அரசியலமைப்பு சட்ட தினமான நவ.26-ல் புதிய நாடாளுமன்ற கட்டிடம் திறப்பு!!

டெல்லி : அரசியலமைப்பு சட்ட தினமான நவம்பர் 26-ம் தேதி முதல், புதிய நாடாளுமன்ற கட்டிடம் செயல்படுவதற்கான வாய்ப்புகள் உள்ளதாக அரசு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இந்தியாவின் தற்போதைய நாடாளுமன்ற கட்டிடம் 94 ஆண்டுகள் பழமையானது. இதை கட்டும்போது ரூ.83 லட்சம் செலவானது. இந்த கட்டிடத்தை இடிக்காமல் அதனையொட்டி 65 ஆயிரம் சதுர மீட்டர் பரப்பளவில் புதிய நாடாளுமன்றம் முக்கோண வடிவில் கட்டப்பட உள்ளது. இதற்காக ‘சென்ட்ரல் விஸ்டா’ திட்டத்தை மத்திய அரசு உருவாக்கியுள்ளது. இந்த திட்டத்தின் கீழ் புதிய நாடாளுமன்றக் கட்டிடம், மத்திய தலைமை செயலகம் ஆகியவை கட்டப்பட உள்ளன.இந்தத் திட்டத்திற்குக் கடந்த 2020 டிச. மாதம் அடிக்கல் நாட்டப்பட்டது.

இதனிடையே 2022-23 நிதியாண்டில், சென்ட்ரல் விஸ்டா திட்டத்தின் மேம்பாட்டிற்காக மதிப்பிடப்பட்ட செலவு ரூ.2,285 கோடி ஆக அதிகரித்துள்ளதாக ஒன்றிய அரசு கடந்த ஜனவரியில் அறிவித்தது. இந்த நிலையில், அரசியலமைப்பு சட்ட தினமான நவம்பர் 26-ம் தேதி முதல், புதிய நாடாளுமன்ற கட்டிடம் செயல்படுவதற்கான வாய்ப்புகள் உள்ளதாக அரசு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.ஆகவே இதற்கான கட்டுமானத்தை இந்தாண்டு அக்டோபர் இறுதியில் முடிக்க வேண்டும் என, ஒப்பந்தகாரர்களுக்கு காலக்கெடு விதிக்கப்பட்டுள்ளது. புதிய நாடாளுமன்றத்தின் மக்களவை மற்றும் மாநிலங்களவை, இந்தாண்டு குளிர்கால கூட்டத்துக்கு தயாராகிவிடும் என்பதில் ஒன்றிய அரசு நம்பிக்கையுடன் உள்ளது. நாடாளுமன்ற நடவடிக்கைகளை புதிய நாடாளுமன்றத்துக்கு மாற்றுதல், நரேந்திர மோடி அரசுக்கு மற்றொரு முக்கிய சாதனையாக இருக்கும் என கருதப்படுகிறது.

Related Stories: