அமெரிக்காவில் துப்பாக்கி வாங்கும் வயதை 21 ஆக அதிகரிக்க திட்டம்: அதிபர் ஜோ பைடன் பேச்சு

வாஷிங்டன்: அமெரிக்காவில் துப்பாக்கி வாங்குவதற்கான வயதை 21 ஆக அதிகரிக்க திட்டமிட்டுள்ளதாக அதிபர் ஜோ பைடன் தெரிவித்துள்ளார். அமெரிக்காவில் சமீபகாலமாக பொது இடங்களில் துப்பாக்கிச் சூடு சம்பவங்கள் அதிகரித்து வருவது அந்நாட்டு மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. கடந்த வாரம் டெக்சாசில் உள்ள  ராப் தொடக்கப் பள்ளியில் நடந்த துப்பாக்கிச்சூட்டில் 19 குழந்தைகள், 2 ஆசிரியர்கள் கொல்லப்பட்டனர். அதற்கு இரு வாரங்களுக்கு முன்பு, டெக்சாசில் உள்ள பப்பல்லோ பகுதியில் உள்ள சூப்பர் மார்க்கெட்டில் நடத்தப்பட்ட துப்பாக்கிச்சூட்டில் 10 கருப்பின மக்கள் கொல்லப்பட்டனர்.

தொடர்ச்சியாக ஓக்லஹோமாமாகாணம், துல்சா நகரில் உள்ள புனித பிரான்சிஸ் மருத்துவமனை வளாகத்தில் உள்ள நடாலி கட்டிடத்தில் புகுந்த மர்மநபர் துப்பாக்கிச்சூடு நடத்தினர். இதில் 4 பேர் பலியாகினர். துப்பாக்கிச்சூடு நடத்தியவரும் தன்னைத்தானே சுட்டு கொண்டு இறந்தார். இந்நிலையில் வெள்ளை மாளிகையில் செய்தியாளர்களை சந்தித்த அதிபர் ஜோ பைடன், அமெரிக்காவில் அதிகரித்து வரும் துப்பாக்கி வன்முறை கலாச்சாரம் கவலை அளிப்பதாக கூறியுள்ளார்.

துப்பாக்கி பயன்படுத்துவதை தடை செய்ய வேண்டும் என்றும் முடியவில்லை என்றால் அதை வாங்குவதற்கான வயதை உயர்த்த வேண்டும் என்றும் குறிப்பிட்டுள்ளார். ஒருவர் துப்பாக்கி வாங்குவதற்கான வயதை 18ல் இருந்து 21 ஆக அதிகரிக்கலாம் என்று கூறிய ஜோ பைடன், அதிக திறன் கொண்ட துப்பாக்கிகளை தடை செய்ய வேண்டும் என்று தெரிவித்துள்ளார். துப்பாக்கி உற்பத்தியாளர்களுக்கு கடும் கட்டுப்பாடுகளை விதிக்க வேண்டும் எனவும் இது யாருடைய உரிமையையும் பறிப்பதற்காக அல்ல எனவும் ஜோ பைடன் கூறியுள்ளார்.

Related Stories: