
சென்னை:15 வது ஐபிஎல் கிரிக்கெட் தொடர் கடந்த மே 29ம் தேதியுடன் நிறைவடைந்தது. இதன் இறுதிப்போட்டியில் ராஜஸ்தானை வீழ்த்தி குஜராத் சாம்பியன் பட்டம் வென்றது. ஆனால் இந்த தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் லீக் சுற்றில் 14 போட்டிகளில் 4ல் மட்டும் வெற்றி பெற்று பட்டியலில் 9வது இடத்தைப்பிடித்து கிரிக்கெட் ரசிகர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியது.
சென்னை அணியின் புதிய கேப்டனாக ஜடேஜா நியமிக்கப்பட்ட ஜடேஜாவால் அணியை எதிர்பார்த்ததுபோல் நடத்த இயலவில்லை. பணிச்சுமை, தொடர் தோல்வி, கவனச்சிதறல் காரணமாக கேப்டன் பதவியில் இருந்து விலகுவதாக அறிவித்தார்.
இதனையடுத்து மீண்டும் டோனி கேப்டனாக்கப்பட்டார். இருப்பினும் இந்த தொடர் எதிர்பார்த்தது போல் அமையவில்லை. தொடரின் முடிவில் பேசிய டோனி, ``நிச்சயம் அடுத்த சீசனில் மிக வலிமையாகவும் உறுதியாகவும் மீண்டுவந்து வெற்றிகளை குவிப்போம்’’ என்றார். இந்நிலையில், சிஎஸ்கே கேப்டன் டோனி 2022 ஐபிஎல் தொடருக்கு பிறகு முதல்முறையாக நேற்று சென்னை வந்தார். இரு வேறு விழாக்களில் அவர் பங்கேற்க வந்துள்ளதாக தகவல் கசிந்தன. ஆனால் முதன்முதலில் டோனி தனது மாற்றுத்திறனாளி ரசிகை லாவண்யா வீட்டிற்கு சென்று அவரை திக்குமுக்காடச் செய்தார்.
பின்னர் லாவண்யா, டோனியின் ஓவியத்தை அவருக்கு பரிசாக வழங்கினார். உடனே டோனி அவரது கையை குலுக்கி வாழ்த்தினார். இந்நிகழ்ச்சி வீடியோவாக பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில், அதை லாவண்யா தனது சமூக வலைத்தளத்தில் பதிவிட்டுள்ளார். அதில் அவர் உருக்கமுடன் கூறியிருப்பதாவது, “டோனியை சந்தித்த உணர்வு வார்த்தைகளால் விவரிக்க இயலாது. அவர் கனிவானவர், இனிமையாக, மென்மையாக பேசக்கூடியவர். அவர் என் கண்ணீரைத் துடைத்ததும் எனக்கு மிகுந்த ஆனந்தத்தை தந்தது. அது என் வாழ்நாளில் நான் ஆசிர்வதிக்கப்பட்ட தருணம்.
அவர் என்னுடன் பேசிய வார்த்தைகளை என் வாழ்நாளில் மறக்க மாட்டேன். அவருடன் இருந்த பொன்னான நேரத்தை வார்த்தைகளால் வெளிப்படுத்த முடியாது. நான் சாகும்வரை டோனியின் ரசிகையாகதான் இருப்பேன். 31 மே, 2022 எனக்கு என்றென்றும் சிறப்பான நாள்” என்று நெகிழ்ந்துள்ளார். இந்த பதிவுடன் லாவண்யா இணைத்துள்ள புகைப்படங்கள் மற்றும் வீடியோ சமூக வலைதள பக்கங்களில் வைரலாகி வருகிறது.