திருவண்ணாமலையில் இன்று 3வது நாளாக விவசாயிகள் காத்திருப்பு போராட்டம்

திருவண்ணாமலை: திருவண்ணாமலையில் யூரியா மற்றும் உர தட்டுப்பாடு போக்க நடவடிக்கை எடுக்கக்கோரி  விவசாயிகள் இன்று 3வது நாளாக தொடர்ந்து காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். திருவண்ணாமலை மாவட்டத்தில், உரம் மற்றும் யூரியா தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாகவும், கூடுதல் விலைக்கு விற்பனை செய்யப்படுவதாகவும் விவசாயிகள் தரப்பில் புகார்  தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக ஏற்கனவே பல போராட்டங்களையும் நடத்தி உள்ளனர்.

இந்நிலையில், தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தினர் இந்த கோரிக்கைகைளுக்கு தீர்வு காண வலியுறுத்தி, திருவண்ணாமலையில் உள்ள வேளாண் இணை இயக்குநர் அலுவலகம் முன் நேற்று முன்தினம் காத்திருப்பு போராட்டத்தை தொடங்கினர். அதில், சங்கத்தின் மாவட்ட தலைவர் பலராமன் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர். ஆனால், வேளாண் இணை இயக்குநர் முருகன் நேற்று முன்தினம் பணி ஓய்வு பெற்றதால், அவரும் மற்ற அதிகாரிகளும் விவசாயிகளிடம் பேச்சுவார்த்தை நடத்த வரவில்லை எனக்கூறப்படுகிறது. எனவே, நீண்டநேரம் காத்திருந்த விவசாயிகள், அலுவலகம் எதிரில் பந்தல் அமைத்து காத்திருப்பு போராட்டத்தை தொடர்ந்தனர்.

2வது நாளாக நேற்று நடந்த போராட்டத்தில் 30க்கும் மேற்பட்ட விவசாயிகள் கலந்துகொண்டனர். தொடர்ந்து இன்று 3வது நாளாக போராட்டம் நீடிக்கிறது. அவர்களுக்கான உணவு அதே இடத்தில் சமைக்கப்படுகிறது. போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகளுக்கு ஆதரவாக சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த விவசாயிகள் இன்று காலை சிற்றுண்டியும், மதிய உணவுக்கான சமையல் பொருட்களும் வாகனங்களில் கொண்டு வந்து வழங்கினர்.மாவட்ட அளவிலான உயரதிகாரிகள் நேரில் வந்து பேசினால்தான் போராட்டம் கைவிடப்படும் என்பதில் விவசாயிகள் உறுதியாக இருப்பது குற்பிடத்தக்கது.

Related Stories: