3 பதவிகளை வகிக்கும் எடப்பாடி பழனிச்சாமி, ஓ.பன்னீர்செல்வம்: அதிமுகவில் கலகத்துக்கு தயாராகும் மூத்த தலைவர்கள்; பொதுக்குழுவில் அதிகாரத்தை பரவலாக்க வலியுறுத்த முடிவு.!

சென்னை: அதிமுகவில் எடப்பாடி பழனிச்சாமி, ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் 3 பதவிகளை வகித்து வருவதால் ஒருவருக்கு ஒரு பதவி என்ற அடிப்படையில் பொறுப்புகளை பிரித்து வழங்க வேண்டும் என்று இரண்டாம் கட்டத் தலைவர்கள் போர்க்கொடி தூக்கியுள்ளனர். இதனால் பொதுக்குழுவில் காரசார விவாதம் நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதிமுகவில் உள்கட்சித் தேர்தல்கள் முடிந்துள்ளன. கிளை கழக தேர்தல் முதல், கட்சியின் ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் தேர்தல் வரை நடந்து முடிந்துள்ளன. இந்த தேர்தல்களுக்கு தேர்தல் ஆணையமும் ஒப்புதல் வழங்கி விட்டது. அதேநேரத்தில், கட்சியின் பொதுக்குழுவில் அதற்கு ஒப்புதல் பெற வேண்டும். இதற்காக வருகிற 23ம் தேதி பொதுக்குழு நடைபெறும் என்று கட்சித் தலைமை அறிவித்துள்ளது.

அதேநேரத்தில் கட்சிக்குள் நிலவும் கோஷ்டிப்பூசல், தலைவர்களுக்கிடையே உள்ள மோதல்கள், பாஜகவுக்கு ஆதரவாக இருப்பதால் கட்சி காணாமல் போவது உள்ளிட்ட பல்வேறு பிரச்னைகளை எழுப்ப 2ம் கட்டத் தலைவர்கள் முடிவு செய்துள்ளனர். அதேநேரத்தில் கட்சியின் ஒருங்கிணைப்பாளராக உள்ள ஓ.பன்னீர்செல்வம், பொருளாளர் மற்றும் எதிர்க்கட்சித் துணை தலைவர் ஆகிய பொறுப்புகளையும் வகித்து வருகிறார். இதனால் அவர் மட்டும் 3 பதவிகளை தன்னிடம் வைத்துள்ளார். அதேபோல, கட்சியின் இணை ஒருங்கிணைப்பாளராக உள்ள எடப்பாடி பழனிச்சாமியும், தலைமை நிலையச் செயலாளர், ஆட்சி மன்றக்குழு உறுப்பினர், எதிர்க்கட்சி தலைவர் என 4 பதவிகளை வகித்து வருகிறார். இவர்கள் இருவருமே 3 பதவிகளை வகித்து வருகின்றனர்.

அதேபோலத்தான் கட்சியின் மூத்த தலைவர்களாக கே.பி.முனுசாமி, வைத்திலிங்கம், ஆகியோர் துணை ஒருங்கிணைப்பாளர்கள், துணை பொதுச் செயலாளர்களாகவும் உள்ளனர். இதனால் கட்சிக்குள் மூத்த தலைவர்களிடம் மட்டுமே அதிக பதவிகளும், அதிகாரங்களும் குவிந்து கிடப்பதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. இதனால் பொறுப்புகளை அவர்கள் ராஜினாமா செய்து விட்டு 2ம் கட்டத் தலைவர்களுக்கு கொடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்து வருகின்றனர். இதனால் பன்னீர்செல்வத்திடம் உள்ள பொருளாளர் பதவிக்கு வேலுமணியும், தங்கமணியும் குறி வைத்துள்ளனர். அவர்கள் தீவிரமாக தனது ஆதரவாளர்கள் மூலம் தலைவர்களுக்கு கோரிக்கை வைக்கத் தொடங்கி விட்டனர். அதேபோல, முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கரும் தனக்கு பொறுப்புகளை வழங்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்து வருகிறார்.

அவருக்கு ஆதரவாக சில முன்னாள் அமைச்சர்கள், எம்எல்ஏக்கள் களம் இறங்கியுள்ளனர். இதனால் இந்தப் பிரச்னைகளை அதிமுக பொதுக்குழுவில் எழுப்ப 2ம் கட்டத் தலைவர்கள் முடிவு செய்துள்ளனர். மேலும் மாவட்டச் செயலாளர்கள் பலர் அமைப்புச் செயலாளராகவும் உள்ளனர். குறிப்பாக முன்னாள் அமைச்சர்கள் பெரும்பாலானவர்கள் 2 பதவிகளை வகித்துள்ளனர். இதனால், ஒருவருக்கு ஒரு பதவி என்ற திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என்றும் அவர்கள் கோரிக்கை எழுப்பத் தொடங்கி விட்டனர். இது அதிமுகவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதனால் பொதுக்குழுவில் பூகம்பம் வரும் என்கின்றனர் கட்சியின் முன்னணி நிர்வாகிகள்.

Related Stories: