ஆரணியில் பள்ளி மாணவன் பலி எதிரொலி அசைவ ஓட்டலுக்கு அபராதத்துடன் நோட்டீஸ்

ஆரணி, : ஆரணியில் அசைவ சுகாதாரமற்று இருந்ததால் உணவு பாதுகாப்பு அலுவலர் நோட்டீஸ் வழங்கினார். திருவண்ணாமலை மாவட்டம், ஆரணி காந்தி சாலையில் உள்ள அசைவ ஓட்டலில் தந்தூரி சிக்கன் சாப்பிட்ட பிளஸ் 2 மாணவன் திருமுருகன்(17), புட் பாய்சன் ஏற்பட்டு, கடந்த 29ம் தேதி வேலூர் அரசு மருத்துவமனைக்கு அழைத்து செல்லும் வழியில், இறந்தார். இதையடுத்து, சம்பந்தப்பட்ட ஓட்டல் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவரது தந்தை கணேஷ் நேற்று முன்தினம் கலெக்டர், ஆர்டிஓ மற்றும் டிஎஸ்பியிடம் புகார் செய்தார். இந்நிலையில், நேற்று நகராட்சி ஆணையாளர் தமிழ்செல்வி, சுகாதார ஆய்வாளர் ராமச்சந்திரன் மற்றும் அதிகாரிகள் அந்த அசைவ ஓட்டலில் திடீர் ஆய்வு செய்தனர். அங்கு தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் பயன்படுத்துவதை கண்டறிந்த ஆணையாளர், அவற்றை பறிமுதல் செய்து, ரூ5 ஆயிரம் அபராதம் விதித்தார்.

இதேபோல், ஆரணி உணவு பாதுகாப்பு அலுவலர் கலைஷ்குமார் மற்றும் அதிகாரிகள் திடீர் ஆய்வு செய்து, தரமற்ற இறைச்சி கழிவுகளை பறிமுதல் செய்து அழித்தனர். மேலும், ஓட்டல் சுகாதாரமற்ற முறையில் இருந்ததால் நோட்டீஸ் வழங்கினர். பின்னர், அதே ஓட்டலுக்கு சொந்தமான மற்றொரு கடைக்கு சென்று ஆய்வு செய்தனர். தொடர்ந்து, ஆரணி பகுதியில் உள்ள பல்வேறு அசைவ, சைவ ஓட்டல்களில் உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.இதுகுறித்து மாவட்ட உணவு பாதுகாப்பு நியமன அலுவலர் ராமகிருஷ்ணன் கூறுகையில், பள்ளி மாணவன் தந்தூரி சிக்கன் சாப்பிட்டு இறந்ததாக சமூக வலைதளங்களில் பரவியது. எனவே, கடந்த 30ம் தேதி அந்த ஓட்டலில் உணவு மாதிரிகள் சேகரித்து, சேலம் ஆய்வகத்திற்கு  அனுப்பி வைத்துள்ளோம். ஆய்வு முடிவுகள் வந்த பிறகே முழு விவரம் தெரியவரும். தவறு கண்டறியப்பட்டால் ஓட்டல் உரிமையாளர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்’ என்றார்.

Related Stories: