×

“நகரங்களின் தூய்மைக்கான மக்கள் இயக்கம்” தீவிர தூய்மைப் பணி மற்றும் விழிப்புணர்வு முகாம்களை தொடங்கி வைத்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்..!!

சென்னை: “நகரங்களின் தூய்மைக்கான  மக்கள்  இயக்கம்”  தீவிர தூய்மைப் பணி மற்றும் விழிப்புணர்வு முகாம்களை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் இன்று சென்னை, இராயபுரம், தங்கசாலையில்  நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை சார்பில் “நகரங்களின் தூய்மைக்கான மக்கள் இயக்கம்” - தீவிர தூய்மைப் பணி மற்றும் விழிப்புணர்வு முகாம்களை தொடங்கி வைத்தார்.

நகரங்களின் தூய்மைக்கான மக்கள் இயக்கம்

 தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் ஆலோசனையின்படி, 2022-2023 ஆண்டிற்கான நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறையின் மானியக் கோரிக்கையில், சுத்தமான, பசுமையான மற்றும் நீடித்த சுற்றுச்சூழலை உறுதிசெய்யும் பொருட்டு நகரங்களில் பெருமளவிலான மக்கள் பங்கேற்புடன், ஒவ்வொரு மாதமும் இரண்டாம் மற்றும் நான்காம் சனிக்கிழமைகளில் தீவிரத் தூய்மைப் பணிகள் மற்றும் விழிப்புணர்வு முகாம்கள் (Cleanliness drive) நடத்த “நகரங்களின் தூய்மைக்கான மக்கள் இயக்கம் (People’s Movement for Clean Cities)” தொடங்கப்படும் என அறிவிக்கப்பட்டது.

இந்தத் தீவிர தூய்மைப் பணி மற்றும் விழிப்புணர்வு முகாம்கள்,  தன்னார்வ தொண்டு நிறுவனங்கள், குடியிருப்போர் நலச்சங்கங்கள், தேசிய சமுதாய நலப்பணி மற்றும் தேசிய பசுமை படையை சேர்ந்த பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்கள், தன்னார்வலர்கள் மற்றும் பொதுமக்களின் பங்களிப்புடன்  செயல்படுத்தப்படுகிறது.

பெருநகர சென்னை மாநகராட்சி உட்பட 21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள், 490 பேரூராட்சிகள் ஆகிய பகுதிகளில் இரண்டாவது சனிக்கிழமைகளில் மிகப்பெரிய அளவில் இத்தூய்மைப் பணி மேற்கொள்ளப்படும்.  

தேர்ந்தெடுக்கப்பட்ட மக்கள் பிரதிநிதிகள் மற்றும் பிரபலங்களைக் கொண்டு, மக்களுக்கு தூய்மையின் அவசியத்தை பற்றி வலியுறுத்தும் விதமாக பூங்காங்களில் கூட்டங்கள் நடத்திடவும், அவர்களை கொண்டு தூய்மை மற்றும் சுத்தம் தொடர்பான துண்டு பிரச்சாரங்கள் விநியோகிக்கவும், மஞ்சப்பையின் அவசியத்தை உணர்த்த மஞ்சப்பைகளை பொதுமக்களுக்கு வழங்கி விழிப்புணர்வு ஏற்படுத்தவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

வணிகவரித்துறை வாயிலாக அனைத்து கடை உரிமையாளர்கள், வணிகர்கள் மற்றும் வணிக நிறுவனங்கள் இத்தூய்மைப் பணியில் முழுமையாக பங்கெடுக்க வலியுறுத்தவும், தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்தின் வாயிலாக ஒருமுறை பயன்படுத்தக்கூடிய பிளாஸ்டிக்கினால் ஏற்படும் தீமைகளை விளக்கி, மீண்டும் மஞ்சப்பை உபயோகப்படுத்தும் முக்கியத்துவத்தை வலியுறுத்தவும், வேளாண் விற்பனை மற்றும் வேளாண் வணிகத்துறை வாயிலாக  அதன் கட்டுப்பாட்டில் உள்ள உழவர் சந்தைகளில் தினந்தோறும் சேகரமாகும் காய்கறி கழிவுகளை, உழவர்சந்தைகளிலேயே மக்கச்செய்து குப்பையாக மாற்றும் பணிகளை துவங்கிடவும் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது.  

மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் நகரங்களின் தூய்மைக்கான மக்கள் இயக்கம் மற்றும் விழிப்புணர்வு பிரச்சாரத்தை தொடங்கி வைத்தார். பெருநகர சென்னை மாநகராட்சிக்குட்பட்ட இராயபுரம் மண்டலம், தங்கசாலை மேம்பாலப் பூங்கா அருகில் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் இன்று “நகரங்களின் தூய்மைக்கான மக்கள் இயக்கம்” - தீவிரத் தூய்மைப் பணியினை தொடங்கி வைத்தார்.  அதனைத் தொடர்ந்து, மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் தலைமையில் மாணவ, மாணவியர்கள் மாநகராட்சி பணியாளர்கள் மற்றும் பொதுமக்கள் நகரங்களின் தூய்மை குறித்த உறுதிமொழியை ஏற்றனர்.

தொடர்ந்து  மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் பசுமையான சுற்றுச் சூழலை ஏற்படுத்தும் வகையில் தங்கசாலை மேம்பாலத்திற்கு கீழ் உள்ள இடத்தில் நகர்ப்புற அடர்வனம் அமைப்பதை தொடங்கும் விதமாக  மரக்கன்றுகளை  நட்டார்கள். பின்னர், விழிப்புணர்வு ஊர்வலத்தை கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

அதனைத் தொடர்ந்து, மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள்  தீவிர தூய்மைப் பணி மற்றும் இல்லங்களில் குப்பைகளை மக்கும்,  மக்காத குப்பைகளாக பிரித்து தூய்மைப் பணியாளர்களிடம் வழங்குவது குறித்த விழிப்புணர்வை பொதுமக்களுக்கு ஏற்படுத்தும் விதமாக, விழிப்புணர்வு பதாகைகளை ஏந்தி, மாணவ மாணவியர்களுடன் பெருநகர சென்னை மாநகராட்சி, இராயபுரம் மண்டலம், பாஷ்யகாரலு தெருவில் உள்ள குடியிருப்பு பகுதிகளுக்கு நடந்து சென்று  விழிப்புணர்வு துண்டு பிரசுரங்களை பொதுமக்களுக்கு வழங்கினார்.

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் “நகரங்களின் தூய்மைக்கான மக்கள் இயக்கம்” - தீவிர தூய்மைப் பணியை தொடங்கி வைத்த அதேநேரத்தில், தமிழகம் முழுவதும் பொதுமக்கள் அதிகம் பயன்படுத்தக் கூடிய பகுதிகளான பூங்காக்கள், பள்ளி வளாகங்கள், பேருந்து நிறுத்தங்கள், மார்க்கெட் பகுதிகள், வணிக வளாகங்கள் மற்றும் பொதுக் கழிப்பிடங்கள் உள்ள அமைவிடங்களில் சம்பந்தப்பட்ட உள்ளாட்சி பிரதிநிதிகள் மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி அலுவலர்கள் மற்றும் பணியாளர்களுடன்  இணைந்து தீவிரத் தூய்மைப் பணியினை மேற்கொள்கிறார்கள்.

இந்நிகழ்ச்சியில், மாண்புமிகு நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் திரு.கே.என்.நேரு, மாண்புமிகு பொதுப்பணித் துறை அமைச்சர்  திரு. எ.வ. வேலு, மாண்புமிகு இந்து சமயம் மற்றும் அறநிலையத்துறை அமைச்சர் திரு. பி.கே.சேகர்பாபு, பெருநகர சென்னை மாநகராட்சி மேயர் திருமதி ஆர்.பிரியா, நாடாளுமன்ற உறுப்பினர் திரு. கலாநிதி வீராசாமி, சட்டமன்ற உறுப்பினர்கள் திரு. ஆர்.மூர்த்தி, திரு. ஆர்.டி.சேகர், திரு. ஜே.ஜே. எபிநேசர், துணை மேயர் திரு.மு. மகேஷ்குமார், நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை கூடுதல் தலைமைச் செயலாளர் திரு.சிவ் தாஸ் மீனா, இ.ஆ.ப., அரசு முதன்மைச் செயலாளர் / பெருநகர சென்னை மாநகராட்சி ஆணையர்  திரு.ககன்தீப் சிங் பேடி, இ.ஆ.ப., சென்னைப் பெருநகர் குடிநீர் வழங்கல் மற்றும் கழிவுநீரகற்று வாரியத்தின் மேலாண்மை இயக்குநர் திரு. சி. விஜயராஜ்குமார், இ.ஆ.ப., மாமன்ற நிலைக்குழுத் தலைவர்கள், மண்டலக் குழுத் தலைவர்கள், மாமன்ற உறுப்பினர்கள் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Tags : Chief Minister ,MK Stalin ,People's Movement for the Cleanliness of the , City, Cleaning, Awareness Camp, MK Stalin
× RELATED புத்தகங்கள் மனிதச் சமுதாயத்தைத்...