×

தஞ்சைத் தரணியில் தாய்மடி தவழ்ந்தேன்.! டெல்டா மாவட்ட பயணம் குறித்து தொண்டர்களுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் மடல்

சென்னை: என் உயிருடன் கலந்திருக்கும் தலைவர் கலைஞரின் அன்பு உடன்பிறப்புகளுக்கு உங்களில் ஒருவன் எழுதும் மடல். “உழவர் ஓதை, மதகு ஓதை, உடைநீர் ஓதை தண்பதங்கொள் சிறந்தார்ப்ப நடந்தாய் வாழி காவேரி” என்ற சிலப்பதிகார வரிகளுக்குச் சிறப்பான உரை எழுதிடும் வண்ணம், கரைபுரளும் காவிரி டெல்டா மாவட்டங்களில், ஓய்வில்லாத இரண்டு நாள் ஆய்வு சுற்றுப் பயணத்தை நிறைவு செய்தபின், நேற்று (ஜூன் 1) காலையில் தலைமைச் செயலகத்தில் அனைத்துத் துறை செயலாளர்களுடன் ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்றேன். அரசின் அறிவிப்புகள் வெற்றுக் காகிதங்களாகவோ வெறும் காற்றில் கலந்து, கரைந்து போவதாகவோ இருந்துவிடாமல், அவை முறையாகச் செயல்படுத்தப்படுகின்றனவா, ஒவ்வொரு அறிவிப்புக்குமான செயல்பாடு எந்த நிலையில் இருக்கிறது என்பது தொடர்பாக, நேற்று 14 துறைகளுடன் ஆய்வு செய்தேன். 4 மணி நேர ஆய்வுக்குப் பிறகு, உயிர்நிகர் தலைவர் கலைஞரின் அன்பு உடன்பிறப்புகளாம் உங்களை மனதில் எண்ணியபடி இந்தக் கடிதத்தை எழுதுகிறேன்.

மே 30-ஆம் தேதி காலையில், நான் என் குடும்பத்தினருடன் ஜனநாயகக் கடமையாற்றும் வாக்குச்சாவடி அமைந்துள்ள ஜஸ்டிஸ் பஷீர் அகமது சையத் (எஸ்.ஐ.இ.டி) மகளிர் கல்லூரியின் விழாவில் பங்கேற்று, பெண் கல்விக்காக நமது அரசு எடுத்து வரும் முயற்சிகளை விளக்கிச் சொல்லி, கல்லூரி நிர்வாகத்தின் செயல்பாடுகளைப் பாராட்டி சுருக்கமாக உரை நிகழ்த்திவிட்டு, விரைவாக விமான நிலையத்திற்கு வந்து, திருச்சிக்குப் பயணித்தேன். திருச்சியில் கழகத்தினரின் வரவேற்பு எனக்கு மிகுந்த மகிழ்ச்சியைத் தந்தாலும், மக்கள்நலன் அதைவிட மனதில் மிகுதியாக மேலோங்கி இருந்தது. பாதாளச் சாக்கடைத் திட்டம், சாலை விரிவாக்கத் திட்டம் ஆகிய பணிகள் மேற்கொள்ளப்படுவதால் திருச்சி மாநகரப் பகுதிக்குள் வாகனப் போக்குவரத்து சீராக இல்லை என்பதை நேரில் அறிந்து, உடனடியாக மாநகராட்சி அலுவலகத்திற்குச் சென்று ஆணையர் உள்ளிட்ட அதிகாரிகளிடம் ஆய்வு நடத்தி, பணிகளை விரைந்து முடித்து, பொதுமக்கள் நலன்பெற ஆவன செய்ய அறிவுறுத்திவிட்டுப் புறப்பட்டேன்.

மதிய உணவு நேரம் என்றாலும் கழக உணர்வே உள்ளத்தில் மிகுந்திருந்தது. அதுவும் திருச்சி என்றாலே கழகத்திற்குத் திருப்புமுனைகளை உருவாக்கிய மலைக்கோட்டை மாநகராயிற்றே! எத்தனை எத்தனை தீரர்கள்! அந்த வரிசையில் கழகத்தின் மூத்த முன்னோடியும் சிந்தனையாளருமான   திருச்சி செல்வேந்திரன் அவர்களின் நினைவு வந்தது. மாவட்டக் கழகச் செயலாளரான மாண்புமிகு அமைச்சர் கே.என்.நேரு அவர்களிடம் சொல்லி, செல்வேந்திரன் அவர்களின் இல்லத்திற்கு நேரில் சென்று, அவரது உடல்நலனை விசாரித்தேன். அப்போது அவருக்குத்தான் எத்தனை மகிழ்ச்சி!

அந்த மனநிறைவுடன் அரசு விடுதிக்கு வந்து மதிய உணவை முடித்துவிட்டு, 4 மணியளவில் திருச்சியிலிருந்து வேளாங்கண்ணிக்குப் புறப்பட்டேன். 3 மணிநேரத்தில் பயணம் செய்யக்கூடிய தொலைவுதான் என்றாலும், வழியெங்கும் கழகத்தினரிடமும் பொதுமக்களிடமும் காவிரி போல பொங்கிய பேரன்பினால் இரவு 9.30 மணிக்கு மேல்தான் வேளாங்கண்ணியை அடைய முடிந்தது.

பயண வழியில் முதலில் தஞ்சாவூரில் வரவேற்பு அளித்தனர். அப்போது, வா.வீரசேகரன் என்ற கழகத் தோழர் என்னிடம் ஒரு காகிதத்தைக் கொடுத்தார். அது என்னவென்று பார்த்தபோதுதான், அது வெறும் காகிதமல்ல, அரிய ஆவணம் என்பது தெரிந்தது. அது என்னவென்றால், திருவாரூர் கமலாம்பிகா நகரக் கூட்டுறவுச் சங்கத்தில் நமது தலைவர் முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களின் தந்தையும் எனது தாத்தாவுமான முத்துவேலர் அவர்கள் தனக்கிருந்த பங்குகளை, தன் வயதுமூப்பின் காரணமாக, நம் தலைவருக்கு மாற்றித் தரக்கோரிய ஆவணம் அது. இந்தியாவுக்கு சுதந்திரம் கிடைப்பதற்கு ஓராண்டுக்கு முன்பாக 1946-இல், கூட்டுறவு வங்கியின் ஆவணத்தில் தாத்தா முத்துவேலரின் கையெழுத்தையும் தலைவர் அவர்களின் ஆங்கில எழுத்துகளில் அமைந்த கையெழுத்தையும் பார்த்தபோது பரவசமாக இருந்தது.

தஞ்சை மாவட்டம் பாபநாசம் பகுதியில் பீமனோடை வடிகாலைத் தூர்வாரும் பணிகளை நேரில் பார்வையிட்டேன். மக்களின் முதன்மைச் சேவகனாக - முன்களப் பணியாளனாகச் செயல்படும் முதலமைச்சர் பொறுப்பில் உள்ள என்னைப் பார்ப்பதற்கு, பொதுமக்கள் திரண்டிருந்தனர். “இவ்வளவு கடுமையா அலையுறீங்களே.. உடம்பைப் பார்த்துக்கோங்க” என்று நெகிழ்வோடும் நெஞ்சம் நிறைந்த அக்கறையோடும் சொன்னவர்கள் உண்டு. குழந்தைகளும் அதிகளவில் வந்திருந்தனர். அவர்களுக்குக் கொடுப்பதற்காகவே என் காரில் ஒரு டப்பா சாக்லேட்டுகளை வைத்திருந்தேன். அவற்றைக் குழந்தைகளிடம் கொடுத்து அவர்களைப் போலவே நானும் மகிழ்ந்தேன்.

இரவு 7 மணி மன்னார்குடி வந்தபோது, தலைவர் கலைஞரின் நினைவுகளுடன் தஞ்சை மாவட்டக் கழகத் தளகர்த்தராக விளங்கிய மன்னை அவர்களும் நினைவில் நிழலாடினார். மன்னை அவர்களின் வீட்டுக்குச் சென்று, கொள்கைப் பற்றுடன் திகழும் அவர்களின் குடும்பத்தாருடன் தேநீர் குடித்துவிட்டுப் பயணத்தைத் தொடர்ந்தேன். வேளாங்கண்ணி சென்றடையும் வரையில், குறைந்தபட்சம் 50ஆயிரம் பேரையாவது பார்த்திருப்பேன். வரவேற்பு அளித்த நிர்வாகிகள், வாழ்த்து முழக்கம் எழுப்பிய தொண்டர்கள், வீட்டிலிருந்து வேகமாக வெளியே வந்து அன்பைப் பொழிந்த பொதுமக்கள் என எத்தனை ஆர்வம்! எவ்வளவு ஆர்ப்பரிப்பு! இந்த ஆட்சி மீதுதான் எத்தகைய நம்பிக்கை! அவர்களின் முகத்தில் வெளிப்பட்ட புன்னகையே அத்தனைக்கும் விடையாக இருந்தது.

அடுத்த நாள் (மே 31) காலையில் 8 மணிக்கெல்லாம் நாகை மாவட்டத்தில் தூர்வாரும் பணிகளையும், வேளாண் பணிகளையும் பார்வையிடப் புறப்பட்டோம். காத்திருந்த கழகத்தினர், பொதுமக்களின் அன்பான வாழ்த்துகளை ஏற்றுக்கொண்டு, நாகையில் முதல் இடமாக கல்லாறு பகுதியைப் பார்வையிட்டபோது, கீழ்வேளூர் சட்டமன்றத் தொகுதி உறுப்பினரான மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தோழர் நாகை மாலி அவர்களும் நாகப்பட்டினம் சட்டமன்றத் தொகுதி உறுப்பினர் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சகோதரர் ஆளூர் ஷாநவாஸ் அவர்களும் இருந்தனர். வேளாண்துறை சார்பில் உழவர்களுக்கு வாடகைக்குத் தரப்படும் இயந்திரங்களைப் பார்வையிட்டோம்.

அருகிலுள்ள மயிலாடுதுறை மாவட்டத்திற்குச் சென்றபோது, எல்லையிலேயே நல்ல வரவேற்பு. மயிலாடுதுறை மாவட்டத்தில் இருந்து ரஷ்யா சென்று மருத்துவம் படித்துச் சாதித்துள்ள விஜயலட்சுமியையும்; கணவரை இழந்த நிலையில் மனந்தளராமல் மீன்களைச் சுத்தம் செய்து தன் மகளை மருத்துவராக்கிய அவரது தாயார் ரமணி அவர்களையும் வாழ்த்தி முந்தைய நாள் பதிவிட்டிருந்தேன். திருக்கடையூரில் தாயையும் மகளையும் நேரில் சந்தித்து எனது பாராட்டுகளைத் தெரிவித்து மகிழ்ந்தேன். மயிலாடுதுறை மாவட்டத்தின் சில பகுதிகளில் ஏற்கனவே தண்ணீர் வசதி இருப்பதால் நடவுப் பணிகள் நடந்து கொண்டிருந்தன. இயந்திரம் மூலமாக நடவு, நேரடி நெல் விதைப்பு, தூர்வாரும் பணிகள் இவற்றைப் பார்வையிட்டுச் செல்லும் வழியில் கண்ணில்பட்டு, நெஞ்சை ஈர்த்தது ‘தில்லையாடி’.  அப்போது கழக நிர்வாகி ஒருவர், “எதிர்ப்புறத்தில்தான் தலைவர் கலைஞர் கட்டிய மண்டபம் இருக்கிறது” என்றார். தென்னாப்பிரிக்காவில் உத்தமர் காந்தியடிகள் நடத்திய சத்தியாகிரகப் போராட்டத்திற்குத் துணைநின்ற தமிழர்களில் மறக்க முடியாத மாதரசி  தில்லையாடி வள்ளியம்மை. இளம் வயதில் போராட்டக் களம் கண்டு, சிறைப்பட்டு, உடல் நலிவுற்ற நிலையிலும், காந்தியக் கொள்கையில் உறுதியாக இருந்து உயிர் நீத்த வீரப் பெண்மணி. அவரது தியாகத்தைப் போற்றும் வகையில் தலைவர் கலைஞர் கட்டிய மண்டபம்தான் அது.

அங்கிருந்து திருவாரூர் மாவட்டத்திற்குப் பயணம். நல்லாடை, பேரளம் ஆகிய இடங்களில் தூர்வாரும் பணிகளைப் பார்வையிட்டேன். பேரளம் ரயில்வே கிராஸிங்கைக் கடக்கும்போது என் சிறு வயது நினைவுகள் வட்டமிட்டன. பள்ளிக்கூட நாட்களில் அம்மாவின் ஊருக்கு வரும்போது, பூந்தோட்டம் ரயில்வே ஸ்டேஷனில் இறங்கித்தான் மாட்டு வண்டியில் செல்வோம். தாய் பிறந்த மண்ணுக்கு வரும்போது என் தாயார் தயாளு அம்மாள் மனதில் எழும் மகிழ்ச்சியும் உறவினர்கள் காட்டும் அன்பும் நெஞ்சை விட்டு அகலாதவை.

அதே பேரளத்தில்தான் பேரறிஞர் அண்ணாவின் வளர்ப்பு மகனான பரிமளம் அவர்களுக்கும் பெண் எடுத்திருந்தனர். அதனால், தலைவர் கலைஞர் குடும்பத்தைப் போலவே பேரறிஞர் அண்ணா குடும்பத்திற்கும் பேரளத்துடன் தொடர்பு உண்டு. பேரறிஞர் அண்ணா - முத்தமிழறிஞர் கலைஞர் ஆகியோரின் நினைவுகள் எப்படி நெஞ்சை விட்டு நீங்காதோ அதுபோலவே சிறுவயது நினைவுகளும் அகலாது அலைமோதின. அவற்றை மீட்டெடுப்பதுபோல என்னுடைய மாமா தெட்சிணாமூர்த்தி அவர்கள் 99 வயதிலும் ஆர்வத்துடன் வந்து வரவேற்றார். நான் திடுக்கிட்டு, “நீங்க ஏன் இந்த வயதில் சிரமப்படுறீங்க? நானே வீட்டுக்கு வந்திருப்பேனே!” என்றேன். கழகப்பற்று மிகக் கொண்டவரான மாமா, “உன்னைப் பார்த்து வாழ்த்து சொல்லணும்னுதான் வந்தேன். ரொம்ப நல்லா நிர்வாகம் பண்ணிக்கிட்டிருக்க நீ” என்றபோது நெகிழ்ந்து விட்டேன்.

திருவாரூரை நெருங்க நெருங்க வரவேற்பும் அதிகமானது. தமிழ் காக்கத் தளராது போராடிய நம் தலைவர் முதன்முதலில் தமிழ்க்கொடி ஏந்திப் போராடிய மண் அல்லவா! “அப்பா போலவே நீங்களும் மக்களைப் பார்த்ததும் காரை நிறுத்தி, நலம் விசாரிக்கிறீங்க” என்று மக்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். திருவாரூர் சன்னதி தெருவில் உள்ள வீட்டிற்குச் சென்று சாப்பிட்ட பிறகு, உடனடியாக அருகிலுள்ள காட்டூரில் நம் தலைவரின் தாயாரும் என் பாட்டியுமான அஞ்சுகம் அம்மையார் நினைவிடம் சென்று மரியாதை செலுத்தினேன். அந்த நினைவிடத்தின் அருகிலேயே நம் உயிர்நிகர் தலைவருக்கான அருங்காட்சியகம் தயாளு அம்மாள் அறக்கட்டளை சார்பில் சிறப்பாக அமைக்கப்பட்டு வருகிறது. அந்த அருங்காட்சியகத்தையும், அதன் பின்பகுதியில் அமைக்கப்படும் பெரிய அரங்கத்தையும் நேரில் விளக்கினார் எ.வ.வேலு.

திருவாரூரிலிருந்து திருச்சி விமான நிலையத்திற்கு வந்தபோது அங்கும் மக்கள் மனுக்களுடன் காத்திருந்தனர். நரிக்குறவர் சமுதாயத்தைச் சேர்ந்தவர்களும் நம்பிக்கையுடன் வந்திருந்தனர். முதலமைச்சரிடம் மனு கொடுத்தால் கவனிக்கப்படும்,  உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்கிற மக்களின் எண்ணத்தின் வெளிப்பாடுதான் இது. அவர்களின் நம்பிக்கையை நிறைவேற்றுகிற வகையில்தான், காவிரிப் படுகை மாவட்டங்களில் ஆய்வுப் பணியை முடித்துத் திரும்பிய வேகத்தில், அடுத்த நாளே தலைமைச் செயலகத்தில் துறை வாரியான இருநாள் ஆய்வுப் பணிகள் வேகம் பெற்றன.

தமிழ்நாட்டின் முதலமைச்சராக ‘யாதும் ஊரே’ என்ற பொறுப்புணர்வுடன் அனைத்து ஊர்களின் முன்னேற்றத்திற்கும் பாடுபட்டாலும், காவிரி டெல்டாவுக்கு வரும்போது தாய்மடியைத் தேடி வந்து தவழ்கின்ற குழந்தை உணர்வு ஏற்படுகிறது. அதிலும் திருவாரூர் என்கிறபோது தலைவர் கலைஞரின் காலடிச் சுவடுகளைக் காண்பது போன்ற உணர்வில் மெய்சிலிர்ப்பது வழக்கமாக இருக்கிறது. அது, நம் ஆருயிர்த் தலைவர் போல என்றும் ஓயாது உழைக்க வேண்டும் என்ற தளராத ஊக்கத்தைத் தருகிறது.  

‘யாதும் ஊரே, யாவரும் கேளிர்’ என்று பாடிய புலவரே கணியன் பூங்குன்றன் என்று தன் பெயருடன், தனது ஊரான பூங்குன்றத்தைச் சேர்த்துக் கொண்டார் என்று சொல்வார் முத்தமிழறிஞர் கலைஞர். காவிரியும் அதன் கிளை ஆறுகளும் பாயும் இடங்களுக்குச் செல்லும்போது அதுபோன்ற உணர்வுதான் எனக்கும். என்ன இருந்தாலும் அடிப்படையில் நான் டெல்டாகாரனாயிற்றே! எனவும் தெரிவித்துள்ளார்.

Tags : Tanjore Dharani ,MK Stalin ,Delta district , I crawled mother in Tanjore Dharani.! Chief MK Stalin's letter to volunteers about his Delta district trip
× RELATED மறைந்த முன்னாள் அமைச்சர்...