×

வாகனங்கள் செல்லாத வகையில் பேரிகார்டுகள் அமைத்து மூடல் காட்பாடி ரயில்வே மேம்பாலம் பழுதுபார்க்கும் பணி தொடங்கியது: போக்குவரத்து மாற்றம் செய்து வாகனங்கள் இயக்கம்

வேலூர்: காட்பாடி ரயில்வே மேம்பாலம் பழுதுபார்க்கும் பணி  நேற்று தொடங்கியதால் வாகனங்கள் செல்லும் வகையில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது.தேசிய நெடுஞ்சாலை உட்கோட்டத்திற்குட்பட்ட மங்களூர்- விழுப்புரம் சாலையில் உள்ள காட்பாடி ரயில்வே மேம்பாலம் ஓடுத்தளத்தின் இணைப்புகள் வலுவிழந்துள்ளது. இதை சீரமைக்க ரயில்வே நிர்வாகம் மற்றும் தேசிய நெடுஞ்சாலை துறை சார்பில் நேற்று முதல் மாற்றப்பட்டு காட்பாடி ரயில்வே மேம்பாலம் சீரமைப்பு பணி தொடங்கியது. இதனால் போக்குவரத்து மாற்றப்பட்டம் செய்யப்பட்டுள்ளது. அதன்படி வேலூரிலிருந்து சித்தூருக்கும் சித்தூரில் இருந்து வேலூருக்கும் வரும் அனைத்து வாகனங்களும் வேலூர் பழைய பஸ் நிலையம், விஐடி, இ.பி கூட்ரோடு, சேர்காடு வழியை பயன்படுத்த வேண்டும்.
குடியாத்தத்தில் இருந்து லத்தேரி வழியாக வேலூர் வரும் பஸ்கள் காட்பாடி கூட்ரோடு, கிறிஸ்டியான்பேட்டை, டெல் வரை செல்லலாம். டெல் பஸ் நிறுத்தத்தில் இருந்து காட்பாடி கூட்ரோடு, லத்தேரி வழியாக குடியாத்தம் வரை செல்லலாம். குடியாத்தம் முதல் ஆற்காடு வரை செல்லும் பஸ்கள் சித்தூர் பஸ் நிலையம், இபி கூட்ரோடு, திருவலம் வழியாக செல்லலாம்.

வேலூரில் இருந்து அரக்கோணம் செல்லும் வாகனங்கள் வேலூர் பழைய பஸ் நிலையம், விஐடி, இ.பி. கூட்ரோடு, சேர்க்காடு, வள்ளிமலை, சோளிங்கர், திருத்தணி வழியாக செல்லலாம்.கிறிஸ்டியான்பேட்டையில் இருந்து சித்தூர் பஸ் நிலையம் வரும் பொதுமக்கள் பயன்படுத்தும் இருசக்கர வாகனங்கள், ஆட்டோக்கள், கார் ஆகியவை வள்ளிமலை கூட்ரோடு, காமராஜபுரம், ரயில்வே நுழைவுப் பாலம், பழைய காட்பாடி வழியாக சித்தூர் பஸ் நிலையம் செல்லலாம். கிறிஸ்டியான்பேட்டை, கரசமங்கலம், லத்தேரியிலிருந்து வேலூர் செல்லும் கார், இலகு ரக சரக்கு வாகனங்கள் ஜாப்ராபேட்டை, கழிஞ்சூர், விருதம்பட்டு வழியாக செல்லலாம்.தென் மாவட்டங்களிலிருந்து திருவண்ணாமலை வழியாக வரும் சரக்கு வாகனங்கள் போளூர், ஆரணி, ஆற்காடு, ராணிப்பேட்டை, சேர்க்காடு வழியாக சித்தூர் செல்லலாம். கிருஷ்ணகிரி மாவட்டம் வழியாக வரும் சரக்கு வாகனங்கள் பள்ளிகொண்டா, குடியாத்தம் வழியாக சித்தூர் செல்லலாம்.சித்தூரிலிருந்து தமிழ்நாடு வரும் வேலூர் மாவட்ட அனுமதி பெற்ற சரக்கு வாகனங்கள் மட்டும் சேர்க்காடு வழியாக, இ.பி. கூட்ரோடு, வி.ஐ.டி வழியாக செல்லலாம் தென் மாவட்டங்களுக்கு செல்லும் வாகனங்கள் சேர்காடு, ராணிப்பேட்டை, ஆற்காடு, ஆரணி, திருவண்ணாமலை வழியாக செல்லவும். சித்தூரிலிருந்து கிருஷ்ணகிரி செல்லும் வாகனங்கள் மற்றும் சரக்கு வாகனங்கள் குடியாத்தம், பள்ளிகொண்டா வழியாக செல்லவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இந்நிலையில் இன்று காலை 6 மணியளவில் காட்பாடி ரயில்வே மேம்பாலத்தின் வழியாக வாகனங்கள் செல்ல தடை விதிக்கப்பட்டது. உடனடியாக இருபுறங்களில் இரும்பு பேரிகார்டுகள் அமைக்கப்பட்டு வாகனங்கள் திருப்பி அனுப்பப்பட்டது. தொடர்ந்து மேம்பாலம் சீரமைக்கும் பணி தொடங்கியது. தொழிலாளர்கள் மேம்பாலத்தின் மீது இருந்த தார்ச்சாலையை அகற்றும் பணியில் ஈடுபட்டனர். வாகனங்கள் மாற்றுவழியில் செல்லும் வகையில் பல இடங்களில் வழிகாட்டி பலகை வைக்கப்பட்டுள்ளது.
மேலும் காட்பாடி போலீசார் மற்றும் போக்குவரத்து போலீசார் வாகனங்களை மாற்று வழியில் செல்லுமாறு அறிவுறுத்தி வருகின்றனர்.குடியாத்தம், கே.வி.குப்பம், லத்தேரி வழியாகவும், சித்தூர் வழியாகவும் வந்த பயணிகள் காட்பாடி குடியாத்தம் சாலையில் இறங்கிவிடப்பட்டனர். அங்கிருந்து நடந்து வந்து காட்பாடி ரயில் நிலையிலிருந்து மற்றொரு பஸ்சில் வேலூருக்கு வந்தனர்.இதனால் பயணிகள் அவதி அடைந்தனர். இந்த பணி ஒரு மாதம் வரை நடக்கும் என்பதால் அதுவரை மாற்றுப்பாதையை பயன்படுத்த வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.

மற்றொரு மேம்பாலம் கட்டுவது எப்போது?
தமிழகத்தையும் ஆந்திராவையும் இணைக்கும் முக்கிய பாலமாக காட்பாடி ரயில்வே மேம்பாலம் இருந்து வருகிறது. இந்த பாலம் திருப்பதிக்கு செல்வது, வேலூருக்கு வருவது என்று 24 மணி நேரமும் போக்குவரத்து நெரிசலுடன் காணப்படும். எனவே இந்த பாலத்தின் அருகே மற்றொரு பாலம் கட்ட வேண்டும் என்று பல ஆண்டுகளாக கோரிக்கை எழுந்து வருகிறது. எனவே முக்கியத்துவம் வாய்ந்த இந்த பகுதியில் மற்றொரு மேம்பாலம் கட்ட அரசு விரைந்து நடவடிக்கை எடுக்க கோரிக்கை எழுந்துள்ளது.

உள்ளூர் பஸ்கள் இயக்கப்படும் விவரம்
காட்பாடியில் இருந்து பாகாயம் வழியாக செல்லும் அனைத்து டவுன் பஸ்களும், காட்பாடி ரயில் நிலையத்தில் இருந்து இயக்கப்படும். குடியாத்தத்தில் இருந்து இயக்கப்படும் அனைத்து டவுன் பஸ்களும் காட்பாடி கிறிஸ்டியான்பேட்டை வழியாக டெல் வரை இயக்கப்படும்.தடம் எண் 16 பி, ஏ, 16டி, 16டி பஸ்கள் வேலூர் பழைய பஸ் நிலையத்திலிருந்து விரிஞ்சிபுரம், வடுகந்தாங்கல் வழியாக இயக்கப்படும். தடம் எண் 16 இ, 16 எப்.ஏ 16 எப்.பி. ஆகிய பஸ்கள் பள்ளத்தூர், பரதராமிக்கு வள்ளிமலை கூட்ரோட்டிலிருந்து இயக்கப்படும்.

மகாதேவமலை, ரகுநாதபுரம் ஆகிய இடங்களுக்கு செல்லும் பஸ்கள் காட்பாடி, வள்ளிமலை கூட்ரோட்டில் இருந்து இயக்கப்படும்.தடம் எண் 20ஏ, 20ஏஏ, 20ஏபி, 20பிஏ ஆகிய பஸ்கள் விஐடி, இபி.கூட்ரோடு, திருவள்ளுவர் பல்கலைகழகம் வழியாக இயக்கப்படும். தடம் எண். 20ஆர், 20எம், பொன்னை புதூர்- காட்பாடி தெங்கால்- காட்பாடி ஆகிய பஸ்கள் வள்ளிமலை கூட்ரோட்டில் இருந்து இயக்கப்படும். தடம் எண் 14 பஸ் சேர்க்காடு- காட்பாடி வள்ளிமலை கூட்ரோடு இடையே இயக்கப்படும். வேலூரில் இருந்து திருப்பதிக்கு செல்லும் பஸ்கள் காட்பாடி, சித்தூர் பஸ் நிறுத்தம், விஐடி, இபி., கூட்ரோடு, திருவள்ளுவர் பல்கலைகழகம், முத்தரசிகுப்பம் வழியாக இயக்கப்படும்.


Tags : Katpadi , Repair work of Katpadi railway overpass has been started.
× RELATED வேலூர் காட்பாடி சாலையில் கழிவுநீர் கால்வாய் அடைப்பால் மக்கள் அவதி