×

அதிமுகவுக்கு வி.பி.துரைசாமி அறிவுரை சொல்ல வேண்டியதில்லை: பாஜவுக்கு எடப்பாடி பதிலடி

சென்னை: அதிமுக சார்பில் மாநிலங்களவை உறுப்பினர்களாக தேர்வு செய்யப்பட்ட சி.வி.சண்முகம் மற்றும் தர்மர் ஆகிய இருவரும் நேற்று தலைமை செயலகத்தில் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி முன்னிலையில் வெற்றி சான்றிதழை பெற்றுக்கொண்டனர்.

பின்னர், எடப்பாடி பழனிசாமி நிருபர்களுக்கு அளித்த பேட்டி:
அதிமுக சார்பில் அறிவிக்கப்பட்ட இரு ராஜ்யசபா வேட்பாளர்கள் சி.வி.சண்முகம், தர்மர் ஆகியோர் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இருவருக்கும் அதிமுக சார்பில் வாழ்த்துகளை தெரிவித்துக்கொள்கிறேன். அதிமுக சட்டமன்றத்தில் எவ்வாறு செயல்படுகிறது என்பது ஊடகத்திற்கும், நாட்டு மக்களுக்கும் தெரியும்.

வி.பி.துரைசாமி அதிமுகவிற்கு சான்றளிக்க வேண்டிய அவசியமில்லை. அதோடு பாஜவின் சட்டமன்ற கட்சி தலைவர் எப்படி பேசுகிறார் என்பது நாட்டு மக்களுக்கு தெரியும். வி.பி.துரைசாமி எங்களுக்கு அறிவுரை சொல்ல வேண்டிய அவசியமில்லை. நான் 48 ஆண்டு காலம் ஒரே இயக்கத்தில் இருந்து கொண்டிருக்கிறேன். இவ்வாறு கூறினார்.

பாஜவுக்கு ஓபிஎஸ் ஆதரவு
சில தினங்களுக்கு முன்பு அதிமுக முன்னாள் அமைச்சர் பொன்னையன் அதிமுக இடத்தை பாஜ கைப்பற்ற முயற்சி செய்கிறது. அவர்கள் தமிழக மக்களின் நலனுக்கு எதிராக செயல்பட்டு வருகிறார்கள் என்று பாஜ பற்றி கருத்து தெரிவித்து இருந்தார். இதுகுறித்து, நேற்று தலைமை செயலகத்தில் அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் நிருபர்களிடம் கூறும்போது, ‘பாஜ பற்றி பொன்னையன் கூறியது அவருடைய சொந்த கருத்து’ என்றார்.

எடப்பாடிபோல அதிமுக உறுப்பினர்களுக்கு ஆதரவாக பதில் சொல்லாமல், பாஜவுக்கு ஆதரவாக ஓ.பன்னீர்செல்வம் பதில் கூறியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதேநேரத்தில் ஒரு முக்கியமான கருத்தில் கூட இரு தலைவர்களும் ஒரே கொள்கையில் இல்லாததும் அதிமுக தொண்டர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Tags : GP Duraisamy ,Baja , AIADMK, VP Thuraisamy, BJP, Edappadi retaliate
× RELATED உதவியாளர்களிடம் ரூ.4 கோடி பறிமுதல்...