மது போதை தகராறு எதிரொலி லாரி ஏற்றி 2 வாலிபர்கள் படுகொலை? டிரைவர், கிளீனர் கைது

சென்னை: செங்குன்றம் அருகே மது போதை தகராறில் லாரி ஏற்றி 2 வாலிபர்கள் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இதுதொடர்பாக டிரைவர், கிளீனர் ஆகிய 2 பேரை கைது செய்து போலீசார் விசாரித்து வருகின்றனர். செங்குன்றம் அடுத்த வடபெரும்பாக்கம், மாதவரம் நெடுஞ்சாலையில் கனரக லாரிகளை பார்க்கிங் செய்யும் யார்டுகள் உள்ளது. இங்கு டில்லி, உத்தரபிரதேசம், பஞ்சாப் உட்பட பல வடமாநிலங்களில் இருந்து சென்னைக்கு பொருட்களை ஏற்றி வரும் கனரக லாரிகள்  நிறுத்தப்படுவது வழக்கம். இந்த பகுதியில் செங்குன்றத்தை சேர்ந்த ராஜேஸ் என்பவருக்கு சொந்தமான திறந்தவெளி யார்டில், நேற்று முன்தினம் இரவு வடபெரும்பாக்கம், விநாயகபுரம் பகுதியை சேர்ந்த கமலகண்ணன் (36), நவீன் (36), வடகரை பகுதியை சேர்ந்த குமரன் (34) ஆகிய 3 பேரும், அங்கு நிறுத்தப்பட்டிருந்த ஒரு லாரியின் பின்புறம் கீழே அமர்ந்து மது அருந்தியபடி பேசிக்கொண்டு இருந்தனர்.

அப்போது, அந்த லாரியின் டிரைவர் மற்றும் கிளீனரிடம், ‘சாப்பிடுவதற்கு ஏதாவது இருக்கிறதா’, என கமலக்கண்ணனும், குமரனும் கேட்டுள்ளனர். அவர்கள் இல்லை, என கூறியுள்ளனர். அதற்கு கமலக்கண்ணனும், குமரனும் தகாத வார்த்தையால் லாரி டிரைவரை பேசியதாக கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த டிரைவர் கன்னையா லால், ‘‘ என் லாரியின் கீழ் உட்கார்ந்து கொண்டு என்னையே திட்டுகிறீர்களா. எழுந்திருங்கள், லாரியை பின்னோக்கி எடுக்க வேண்டும்,’’ என அவர்களிடம் கூறியுள்ளார். ஆனால், 3 பேரும் எழுந்து செல்லாமல், அங்கே உட்கார்ந்தபடியே மது அருந்தியுள்ளனர். இதனால், இரு தரப்புக்கும் இடையே மீண்டும் தகராறு ஏற்பட்டுள்ளது.

அப்போது, அந்த மூவரும் அங்கிருந்த கல்லை எடுத்து, லாரியின் கண்ணாடி மீது வீசிவிட்டு, இங்கிருந்து செல்ல முடியாது, எனக்கூறினர். மேலும் அந்த இடத்தை விட்டு எழுந்திருக்காமல் அதே இடத்தில் அமர்ந்து தொடர்ந்து மது அருந்தியுள்ளனர். இதனால், ஆத்திரமடைந்த டிரைவர் கன்னையா லால், லாரியை வேகமாக பின்னோக்கி இயக்கி மூவர் மீதும் ஏற்றியுள்ளார். இதில், கமலக்கண்ணன், குமரன் ஆகியோர் உடல்  நசுங்கி சம்பவ இடத்திலேயே பலியாகினர். நவீன் படுகாயமடைந்தார். பின்னர் டிரைவர், லாரியை திருப்பி சிறிது தூரம் ஓட்டிச் சென்று நிறுத்திவிட்டு, கிளீனருடன் தலைமறைவானார். இதுபற்றி அறிந்த அப்பகுதி மக்கள் யார்டில் திரண்டு, அங்கு நிறுத்தப்பட்டிருந்த 5 லாரிகளின் கண்ணாடிகளை அடித்து நொறுக்கினர்.

தகவலறிந்த செங்குன்றம் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று, படுகாயமடைந்த நவீனை மீட்டு ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். பின்னர், கமலக்கண்ணன், குமரன் சடலங்களை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அதே மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆவடி போலீஸ் கமிஷனர் சந்தீப்ராய் ரத்தோர் உத்தரவின் பேரில், துணை கமிஷனர் மகேஷ், உதவி கமிஷனர்கள் முருகேசன், தட்சிணாமூர்த்தி, இன்ஸ்பெக்டர்கள் ரமேஷ், கொடிராஜ் உள்ளிட்ட போலீசார் அங்கு சென்று விசாரணை நடத்தினர். மேலும் அசம்பாவிதங்களை தவிர்க்க போலீசார் குவிக்கப்பட்டனர். இதுகுறித்து செங்குன்றம் போலீசார் வழக்கு பதிந்து விசாரித்தனர். அதில், உத்தரபிரதேசத்தை சேர்ந்த டிரைவர் கன்னையா லால் (55), கிளீனர் சிரிஷ்குமார் (50) ஆகியோர், லாரி ஏற்றி 2 பேரை கொன்றதும், இவர்களும் மது போதையில் இருந்ததும் தெரியவந்தது. இது தொடர்பாக அவர்களை கைது செய்து போலீசார் விசாரித்து வருகின்றனர். லாரியும் பறிமுதல் செய்யப்பட்டது. இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

* பால்ய நண்பர்கள்

உயிரிழந்த  கமலக்கண்ணன், குமரன் ஆகிய இருவரும் சிறு வயதில் இருந்தே நண்பர்கள். ஒன்றாக ஒரே பள்ளியில் படித்துவிட்டு, பின்னர் டிராவல்ஸ் வைத்து குடும்பம் நடத்தி வந்துள்ளனர். இருவருக்கும் திருமணமாகி, குழந்தைகள் உள்ளன. ஒரே நேரத்தில் இவர்கள் இறந்த சம்பவம் அவர்களது குடும்பத்தினர் மற்றும் நண்பர்களிடையே மிகுந்த சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

Related Stories: