×

முத்தமிழறிஞர் கலைஞரின் 98வது பிறந்தநாள் விழா :திருவுருவச்சிலைக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நாளை மாலை அணிவித்து மரியாதை

சென்னை : முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களின் 98வது பிறந்தநாள் விழாவினை முன்னிட்டு சென்னை, ஓமந்தூரார் அரசினர் தோட்ட வளாகத்தில் அமைந்துள்ள அவரது திருவுருவச்சிலைக்கு மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தவுள்ளார்.தமிழகத்தின் தனிப் பெருந்தலைவராக மட்டுமின்றி, இந்தியத் திருநாடே வியந்து போற்றிய முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களின் 98ஆவது பிறந்த நாள் விழாவினை முன்னிட்டு, சென்னை, ஓமந்தூரார் அரசினர் தோட்ட வளாகத்தில் அமைந்துள்ள முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களின் திருவுருவச்சிலைக்கு நாளை (3.6.2022) காலை மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. மு.க.ஸ்டாலின் அவர்கள் மாலை அணிவித்து மலர்தூவி மரியாதை செலுத்த உள்ளார்கள். இந்நிகழ்வில் மாண்புமிகு அமைச்சர் பெருமக்கள், நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள், உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் பங்கேற்று சிறப்பிக்க உள்ளார்கள்.

’யாதும் ஊரே, யாவரும் கேளிர்’ என்ற  கணியன் பூங்குன்றனாரின் வரிகளுக்கேற்ப, உலகெங்கிலும் உள்ள நாடுகளில் பரந்து விரிந்து வாழ்கின்ற தமிழர்களின் நெஞ்சமெல்லாம் நீக்கமற நிறைந்து இருப்பவர்; தான் கால்பதித்த கலை, எழுத்து, அரசியல்  மற்றும் ஆட்சிப் பொறுப்பு உள்ளிட்ட அனைத்திலும் தனித்தன்மையோடு தன் முத்திரையைப் பதித்தவர்; 80 ஆண்டுகால பொது வாழ்க்கைக்கும், போராட்ட வாழ்க்கைக்கும் சொந்தமானவர்; உலக வரலாற்றில் இதுவரை இல்லாத வகையில், திராவிட முன்னேற்றக் கழகம் எனும் மாபெரும் பேரியக்கத்திற்கு அரை நூற்றாண்டுக் காலம் அசைக்கமுடியாத ஜனநாயகத் தலைவராகவும், அண்ணாவின் அன்புத் தம்பியாகவும் திகழ்ந்தவர்.

பகுத்தறிவுப் பகவலன் தந்தை பெரியார் அவர்களால் “கலைஞர் அவர்கள் அறிவில் சிறந்தவர்,  நிருவாகத்தில் சிறந்தவர், பொதுத் தொண்டுக்காக தியாகம் செய்வதிலும் சிறந்தவர்” என்றும், பேரறிஞப் பெருந்தகை அண்ணா அவர்களால்“ தண்டவாளத்தில் தலைவைத்துப் படு என்று சொன்னாலும், அமைச்சர் பதவியை ஏற்றுக்கொள் என்று சொன்னாலும் இரண்டையும் ஒன்றாக, சமமாகக் கருதுபவன் என் தம்பி கருணாநிதி” - “வரலாற்றின் முற்பகுதியை நான் எழுதினேன், பிற்பகுதியை என் தம்பி கருணாநிதி எழுதுவார்” - “என் தம்பி கருணாநிதி தனிமைச் சிறையில் அடைபட்டுக் கிடக்கும் பாளையங்கோட்டை இடந்தான் எனக்கு யாத்திரைத் தலம்; புனித பூமி” என்றும், நம் இனமானப் பேராசிரியர் அவர்களால், “கலைஞர்  திராவிட இயக்கத்தில் தந்தை பெரியார் விட்டுச் சென்ற இடத்தையும், பேரறிஞர் அண்ணா அவர்கள் விட்டுச் சென்ற இடத்தையும்  நிறைவு செய்பவர்” என்றும் போற்றிப் புகழப்பட்டவர் முத்தமிழறிஞர் கலைஞர் ஆவார்.

அரை நூற்றாண்டுக் காலம் தமிழக அரசியலில் தலைப்புச் செய்தியாக இருந்தவர்; ஐந்து முறை முதலமைச்சராக ஆட்சிப் பொறுப்பேற்ற காலத்தில் ஏழை எளிய மக்கள் கல்வி, அறிவியல், சமூக பொருளாதாரத்தில் ஏற்றம் பெற்றிட எண்ணற்ற நல்ல பல சமூக நலத்திட்டங்களை திறம்படச் செயல்படுத்தி, இந்தியாவின் பல மாநிலங்களுக்கு முன்னோடியாகத் தமிழகத்தைத் தலைநிமிரச் செய்தவர்; இந்தியாவிற்கே முன்னோடியாய் சமூகநீதி காத்து சமத்துவபுரம் அமைத்த சமுதாயக் காவலர்.
‘தமிழுக்கும் அமுதென்று பேர், அந்தத் தமிழின்பத் தமிழ் எங்கள் உயிருக்கு நேர்’ என்று உரைத்திட்ட பாவேந்தர் பாரதிதாசனின் வாக்கினிற்கு ஏற்பவும், ‘எங்கள் வாழ்வும் எங்கள் வளமும் மங்காத தமிழ் என்று சங்கே முழங்கு’ என்ற பாவேந்தரின் வரிக்களுக்கேற்பவும் உயிர்நிகர்த் தாய்மொழியாம் அமுதெனும் தமிழுக்கு செம்மொழித் தகுதியைப் பெற்றுத் தந்தவர்; பார்போற்றும் அய்யன் திருவள்ளுவருக்கு முக்கடலும் சங்கமிக்கும் குமரிமுனையில் நெடிதுயர்ந்த திருவுருவச் சிலையினை அமைத்து பெருமைச் சேர்த்தவர்; தன் வாழ்நாளின் இறுதிவரையில் தமிழாய் வாழ்ந்து தமிழாய் நிலைத்தவர்.
    
அன்னியரிடம் அடிமைப்பட்டுக் கிடந்த இந்தியத் திருநாட்டின் விடுதலைக்குத் தன்னுயிரைத் தந்திட்ட தமிழகத்து தியாகத் தலைவர்கள், மொழிப்போர்த் தியாகிகள் மற்றும் தமிழறிஞர்களின் அருமை பெருமைகளை இன்றைய தலைமுறையினர் மட்டுமின்றி, இனி வருங்காலத் தலைமுறையும் அறிந்து பயன்பெறுகின்ற வகையில், அவர்களின் நினைவாக மணிமண்டபங்களை அமைத்து, அவர்களின் பிறந்த நாட்களை அரசு விழாவாக கொண்டாட வழிவகுத்த வித்தகர்.
ஓய்வறியாக் கதிரவன் போல் தன் வாழ்நாளின் இறுதிவரையில் ஓய்வென்பதையே அறியாமல், அடித்தள மக்களுக்காகத் தன்னை அர்ப்பணித்து அல்லும் பகலும் அயராது உழைத்தவர். தன்னைத் தந்து, நம் தாய் நிகர் தமிழகத்தைச் செதுக்கிய சிற்பியாம் தமிழினத் தலைவர் முத்தமிழறிஞர் கலைஞர் அவர்கள் ஆற்றியுள்ள அரும்பணிகளையும், சாதனைகளையும் நாம் அனைவரும் அறிந்து பயனடைந்ததோடு மட்டுமின்றி, அடுத்து வரும் தலைமுறையும் அறிந்து கொள்ளும் வகையிலும், அகிலம் முழுதும் பரவியுள்ள தமிழர்களின் நெஞ்சங்களில் நீக்கமற நிறைந்துள்ள முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களுக்கு மென்மேலும் பெருமை சேர்க்கின்ற வகையிலும்,  மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. மு.க. ஸ்டாலின் அவர்கள்  அன்னாரின் பிறந்த நாளான ஜூன் திங்கள் 3ஆம் நாள் அரசு விழாவாகக் கொண்டாடப்படும் என்றும், முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களின் திருவுருவச் சிலை சென்னை ஓமந்தூரார் அரசினர் தோட்ட வளாகத்தில் அமைக்கப்படும் என்றும் வரலாற்றுச் சிறப்புமிக்க அறிவிப்பினை வெளியிட்டார்.

அதனைச் செயல்படுத்திடும் வகையில், கடந்த 28.5.2022 அன்று மாண்புமிகு இந்தியக் குடியரசுத் துணைத் தலைவர்   திரு.   எம். வெங்கையா நாயுடு அவர்களால்  முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களின் திருவுருவச் சிலை திறப்பு விழா சீரோடும் சிறப்போடும் நடைபெற்று வரலாறு படைத்தது.  
”ஒன்றா உலகத் துயர்ந்த புகழல்லாற்
 பொன்றாது நிற்பதொன் றில்”
என்கிற அய்யன் திருவள்ளுவரின் வாக்கினிற்கேற்ப, தாய்த் தமிழ் மண்ணிற்கும், தமிழ் மக்களின் நலனிற்கும் தன்னையே அர்ப்பணித்து இறவாப் புகழினை எய்தியுள்ள முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களின்   98-ஆவது பிறந்த நாள் விழா தமிழ்நாடு அரசின் சார்பில் சீரோடும் வெகு சிறப்போடும் கொண்டாடப்படுகிறது.

Tags : Chief Minister ,BC K. ,Stalin , Monkey flu, World Health Organization, warning
× RELATED ராகுல் காந்தி முதல்வர் ஸ்டாலினுக்கு...