ஆரணியில் பள்ளி மாணவன் பலி எதிரொலி அசைவ ஓட்டலுக்கு ₹5 ஆயிரம் அபராதத்துடன் நோட்டீஸ்-ஆய்வு செய்த அதிகாரிகள் அதிரடி

ஆரணி :திருவண்ணாமலை மாவட்டம், ஆரணி டவுன் மோகனன் தெருவை சேர்ந்தவர் கணேஷ்(42), தனியார் பள்ளி உரிமையாளர். இவரது மூத்த மகன் திருமுருகன்(17). பிளஸ் 2 படித்து வந்தார். கடந்த 24ம் தேதி பொதுத்தேர்வு முடிந்ததும், மாணவன் திருமுருகன் தனது நண்பர்களுடன் சேர்ந்து, ஆரணி காந்தி சாலையில் உள்ள அசைவ ஓட்டலில் தந்தூரி சிக்கன் சாப்பிட்டுள்ளார். வீட்டிற்கு வந்ததும் திருமுருகனுக்கு திடீரென வாந்தி, மயக்கம் ஏற்பட்டு உடல் நிலை பாதிக்கப்பட்டது.

பின்னர், ஆரணியில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அழைத்து சென்று பரிசோதனை செய்ததில், அவருக்கு புட் பாய்சன் ஏற்பட்டது தெரியவந்தது. தொடர்ந்து, கடந்த 29ம் தேதி வேலூர் அரசு மருத்துவமனைக்கு அழைத்து செல்லும் வழியில், திருமுருகன் பரிதாபமாக இறந்தார். இதையடுத்து, சம்பந்தப்பட்ட ஓட்டல் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவரது தந்தை கணேஷ் நேற்று முன்தினம் கலெக்டர், ஆர்டிஓ மற்றும் டிஎஸ்பியிடம் புகார் செய்தார்.

இந்நிலையில், நேற்று நகராட்சி ஆணையாளர் தமிழ்செல்வி, சுகாதார ஆய்வாளர் ராமச்சந்திரன் மற்றும் அதிகாரிகள் சம்பந்தப்பட்ட அசைவ ஓட்டலில் திடீர் ஆய்வு செய்தனர். அப்போது, ஓட்டல் சுகாதாரமாக உள்ளதா? தரமான முறையில் உணவு தயாரிக்கப்படுகிறதா?  காலாவதியான உணவு பொருட்கள் பயன்படுத்தப்படுகிறதா? என ஆய்வு செய்தனர். பின்னர், தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் பயன்படுத்துவதை கண்டறிந்த ஆணையாளர், அவற்றை பறிமுதல் செய்து, ஓட்டலுக்கு ₹5 ஆயிரம் அபராதம் விதித்தார்.

இதேபோல், ஆரணி உணவு பாதுகாப்பு அலுவலர் கலைஷ்குமார் மற்றும் அதிகாரிகள் ஓட்டலில் திடீர் ஆய்வு செய்தனர். அப்போது, தரமற்ற இறைச்சி கழிவுகளை பறிமுதல் செய்து அழித்தனர்.

மேலும், ஓட்டல் சுகாதாரமற்ற முறையில் இருந்ததால் நோட்டீஸ் வழங்கினர். பின்னர், அதே ஓட்டலுக்கு சொந்தமான மற்றொரு கடைக்கு சென்று ஆய்வு செய்தனர். தொடர்ந்து, ஆரணி பகுதியில் உள்ள பல்வேறு அசைவ, சைவ ஓட்டல்களில் உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.

இதுகுறித்து மாவட்ட உணவு பாதுகாப்பு நியமன அலுவலர் ராமகிருஷ்ணனிடம் கேட்டபோது, ஆரணியில் உள்ள அசைவ ஓட்டலில் பள்ளி மாணவன் தந்தூரி சிக்கன் சாப்பிட்டு இறந்ததாக சமூக வலைதளங்களில் பரவியது. எனவே, கடந்த 30ம் தேதி அந்த ஓட்டலில் உணவு மாதிரிகள் சேகரித்து, சேலம் ஆய்வகத்திற்கு  அனுப்பி வைத்துள்ளோம். ஆய்வு முடிவுகள் வந்த பிறகே முழு விவரம் தெரியவரும். தவறு கண்டறியப்பட்டால் ஓட்டல் உரிமையாளர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.

இதுதொடர்பாக தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறோம்’ என்றார்.இந்நிலையில், நேற்று மாலை மாவட்ட உணவு பாதுகாப்பு அலுவலர் ராமகிருஷ்ணன் உத்தரவின் பேரில், ஆரணி உணவு பாதுகாப்பு அலுவலர் கலைஷ்குமார் தலைமையில் அதிகாரிகள் அந்த ஓட்டலை தற்காலிகமாக பூட்டி, அவசர உத்தரவு ஆணையை வழங்கினர். மேலும், ஓட்டலில் அதிகாரிகள் ஆய்வு செய்த, விசாரணை அறிக்கையை சென்னைக்கு அனுப்பி வைத்துள்ளனர். மறு உத்தரவு வரும் வரை ஓட்டலை திறக்கக் கூடாது என உரிமையாளரை அதிகாரிகள் எச்சரித்தனர்.

உஷாரான ஓட்டல் நிர்வாகம்

மாணவன் திருமுருகன் ஓட்டலில் ட்ரீட் வைத்து  உணவு சாப்பிட்ட வீடியோ மற்றும் ஓட்டலின் புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாக பரவியது. இதற்கிடையில், மாணவன் பலியான சம்பவம் அறிந்து, உணவு பாதுகாப்பு அதிகாரிகள் ஆய்வு செய்ய வருவார்கள் என ஓட்டல் நிர்வாகம் உஷாரானது. உடனே ஓட்டலை மூடிவிட்டு, `இன்று அமாவசை என்பதால் விடுமுறை’ என நோட்டீஸ் ஒட்டி விட்டு, பிரிட்ஜில் வைத்திருந்த சிக்கன், மட்டன் மற்றும் ஏற்கனவே தயாரித்து வைத்திருந்த அசைவ உணவுகள் ஆகியவற்றை அப்புறப்படுத்தி அழித்ததாகவும், ஓட்டல் முழுவதையும் பணியாளர்களை வைத்து சுத்தம் செய்ததாகவும் கூறப்படுகிறது.

Related Stories: