99வது பிறந்தநாள்... கலைஞரின் சிலைக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் மரியாதை.. வசனகர்த்தா ஆரூர்தாஸுக்கு கலைத்துறை வித்தகர் விருதை வழங்கினார்!!

சென்னை: மறைந்த முன்னாள் முதலமைச்சர் கலைஞரின் 99வது பிறந்தநாளையொட்டி, சென்னை ஓமந்தூரார் அரசினர் தோட்ட வளாகத்தில் அமைந்துள்ள அவரது திருவுருவச்சிலைக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் மலர்த்தூவி மரியாதை செலுத்தினார். முன்னாள் முதல்வர் கலைஞரின் பிறந்தநாள் அரசு விழாவாக கொண்டாடப்படும் என்று சமீபத்தில் சட்டசபையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார். அதன்படி, இன்று கலைஞரின் 99வது பிறந்தநாள் அரசு விழாவாக கொண்டாடப்பட இருக்கிறது. இதைத் தொடர்ந்து சென்னை, அண்ணா அறிவாலயத்தில் முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி உருவப்படத்திற்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் மலர் தூவி மரியாதை செலுத்தினார். அண்ணா அறிவாலயத்தை தொடர்ந்து முரசொலி அலுவலகத்திலும், கலைஞரின் உருவப்படத்திற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மரியாதை செலுத்தினார்.

மேலும் திரைப்பட வசனகர்த்தா ஆரூர்தாஸுக்கு கலைஞர் நினைவு கலைத்துறை வித்தகர் விருதை வழங்கினார் முதல்வர் மு.க.ஸ்டாலின். தியாகராய நகரில் உள்ள ஆரூர்தாஸின் வீட்டுக்கு நேரில் சென்று முதல்வர் மு.க.ஸ்டாலின் விருதை வழங்கினார். முன்னணி நடிகர்கள், நடிகைகள் நடித்த 1,000 படங்களின் உரையாடலில் அழுத்தமான பங்கு வகித்தவர் ஆரூர் தாஸ். பாசமலர், விதி, வேட்டைக்காரன், அன்பே வா உள்ளிட்ட படங்களுக்கு வசனம் எழுதியுள்ளார் ஆரூர் தாஸ்.நடிகருக்கென்று தனிப்பாணி கொள்ளாமல் கதாபாத்திரம் அறிந்து வசனம் எழுதி செழுமை சேர்த்தவர் இவர் ஆவார். தொடர்ந்து, சென்னை, ஓமந்தூரார் அரசினர் தோட்ட வளாகத்தில் அமைந்துள்ள அவரது  திருவுருவச்சிலைக்கு  தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மாலை அணிவித்து மலர்தூவி மரியாதை செலுத்தினார். இந்த நிகழ்ச்சியில் அண்ணா பல்கலைக்கழக மாணவர்கள் உருவாக்கிய டிரோன் மூலம் கலைஞர் சிலை மீது மலர்கள் தூவப்பட்டன.

Related Stories: