×

1531 சதுர கி.மீ. பரப்பிற்கு மாஸ்டர் பிளான்: கோவையில் அடுத்த மாதம் வெளியீடு

கோவை: கோவை மாவட்டத்தில் கடந்த 1994ம் ஆண்டில் நகர் ஊரமைப்பு துறையின் மாஸ்டர் பிளான் வெளியானது. இதில் வகைப்படுத்தப்பட்ட நிலப்பரப்புகளில் கட்டுமானங்கள், திட்ட பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. கடந்த 20 ஆண்டாக புதிய மாஸ்டர் பிளான் பணிகள் தொடர்ந்து இழுவை நிலையில் இருக்கிறது. கோவை மாவட்ட அளவில் 1,531 சதுர கி.மீ. பரப்பிற்கு மாஸ்டர் பிளான் தயாரிக்கப்பட்டது. இந்த பணிகளின் இறுதி வடிவம் நகர் ஊரமைப்பு துறை மற்றும் முதல்வர் அலுவலகத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. ஒரு மாதத்தில் மாஸ்டர் பிளான் இறுதி செய்யப்பட்டு பொதுமக்களின் கருத்து கேட்பிற்கு அனுப்பி வைக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இது மட்டுமின்றி கோவை, திருப்பூர், ஈரோடு மாவட்டங்களை உள்ளடக்கிய கோவை மண்டல மாஸ்டர் பிளானும் தயாராகி வருகிறது.

இந்த மாஸ்டர் பிளான் 15,679 சதுர கி.மீ. பரப்பிற்கு தயார் செய்யப்படுகிறது. இது தவிர நீலகிரி மாவட்டத்திற்கு தனி மாஸ்டர் பிளான் சுற்றுலா அம்சங்களுடன் உருவாகி வருகிறது. இது 2565 சதுர கி.மீ. பரப்பளவை உள்ளடக்கி உருவாக்கப்படுகிறது. மாஸ்டர் பிளான் எதிர்கால வளர்ச்சியை கருத்தில் கொண்டு விவசாயம், தொழில், கல்வி, மருத்துவம், போக்குவரத்து, ஏற்றுமதி, இறக்குமதி, விற்பனை, வணிகம், வியாபாரம், தொழிலாளர்கள், வீட்டு வசதி திட்டங்களை அடிப்படையாக வைத்து உருவாக்கப்பட்டிருப்பதாக தெரிகிறது.கடந்த 2017ம் ஆண்டில் புதிய மாஸ்டர் பிளான் தயாரிக்கப்பட்டு, பல்கலைக்கழக நிர்வாகத்தின் மூலமாக மேற்பார்வை செய்யப்பட்டு, மக்களின் பார்வைக்காக  வரைவு வடிவம் வெளியிடப்பட்டது. இதில் இருகூர் பகுதியில் பல்வேறு தொழில் கூடங்கள், குறிப்பாக பைபாஸ் ரோட்டை ஒட்டி லாரி டெர்மினல், ஏற்றுமதி முனையம் போன்றவை அமைக்க திட்ட வடிவு வெளியானது. இதற்கு கடும் எதிர்ப்பு கிளம்பியது. மேலும் பல்வேறு பகுதிகளில் தொழில், வணிக கட்டமைப்புகளுக்கு மக்களின் எதிர்ப்பு கிளம்பிய நிலையில் மாஸ்டர் பிளான் வரைவு திட்டம் கைவிடப்பட்டது. கூடுதல் அம்சங்களுடன் புதிய மாஸ்டர் பிளான் உருவாக்கப்பட்டுள்ளது.

குறிப்பாக புறநகரின் வளர்ச்சியை அதிகரிக்க, கூடுதல் மனையிடங்கள், துணை நகரங்கள், பஸ் லாரி போக்குவரத்திற்கான டெர்மினல், தொழில் பேட்டை போன்றவை அறிவிக்கப்படவுள்ளது. கோவையின் இப்போதையை நிலையை காட்டிலும் இரு மடங்கு வளர்ச்சியை 3 ஆண்டில் அடையும் வகையில் திட்ட வடிவு மேற்கொள்ளப்பட்டுள்ளது. மாஸ்டர் பிளான் வரைவு வடிவம் மக்களின் பார்வைக்கு வைக்கப்பட்டு பின்னர், இறுதி செய்யப்படும். மாஸ்டர் பிளான் தயாரிக்க கோவை, நீலகிரி மண்டத்திற்கு 2.75 கோடி ரூபாய் செலவிடப்பட்டது. புதிய மாஸ்டர் பிளான் மூலமாக பல்வேறு துறையினருக்கு நில வகை மாற்றம் மற்றும் பல்வேறு அரசு துறைகளின் அனுமதிகள் எளிதாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. கட்டுமானம், தொழில், மருத்துவ கட்டமைப்பு, இரு மாநில சரக்கு போக்குவரத்திற்கு புதிய திட்டங்கள் வௌியாகவுள்ளது. மாஸ்டர் பிளான் அறிவிப்புகளை தொழில், மருத்துவம், விவசாயம் மற்றும் பல்வேறு துறையினர் எதிர்பார்த்துள்ளனர்.



Tags : Cova , 1531 sq. Km. Area Master Plan: Released next month in Coimbatore
× RELATED சென்னை காவல் நிலையத்தில் குண்டு வைத்த...