×

உதகை, ஏற்காடு போல் சென்னையில் முதன்முறையாக பிரமாண்ட மலர் கண்காட்சி...நுழைவுக் கட்டணம் பெரியவர்களுக்கு ரூ.50 என நிர்ணயம்

சென்னை: சென்னையில் பிரமாண்ட மலர் கண்காட்சியை உதயநிதி ஸ்டாலின் தொடங்கி வைத்தார். முன்னாள் முதல்வர் கலைஞரின் பிறந்தநாள் அரசு விழாவாக கொண்டாடப்படும் என்று சமீபத்தில் சட்டசபையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார். அதன்படி, இன்று கலைஞரின் பிறந்தநாள் அரசு விழாவாக கொண்டாடப்பட இருக்கிறது. மேலும், கலைஞரின் பிறந்தநாளில் சென்னையில் மலர் கண்காட்சிக்கு அரசு ஏற்பாடு செய்தது. அதன்படி, கலைவாணர் அரங்கில் இன்று முதல் 5ம் தேதி வரை 3 நாட்கள் மலர் கண்காட்சி நடத்தப்பட உள்ளது.

இந்நிலையில் ஊட்டி, கொடைக்கானல், மைசூரு போன்ற இடங்களில் இருந்து கொண்டுவரப்பட்ட வண்ண மலர்கள் சென்னை கலைவாணர் அரங்கிற்கு வந்து சேர்ந்தது. ஆர்க்கிட், ஆந்தூரியம், துலிப் பூ உள்ளிட்ட பல அரியவகை பூக்கள் மற்றும் பூச்செடிகள் 200க்கும் மேற்பட்ட வகைகளில் கண்ணை கவரும் மலர்கள் கண்காட்சியில் இடம்பெற்றுள்ளது. கண்காட்சியில் மலர் அலங்காரங்கள், காய்கறியால் செதுக்கப்பட்ட உருவங்கள், செல்பி எடுப்பதற்கான பிரத்யேக இடங்கள் அமைக்கப்பட்டுள்ளது. மேலும், கண்காட்சியில் மலர்களால் ஆன மயில், குதிரை, சிங்கம், கரடி சிற்பங்கள் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன.

கலைவாணர் அரங்கில் சிறந்த புகைப்பட கண்காட்சிக்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. பொதுமக்கள் அனுப்பும் சிறந்த புகைப்படங்கள் மலர்க் கண்காட்சியில் வைக்கப்பட உள்ளது. கலைவாணர் அரங்கில் காலை 9 மணி முதல் இரவு 8 மணி வரை மலர்கண்காட்சியை பொதுமக்கள் கண்டுகளிக்கலாம் என தோட்ட கலைத் துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மலர் கண்காட்சிக்கான நுழைவுக் கட்டணம் பெரியவர்களுக்கு ரூ.50,மாணவர்களுக்கு ரூ.20 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.  தமிழக அரசு சார்பில் சென்னையில் மலர் கண்காட்சி நடப்பது இதுவே முதன்முறை என்பது குறிப்பிடத்தக்கது. மலர்கண்காட்சிக்காக கலைவாணர் அரங்கம் விழாக்கோலம் பூண்டுள்ளது.

Tags : Chennai , Udagai, Yercaud, Chennai, Flower, Exhibition
× RELATED சென்னை ரெட்டேரி அருகே புத்தகரத்தில்...