ஏப்ரல், மே மாதங்களில் ஊட்டி அரசு தாவரவியல் பூங்காவை 7.32 லட்சம் சுற்றுலா பயணிகள் ரசிப்பு

ஊட்டி: ஏப்ரல், மே மாதங்களில் ஊட்டி அரசு தாவரவியல் பூங்காவை 7 லட்சத்து 32 ஆயிரத்து 465 சுற்றுலா பயணிகள் பார்த்து ரசித்துள்ளனர். ஊட்டி வரும் சுற்றுலா பயணிகளில் 90 சதவீதம் பேர் அரசு தாவரவியல் பூங்காவிற்கு வந்துச் செல்கின்றனர். கடந்த 2019ம் ஆண்டு ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் ஊட்டி அரசு தாவரவியல் பூங்காவிற்கு 10 லட்சத்து 49 ஆயிரத்து 956 பேர் வந்திருந்தனர்.

இந்நிலையில், கொரோனாவால் கடந்த இரு ஆண்டுகளாக ஊட்டிக்கு கோடை காலங்களில் சுற்றுலா பயணிகள் வருவதற்கு தடை விதிக்கப்பட்டது. கொரோனா பாதிப்பு குறைந்த நிலையில், கடந்த மார்ச் மாதம் முதல் ஊட்டி வரும் சுற்றுலா பயணிகள் எண்ணிக்கை படிப்படியாக உயர்ந்தது. இம்முறை கடந்த ஏப்ரல் மாதம் 2 லட்சத்து 21 ஆயிரத்து 643 பேரும், மே மாதத்தில் 5 லட்சத்து 10 ஆயிரத்து 325 பேர் என மொத்தம் 7 லட்சத்து 32 ஆயிரத்து 465 சுற்றுலா பயணிகள் ஊட்டி தாவரவியல் பூங்காவை கண்டு ரசித்துள்ளனர்.

இது கடந்த 2019ம் ஆண்டை காட்டிலும் 3 லட்சம் குறைவே. மே மாதம் அரசு பள்ளிகளில் தேர்வு நடந்ததாலும், 10, 11 மற்றும் 12ம் வகுப்பு பொதுத் தேர்வு நடந்ததாலும் மற்றும் மழை காரணமாக சுற்றுலா பயணிகள் வருகை குறைந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

Related Stories: