக்கு ஏற்ற வேகத்துடன் அசத்தலாக விளையாடி வருகிறார். மகளிர் இரட்டையர் பிரிவிலும் பைனலுக்கு முன்னேறி அசத்தியுள்ள கோகோ இன்று ஸ்வியாடெக்குக்கு பெரும் சவாலாக இருப்பார் என்பதில் சந்தேகமில்லை. நேருக்கு நேர்: இருவரும் ஏற்கனவே 2 முறை மோதியுள்ளதில், ஸ்வியாடெக் 2-0 என முன்னிலை வகிக்கிறார். 2021 இத்தாலி ஓபன் அரையிறுதியிலும், தொடர்ந்து 2022 மயாமி ஓபன் காலிறுதியிலும்  கோகோவை வீழ்த்தியுள்ளார்.

Tags : Coco Cop ,Swiatek , Coco Cop clashes with No. 1 Swiatek today in the women's singles final
× RELATED பாரிபா ஓபன் டென்னிஸ் ஸ்வியாடெக் அசத்தல்