×

கிருஷ்ணா கால்வாய் திறப்பு எதிரொலி: பூண்டி ஏரிக்கு நீர்வரத்து அதிகரிப்பு

திருவள்ளூர்: கிருஷ்ணா கால்வாயில் தண்ணீர் திறக்கப்பட்டுள்ளதால் பூண்டி நீர்த்தேக்கத்துக்கு தண்ணீர்வரத்து தொடர்ந்து அதிகரித்து வருகிறது. சென்னை மக்களின் குடிநீர் தேவைக்காக தெலுங்கு - கங்கை கிருஷ்ணா நதிநீர் ஒப்பந்தத்தின்படி, தமிழகத்துக்கு ஜூலை முதல் அக்டோபர் வரை 8 டிஎம்சி தண்ணீர், ஜனவரி முதல் ஏப்ரல் வரை 4 டிஎம்சி தண்ணீர் என வருடத்துக்கு 12 டிஎம்சி தண்ணீர் வழங்கப்பட்டு வருகிறது.

இதன்படி, கடந்த மாதம் 5ம் தேதி ஆந்திர மாநிலம் கண்டலேறு அணையில் இருந்து வினாடிக்கு 500 கன அடியாக திறக்கப்பட்ட தண்ணீர் படிப்படியாக உயர்த்தப்பட்டு 1800 கன அடியாக திறக்கப்பட்டு வருகிறது. இந்த தண்ணீரானது தமிழக எல்லையான ஊத்துக்கோட்டை ஜீரோ பாயிண்ட்டுக்கு 487 கன அடியாக வந்தடைந்து அங்கிருந்து பூண்டி சத்தியமூர்த்தி நீர்தேக்கத்துக்கு 450 கன அடியாக வந்துகொண்டிருக்கிறது.

தற்போது பூண்டி சத்தியமூர்த்தி நீர்தேக்கத்துக்கு இதுவரை 1 டிஎம்சி தண்ணீர் வந்துள்ளது என்று பொதுப்பணித்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். பூண்டி நீர்த்தேக்கத்தின் முழு கொள்ளளவான 35 அடியில் தற்போது 26.80 அடி நீர் இருப்பு உள்ளது. அதாவது 3 ஆயிரத்து 231 மில்லியன் கன அடியில் தற்போது 1.111 மில்லியன் கன அடி நீர் இருப்பு உள்ளது. ஏரிக்கு தற்போது 450 கன அடி கிருஷ்ணா நீர் வந்துகொண்டிருக்கிறது. பூண்டி நீர்த்தேக்கத்தில் இருந்து இணைப்பு கால்வாய் மூலம்  831 கன அடி நீர் புழல், செம்பரம்பாக்கம் ஆகிய ஏரிகளுக்கு அனுப்பப்பட்டு வருகிறது.


Tags : Krishna Canal ,Boondi Lake , Krishna Canal Opening, Boondi Lake,
× RELATED ஊத்துக்கோட்டை அருகே கிருஷ்ணா கால்வாய் ரூ.24 கோடியில் சீரமைப்பு