×

மாதவரம் கன்டெய்னர் யார்டில் பயங்கரம் லாரியை பின்னோக்கி இயக்கி 2 பேர் கொடூரமாக கொலை: வாலிபர் சீரியஸ்; டிரைவர், கிளீனர் கைது

புழல்: மாதவரம் கன்டெய்னர் யார்டில் பின்னோக்கி இயக்கியதில் லாரியில் சிக்கி படுகாயம் அடைந்த மூவரில் இரண்டு பேர் உயிரிழந்தனர். ஒருவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டுவரும் நிலையில், உபியை சேர்ந்த லாரி டிரைவர், கிளீனர் கைது செய்யப்பட்டுள்ளனர். சென்னை செங்குன்றம் அடுத்த வடபெரும்பாக்கம், மாதவரம் நெடுஞ்சாலையில் கன்டெய்னர் யார்டு உள்ளது. இங்கு சென்னை துறைமுகம் உள்பட பல பகுதிகளில் இருந்து சரக்குகளை ஏற்றிச்செல்வதற்காக வருகின்ற ஏராளமான லாரிகள் நிறுத்தப்படுவதுடன் டிரைவர், கிளீனர் ஆகியோர் ஓய்வெடுக்கவும் வசதி செய்யப்பட்டுள்ளது.

சென்னை வடபெரும்பாக்கம், விநாயகபுரம் பகுதியை சேர்ந்த டிராவல்ஸ் உரிமையாளர்கள் கமலக்கண்ணன் (36), நவீன் (36) மற்றும் வடகரை குமரன் (34) ஆகியோர் நேற்றிரவு கன்டெய்னர் யார்டு பகுதியில் நிறுத்தப்பட்டிருந்த ஒரு லாரியின் பின்புறம் அமர்ந்து மது அருந்தியபடி பேசிக்கொண்டிருந்துள்ளனர். அந்த சமயத்தில் அங்கு வந்த உபியை சேர்ந்த லாரி டிரைவர், லாரியின் பின்புறத்தில் மது குடித்துக்கொண்டிருந்தவர்களிடம் சென்று ‘ சரக்கு ஏற்ற செல்வதற்காக லாரியை பின்னோக்கி எடுக்க வேண்டும்.

எனவே, அனைவரும் எழுந்திருங்கள்’ என்று கூறியதாக தெரிகிறது. இதற்கு போதையில் இருந்தவர்கள், எழுந்திருக்க முடியாது நாங்கள் சென்றபிறகு லாரியை எடுத்துக்கொள்’ என்று கூறியதாக தெரிகிறது. இதன்காரணமாக டிரைவர், கிளீனருக்கும் போதையில் இருந்தவர்களுக்கும் இடையே கடும் வாக்குவாதம் நடந்து சரமாரியாக தாக்கிகொண்டனர். இதன்பிறகு அவர்கள் அங்கிருந்து செல்லாமல் மது அருந்தியதாக தெரிகிறது.

இதில் கோபத்துடன் வேகமாக சென்ற டிரைவர் லாரியில் ஏறி ஸ்டார்ட் செய்துவிட்டு படுவேகமாக லாரியை பின்னோக்கி இயக்கி, அங்கு மது அருந்திக்கொண்டிருந்த 3 பேர் மீது ஏற்றியுள்ளார். இதில் 3 பேரும் லாரி சக்கரத்தில் சிக்கி படுகாயம் அடைந்து ரத்தவெள்ளத்தில் துடித்துள்ளனர். இந்த விபத்து பார்த்ததும் அதிர்ச்சி அடைந்த அங்கிருந்த டிரைவர்கள், கிளீனர்கள் ஓடிவந்தபோது விபத்து ஏற்படுத்திய லாரி டிரைவரும் கிளீனரும் தப்பிவிட்டனர். இதன்பிறகு ரத்தவெள்ளத்தில் துடித்தவர்களை மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு செல்ல ஏற்பாடு செய்தனர். ஆனால் அதற்குள் கமலக்கண்ணன் பரிதாபமாக உயிரிழந்தார்.

படுகாயம் அடைந்த நவீன், குமரன் ஆகியோரை மீட்டு, ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் மருத்துவமனைக்கு செல்லும் வழியில் குமரன் பரிதாபமாக உயிரிழந்தார். ஆபத்தான நிலையில் உள்ள நவீனுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுபற்றி தகவல் கிடைத்ததும் செங்குன்றம் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்தனர். கமலக்கண்ணன், குமரன் ஆகியோரின் சடலங்களை பிரேத பரிசோதனைக்கு அனுப்பிவைத்தனர்.

புகாரின்பேரில் செங்குன்றம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து லாரியை பின்னோக்கி இயக்கி இரண்டு பேரை கொன்ற லாரி டிரைவர் கன்னையாலால் (24), கிளீனர் சிரிஸ்குமார் (28) ஆகியோரை தேடி வந்தனர். இந்த நிலையில், டிரைவர், கிளீனர் ஆகியோரை கைது செய்து அவர்களிடம் தொடர்ந்து விசாரணை நடத்துகின்றனர். குடிபோதை பிரச்னையில், லாரியை பின்னோக்கி இயக்கி இரண்டுபேர் கொடூரமாக கொல்லப்பட்டுள்ளது பெரும் அதிர்ச்சி, பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Tags : Madavaram Container Yard 2 ,Walipur , Month Container Yard, brutally murdered, driver, cleaner arrested`
× RELATED லாரி மோதி வாலிபர் காயம் லாரியை சிறை பிடித்து பொதுமக்கள் போராட்டம்