×

தேவர் சிலை திறப்பு விழாவில் பங்கேற்பு: திருவாடானை தொகுதியை குறி வைக்கிறார் ஓபிஎஸ்சின் இளைய மகன்?..அதிமுகவினர் அதிருப்தி

ராமநாதபுரம்: அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வத்தின் இளைய மகன் ஜெயபிரதீப், நேற்று ராமநாதபுரம் மாவட்டம் திருவாடானையில் நடந்த தேவர் சிலை திறப்பு விழாவில் கலந்து கொண்டார். இந்த தொகுதியை குறி வைத்து அவர் அடிக்கடி நிகழ்ச்சிகளில் பங்கேற்பதால், ராமநாதபுரம் மாவட்ட அதிமுக நிர்வாகிகள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
ராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை காமராஜர் பேருந்து நிலைய நுழைவு வாயிலில் பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் சிலை நிறுவப்பட்டு நீண்டகாலமாக இருந்து வருகிறது.

இந்த நிலையில் திருவாடானை பசும்பொன் தேவர் அறக்கட்டளையின் சார்பில், தற்சமயம் அந்த சிலை இருந்த இடத்தில் புதுப்பொலிவுடன் பசும்பொன் முத்துராமலிங்க தேவரின் திருஉருவ வெண்கலச் சிலை நிறுவப்பட்டு. நேற்று சிலை திறப்பு விழா நடைபெற்றது. இந்த விழாவில், திருவாடானை தொகுதி முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள் கேஆர்.ராமசாமி, நடிகர் கருணாஸ் மற்றும் அதிமுக ஒருங்கிணைப்பாளரும், முன்னாள் முதல்வருமான ஓ.பன்னீர்செல்வத்தின் இளையமகன் ஜெயபிரதீப் ஆகியோர் கலந்து கொண்டனர், தேவரின் சிலைக்கு மாலை அணிவித்து மலர்தூவி மரியாதை செலுத்தினர்.

சமீபகாலமாக திருவாடானை தொகுதியில் நடைபெறும் பல்வேறு நிகழ்ச்சிகளில் ஓபிஎஸ்சின் இளையமகன் ஜெயபிரதீப் தொடர்ந்து பங்கேற்று வருகிறார். வரும் சட்டமன்ற தேர்தலில் திருவாடானை தொகுதியில் அவர் போட்டியிட உள்ளார் என்று கூறப்படுகிறது. நேற்றைய நிகழ்ச்சிக்கு அவர் வந்த போது, அதிமுகவில் ஒரு பிரிவினர், அவருக்கு போட்டி போட்டுக் கொண்டு வரவேற்பு கொடுத்தனர். எனினும் மாவட்டத்தில் அதிமுகவில் உள்ள முக்கிய நிர்வாகிகள், ஜெயபிரதீப்பின் இந்த நடவடிக்கைகளால் அதிருப்தியில் உள்ளனர்.

இது குறித்து நிர்வாகிகள் சிலர் கூறுகையில், ‘‘ஓபிஎஸ்சின் மூத்த மகன் ரவீந்திரநாத், ஏற்கனவே எம்.பி.யாக உள்ளார். இந்நிலையில் இளைய மகன் ஜெயபிரதீப்பையும், கட்சியில் முன்னிலைப்படுத்தும் முயற்சிகள் நடந்து வருகின்றன. அவர் கடந்த ஏப்ரல் மாதத்திலும் திருவாடானையில் நடந்த கட்சி நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். அதன் பின்னரும் ரகசியமாக அவர் திருவாடானைக்கு வந்து, தனது ஆதரவாளர்களுடன் ஆலோசித்துள்ளார். கட்சிக்காக உழைத்து வரும் இந்த மாவட்டத்தை சேர்ந்த நிர்வாகிகளை புறக்கணிக்கக் கூடாது என்பதே அனைவரின் விருப்பம்’’ என்று தெரிவித்தனர்.

Tags : Devar ,Tiruvadana , Devar Statue Opening Ceremony, Thiruvananthapuram Block, OPS, AIADMK Dissatisfaction
× RELATED தேவர் சமுதாய அரசாணை விவகாரத்தில்...