வடசென்னை பகுதிகளில் நகை பெட்டியில் வைத்து போதை பவுடர் விற்பனை: போலீஸ் விசாரணையில் அம்பலம்

தண்டையார்பேட்டை: வடசென்னை பகுதிகளில் வாட்ஸ்அப் மூலம் ஆர்டர் பெற்று, நகை பெட்டியில் கேட்டமைன் உள்ளிட்ட பல்வேறு போதை பவுடர்களை பதுக்கி வைத்து விற்பனை செய்து வந்திருப்பது போலீசாரின் விசாரணையில் அம்பலமானது. வடசென்னை பகுதிகளில் போதை மாத்திரை, கேட்டமைன் உள்ளிட்ட பல்வேறு போதைபொருள் பவுடர் திருட்டுத்தனமாக கொண்டு வந்து ஒரு கும்பல் விற்பனை செய்து வருவதாக வடக்கு மண்டல காவல்துறை இணை ஆணையர் ரம்யபாரதிக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

இதைத் தொடர்ந்து 3 தனிப்படை அமைத்து, போதை பவுடர் கடத்தும் கும்பலை தீவிரமாக கண்காணித்து வந்தனர். இதுதொடர்பாக கடந்த வாரம் போதைபொருள் கடத்தும் கும்பலை சேர்ந்த ஒருசிலரை தனிப்படை போலீசார் கைது செய்து விசாரித்தனர். அவர்கள் கொடுத்த தகவலின்பேரில், நேற்று திருவல்லிக்கேணி பகுதியில் தனியார் விடுதிகள், வீடுகளில் தனிப்படை போலீசார் அதிரடி சோதனை நடத்தினர். அங்கு ஒரு வீட்டில் பதுங்கியிருந்த 5 பேர் கும்பலை பிடித்தனர்.

அவர்களிடம் இருந்து ரூ.80 லட்சம் மதிப்பிலான 2 கிலோ கேட்டமைன் போதை பவுடர் பாக்கெட், 5 செல்போன்களை போலீசார் பறிமுதல் செய்தனர். பின்னர் அவர்களை துறைமுகம் உதவி ஆணையர் வீரகுமாரிடம் ஒப்படைத்தனர். வடக்கு கடற்கரை காவல்நிலைய ஆய்வாளர் ராஜகுமார் பிடிபட்ட 5 பேரிடமும் தீவிரமாக விசாரித்தார். விசாரணையில், அவர்கள் திருவல்லிக்கேணி பகுதியை சேர்ந்த ஜாகீர் உசேன் (52), முகம்மது சுல்தான் (59), நாசர் (55), சுன்னத் (42), அசாருதீன் (39) எனத் தெரியவந்தது.

அவர்கள் கொடுத்த தகவலின்பேரில் புளியந்தோப்பு ரியாஸ் உசேன் (23), திருவல்லிக்கேணி சித்திக் முகம்மது (34), மடிப்பாக்கம் யாசின் மில்பர் (20), ஏழுகிணறு அமித் அபிக் (23) ஆகிய 4 பேரை நேற்று தனிப்படை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 7 செல்போன், 2 பைக் பறிமுதல் செய்யப்பட்டது. அவர்களை ஆர்.கே.நகர் காவல் நிலையம் கொண்டு வந்து விசாரித்தனர். விசாரணையில், இவர்களும் கேட்டமைன் போதை பவுடர் விற்பனை செய்யும் கும்பலை சேர்ந்தவர்கள் எனத் தெரியவந்தது. பின்னர் கைது செய்யப்பட்ட 9 பேரையும் நேற்றிரவு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

  இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறியிருப்பதாவது: சென்னை பாரிமுனை, ராஜாஜி சாலை பகுதியில் நேற்று கையில் நகைப்பெட்டியுடன் சுற்றி திரிந்த 3 பேரை தனிப்படை போலீசார் மடக்கி பிடித்தனர். அந்த பெட்டியை சோதனை செய்ததில், நகை பெட்டியின் மேல்புறம் வரிசையாக வளையல்களை அடுக்கிவைத்து, அதற்கு கீழே போதைபவுடர் பதுக்கி வைத்து, வடசென்னை பகுதிகளில் விற்பனை செய்து வந்திருப்பது தெரியவந்தது.

தொடர் விசாரணையில், இக்கும்பல் ஒரு வாட்ஸ்அப் குழு அமைத்து, இதன்மூலம் சர்வதேச போதைபொருள் கும்பலுடன் இணைந்து இந்தியா முழுவதும் போதைபொருள் விற்பனை செய்து வந்துள்ளனர். மேலும், இலங்கை வழியாக இக்கும்பல் ஆஸ்திரேலியாவுக்கு போதை பவுடர் கடத்தி செல்ல இருப்பதும் தெரியவந்தது. வடசென்னை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் வாட்ஸ்அப் மூலம் போதைபவுடர் கேட்பவர்களுக்கும் இக்கும்பலை சேர்ந்த ஒருசிலர் விற்பனை செய்து வந்துள்ளனர்.

  இதைத் தொடர்ந்து, அவர்களிடம் கைப்பற்றிய செல்போன்களில் உள்ள நம்பர்களை வைத்து, இவர்களுக்கு யார், யாருடன் தொடர்பு உள்ளது என்பது உள்பட பல்வேறு கோணங்களில் விசாரணையை முடுக்கிவிட்டிருக்கிறோம் என போலீசார் தெரிவித்தனர்.

Related Stories: