×

சென்னை மக்களின் குடிநீர் தேவைக்காக பூண்டி ஏரியில் இருந்து 831 கனஅடி நீர் திறப்பு

சென்னை: சென்னை மக்களின் குடிநீர் தேவைக்காக பூண்டி ஏரியில் இருந்து 831 கனஅடி வீதம் தண்ணீர் திறக்கப்பட்டு வருவதால் புழல், செம்பரம்பாக்கம் ஏரிகளின் நீர்மட்டம் அதிகரித்து வருகிறது. சென்னை நகர மக்களின் குடிநீர் தேவைகளை சென்னையை சுற்றியுள்ள 5 ஏரிகள் நிறைவேற்றி வருகிறது. இந்த ஏரிகளில் நீர்இருப்பு குறைந்தால் மக்கள் குடிநீர் பிரச்னையை சந்திக்க வேண்டி வரும். ஆனால் கடந்த ஆண்டு இறுதியில் பெய்த கனமழையால் இந்த ஏரிகள் அனைத்தும் நிரம்பி வழிந்தன. இதனால் தற்போது கடுமையான கோடை காலத்திலும் நீர்மட்டம் பெரிய அளவில் குறையவில்லை.

 இதனால் கோடை காலத்திலும் சென்னை மக்களுக்கு சீரான குடிநீர் கிடைத்து வருகிறது. இதற்கு காரணம், கடந்த வாரங்களில் பெய்த கோடை மழை ஒருபுறம் இருந்தாலும், மறுபுறம் கிருஷ்ணா நதி நீர் பங்கீடு திட்டத்தின்படி தமிழகத்துக்கான தண்ணீரை கண்டலேறு அணையில் இருந்து ஆந்திர அரசு கடந்த மாதம் 8ம்தேதி முதல் திறந்து விட்டுள்ளது தான். தற்போது வரை கிருஷ்ணா கால்வாயில் தொடர்ந்து தண்ணீர் வருவதால் பூண்டி ஏரியின் நீர்மட்டம் தொடர்ந்து உயர்ந்து வருகிறது.   

 தற்போது வரை தமிழக எல்லையான தாமரைகுப்பம் ஜீரோ பாயிண்டுக்கு நேற்றைய நிலவரப்படி 552 கன அடி வீதம் தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. இதனால் பூண்டி ஏரியின் நீர்மட்டம் நேற்று 1095 மில்லியன் கனஅடியாக உள்ளது. தொடர்ந்து நீர்வரத்து இருப்பதால் சென்னை மக்களின் குடிநீர் தேவைக்காக பூண்டி ஏரியில் இருந்து புழல், செம்பரம்பாக்கம் ஏரிகளுக்கு இணைப்பு கால்வாய் வழியாக வினாடிக்கு நேற்றைய நிலவரப்படி 831 கனஅடி வீதம் தண்ணீர் திறந்து விடப்பட்டு வருகிறது.  இதனால் இந்த ஏரிகளின் நீர்மட்டமும் உயர்ந்து வருகிறது.

நேற்றைய நிலவரப்படி புழல் ஏரியின் நீர்மட்டம் 3080 மில்லியன் கனஅடியாகவும், செம்பரம்பாக்கம் ஏரியின் நீர்மட்டம் 2999 மில்லியன் கனஅடியாகவும் உள்ளது. மேலும் சென்னைக்கு குடிநீர் வழங்கக்கூடிய இந்த 5 ஏரிகளில் மொத்தமாக 7,751 மில்லியன் கனஅடி நீர் இருப்பு உள்ளது.

Tags : Boondi Lake ,Chennai , Chennai, people need drinking water, Boondi Lake, cubic feet of water
× RELATED தொழில்நுட்ப கோளாறால் சென்னையில்...