×

பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ் நடால்-ஸ்வெரவ், சிலிச்-கஸ்பர் மோதல்

பாரிஸ்:  பிரான்ஸ் தலைநகர் பாரிசில் நடைபெறும் பிரெஞ்ச் ஓபன் கிராண்ட் ஸ்லாம் போட்டி இறுதிக் கட்டத்தை நெருங்கியுள்ளது. ஆடவர் ஒற்றையர் பிரிவில் இன்று அரையிறுதி ஆட்டங்கள் நடைபெறுகின்றன. பிரெஞ்ச் ஓபனில் 13முறை சாம்பியனான  ஸ்பெயின் வீரர் ரபேல் நடால்(5வது ரேங்க்) 15வது முறையாக  அரையிறுதியில் இன்று களம் காண உள்ளார்.  அவரை எதிர்த்து ஜெர்மனி வீரர் அலெக்சாண்டர் ஸ்வெரவ்(3வது ரேங்க்) களம் காண இருக்கிறார். இவர் தொடர்ந்து 2வது முறையாக அரையிறுதியில் களம் காணுகிறார்.கடந்த முறை அரையிறுதியில்  ஸ்வெரவை வீழ்த்திய  சிட்சிபாஸ் 4வது சுற்றிலேயே நடையை கட்டி விட்டார். அதேபோல் கடந்த  ஆண்டு அரையிறுதியில்  தன்னை வீழ்த்திய ஜேகோவிச்சை இந்த முறை காலிறுதியிலேயே வெளியேற்றி விட்டார் நடால்.

அதனால தடையின்றி 14வது முறையாக இறுதி ஆட்டத்துக்கு முன்னேற நடால் முயற்சி செய்வார். அதற்கு ஸ்வெரவ் கடும் சவாலாக இருப்பார். இந்த இருவரும் சர்வதேச அளவில் 9 ஆட்டங்களில் நேருக்கு நேர் சந்தித்துள்ளனர். அவற்றில் நடால் 6 முறையும், ஸ்வெரவ் 3 முறையும் வென்றுள்ளனர். மற்றொரு அரையிறுதி ஆட்டத்தில்  நார்வே வீரர் கஸ்பர் ரூட்(8வது ரேங்க்),  குரோஷியா வீரர் மாரின் சிலிச்(23வது ரேங்க்) இருவரும் களம் காண உள்ளனர். இருவருக்கும் இதுதான் முதல் பிரெஞ்ச் ஓபன் அரையிறுதி. ஆனால் 33 வயதான சிலிச் ஏற்கனவே  ஆஸி,  விம்பிள்டன் கிராண்ட் ஸ்லாம்களில் இறுதி ஆட்டம் வரை முன்னேறியுள்ளார். கூடவே 2014ம் ஆண்டு யுஎஸ் ஓபன் சாம்பியன் பட்டத்தையும் வென்றுள்ளார்.நீண்ட நாட்களுக்கு  பிறகு வேகம் பெற்றுள்ள சிலிச்  முன்னணி வீரர்களான   ரஷ்யாவின்  மெத்வதேவ், ரூபலேவ் ஆகியோரை வென்று காலிறுதியை தாண்டியுள்ளார்.   கஸ்பருக்கு இதுதான் முதல் கிராண்ட் ஸ்லாம் அரையிறுதி. இந்த ஆண்டு மயாமி ஓபனில் 2வது இடம் பிடித்ததுதான் 23 வயதான கஸ்பரின் சர்வதேச போட்டியில் அதிகபட்ச சாதனை. அதனால் இன்று சிலிச் கை ஓங்க வாய்ப்பு உள்ளது. ஆனால் இந்த இருவரும் மோதிய 2 ஆட்டங்களிலும் கஸ்பர்தான் வெற்றி வாகை சூடியுள்ளார்.

Tags : French Open ,Nadal ,Sverrev ,Cilic ,Caspar , French Open tennis Nadal-Sverrev, Cilic-Caspar clash
× RELATED ஆஸி. ஓபன் டென்னிஸ் காயத்தால் விலகினார் நடால்