×

சென்னை கோயம்பேட்டில் உள்ள தலைமை அலுவலகத்தில் தேமுதிக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்: பிரேமலதாவை செயல் தலைவராக்க கட்சியினர் வலியுறுத்தல்

சென்னை: சென்னை கோயம்பேட்டில் உள்ள தலைமை அலுவலகத்தில் தேமுதிக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் இன்று காலை நடந்தது. இந்த கூட்டத்தில் பிரேமலதாவை செயல் தலைவராக்க கட்சியினர் வலியுறுத்தியதாக கூறப்படுகிறது. கடந்த 2019ம் ஆண்டு நடைபெற்ற பாராளுமன்ற தேர்தலில் அதிமுக. பாஜக கூட்டணியில் இணைந்து தேமுதிக தேர்தலை சந்தித்தது. இதில் ேதமுதிக சார்பில் நிறுத்தப்பட்ட வேட்பாளர்கள் அனைவரும் தோல்வியை சந்தித்தனர். இந்த நிலையில் கடந்த 2021 சட்டமன்ற தேர்தலில் தினகரன் கட்சியோடு இணைந்து தேமுதிக தேர்தலை சந்தித்தது.

அதிலும் தேமுதிக படுதோல்வியை சந்திக்க நேரிட்டது. இந்த நிலையில் விஜயகாந்துக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டது. அவர் வீட்டில் ஓய்வு எடுத்து வருகிறார். தேமுதிக பொருளாளர் பிரேமலதா கட்சியை வழி நடத்தி வருகிறார். இதற்கிடையில் தொடர் தோல்விகளால் தேமுதிக நிர்வாகிகள் பலர் கட்சியில் இருந்து விலகி வருகின்றனர். இதைத் தொடர்ந்து தேமுதிகவை பலப்படுத்த பிரேமலதா பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை எடுக்க தொடங்கியுள்ளார்.

இந்த நிலையில் தேமுதிக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் சென்னை கோயம்பேட்டில் உள்ள கட்சி தலைமை அலுவலகத்தில் இன்று காலை நடந்தது. கூட்டத்திற்கு தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் தலைமை தாங்கினார். இந்த கூட்டத்தில் துணை பொது செயலாளர்கள் எல்.கே.சுதீஷ், பார்த்தசாரதி உள்ளிட்ட தேமுதிக நிர்வாகிகள் மற்றும் 78 மாவட்ட தேமுதிக செயலாளர்கள் கலந்து கொண்டனர். இந்த கூட்டத்தில் கட்சியை வலுப்படுத்துவது, தேமுதிகவின் எதிர்காலம் குறித்து கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டது.

இந்த கூட்டத்தில் கட்சியை மேலும் வலுவாக வழி நடத்திச் செல்வதற்கு ஏதுவாக பிரேமலதாவுக்கு செயல் தலைவர் பதவியை வழங்க மாவட்ட செயலாளர்கள் அறிவுறுத்தியதாக கூறப்படுகிறது. தேமுதிக பொதுக்குழு, செயற்குழு கூட்டத்தை நடத்துவது குறித்தும், உள்கட்சி தேர்தலை நடத்துவது பற்றியும் இந்த கூட்டத்தில் பல்வேறு முடிவுகள் எடுக்கப்பட்டதாக கூறப்படுகிறது.

தேமுதிமுக உள்கட்சி தேர்தல் கடந்த 2017ம் ஆண்டு நடத்தப்பட்டது. இந்த நிலையில் 5 ஆண்டுகளுக்கு பிறகு உள்கட்சி தேர்தலை நடத்தி புதிய நிர்வாகிகளை தேர்வு செய்வது குறித்தும் கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது.  கிளை, வார்டு, ஒன்றியம், பேரூராட்சி, நகராட்சி, மாவட்ட அளவில் தே.மு.தி.க. நிர்வாகிகளை தேர்வு செய்ய விரைவில் உள்கட்சி தேர்தல் நடைபெற உள்ளது. இந்த தேர்தலின்போது இளைஞர்களுக்கு முக்கியத்துவம் அளிக்க தே.மு.தி.க. திட்டமிட்டு உள்ளதாக கூறப்படுகிறது. கூட்டம் முடிந்த பிறகு இது தொடர்பான அறிவிப்புகளை பிரேமலதா விஜயகாந்த் வெளியிடுவார் என்று தெரிகிறது.

Tags : Demotidiya ,District ,Coimpet, Chennai ,Premalatha , Chennai Coimbatore, Head Office, Temutika District Secretaries Meeting, Premalatha,
× RELATED பாவூர்சத்திரத்தில் பிறந்தநாள்...