×

வேலூர் மாநகராட்சி பகுதியில் முடங்கி போன நம்ம டாய்லெட் திட்டம்: பல லட்சங்கள் செலவிட்டும் பயன்படுத்த முடியாத அவலம்

வேலூர்: வேலூர் மாநகராட்சி பகுதியில் பல லட்சம் செலவிட்டு செயல்படுத்திய நம்ம டாய்லெட் திட்டம் பயன்படுத்தாமலே முடங்கியது. திறந்தவெளி கழிப்பிடத்தை தடுத்து, மக்களை நோயில் இருந்து பாதுகாக்க நகர் பகுதிகளில் ‘நம்ம டாய்லெட்’ திட்டம் கொண்டு வரப்பட்டது. இத்திட்டத்தின்கீழ் மாநகராட்சி மற்றும் நகராட்சி பகுதிகளில் பல்வேறு இடங்களில் நம்ம டாய்லெட் அமைக்கப்பட்டன. பல லட்சம் ரூபாயில் அமைக்கப்பட்ட இந்த கழிப்பறைகள் தண்ணீர் வசதி இல்லாதது, முறையாக பராமரிக்காதது போன்ற காரணங்களால் பயன்பாடின்றி உள்ளன. அதிகாரிகளும் பல ஆண்டுகளாக கண்டுகொள்ளவில்லை.

இந்நிலையில் வேலூர் மாநகராட்சியிலும் சில ஆண்டுகளுக்கு முன்பு நகரத்தின் மையப்பகுதியில் பொதுமக்கள் அதிகமாக வந்து செல்லும் இடங்களில் நம்ம டாய்லெட் கழிப்பறை அமைக்கப்பட்டது. ஆனால் இந்த திட்டம் பயன்பாட்டிற்கு கொண்டு வராமலேயே முடங்கியது. இதனால் பல இடங்களில் சுகாதார சீர்கேடு நிலவுகிறது. இங்குள்ள மாநராட்சி கழிப்பறையில் கட்டணமாக ரூ.5 வசூலிக்கப்படுவதாக கூறப்படுகிறது. இதனால் பஸ் நிலையங்களில் பயணிகள் பேருந்து நிலைய சுற்றுச்சுவர் பகுதியிலேயே சிறுநீர் கழிக்கின்றனர். இதன் காரணமாக எப்போதும் துர்நாற்றத்தின் பிடியிலேயே பேருந்து நிலையம் இருக்கிறது. இதனால் சுகாதார சீர்கேடு ஏற்பட்டுள்ளது.

பொதுமக்கள் இலவசமாக பயன்படுத்துவதற்காக ‘நம்ம டாய்லெட்’ திட்டத்தின் மூலம் பல லட்சம் மதிப்பில் டாய்லெட் ஷெட்கள் வழங்கப்பட்டுள்ளன. இவற்றை அவசியமான இடத்தில் நிறுவுவதற்கு பதிலாக யாருமே இல்லாத இடத்தில் வைக்கப்பட்டுள்ளது. இதனால் உபயோகமின்றி வீணாகி உள்ளது. மக்கள் வரிப்பணம் பல லட்சங்கள் வீணாக்கப்பட்டுள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. எனவே நல்ல நிலையில் உள்ள நம்ம டாய்லெட் கழிவறைகளை பொதுமக்கள் அதிகமாக கூடும் இடங்களில் வைத்து பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் என்றும் பழுதானவற்றை சரி செய்யவும் கோரிக்கை எழுந்துள்ளது.

Tags : Vellore Corporation , Vellore Corporation, Our Toilet Project, Unusable Shame
× RELATED வேலூர் மாநகராட்சி சர்கார் தோப்பில் ₹68...