ஆத்தூர் அருகே மைனர் பெண் திருமணத்தை நடத்தி வைத்த அதிமுக எம்எல்ஏ: அதிகாரிகள் விசாரணை

ஆத்தூர்: ஆத்தூர் அருகே மைனர் பெண் திருமணத்தை அதிமுக எம்எல்ஏ நடத்தி வைத்த நிலையில் வருவாய்த்துறையினர் விசாரித்து வருகின்றனர்.சேலம் மாவட்டம், ஆத்தூர் நகராட்சி செல்லியம்பாளையம் பகுதியைச் சேர்ந்த கிருஷ்ணன் மகன் வெங்கடேசுக்கும், அதே பகுதியைச் சேர்ந்த பெண்ணுக்கும் நேற்று அங்குள்ள கோயிலில் அதிமுக ஒன்றிய செயலாளர் ரஞ்சித்குமார், கூட்டுறவு சங்க தலைவர் கோபி ஆகியோர் தலைமையில் திருமணம் நடைபெற்றது. ஆத்தூர் தொகுதி அதிமுக எம்எல்ஏ ஜெய்சங்கர் திருமணத்தை நடத்தி வைத்தார்.  இந்நிலையில், மணப்பெண்ணுக்கு 18 வயது நிரம்பாத நிலையில் திருமணம் செய்து வைத்ததாக தகவல் வெளியானது. இதுபற்றிய வீடியோவும் வைரலானது. இதன்பேரில், ஆத்தூர் போலீசார் மற்றும் வருவாய்த்துறையினர் சென்று விசாரணை நடத்தினர்.

ஆனால், அங்குள்ள சமுதாய நலக்கூடத்தில் விருந்து சாப்பிட்டுக் கொண்டிருந்தவர்கள் உரிய பதிலளிக்கவில்லை. மேலும், மணமக்கள் மற்றும் அவரது பெற்றோர் உள்ளிட்ட உறவினர்கள் யாரும் அங்கு இல்லை. இதனால், அங்கிருந்து திரும்பினர்.  இந்நிலையில, நேற்று மதியம் சேலம் மாவட்ட குழந்தைகள் நல அலுவலர்கள் மற்றும் வருவாய்த்துறையிர் மீண்டும் அப்பகுதிக்கு சென்று விசாரணையில் ஈடுபட்டனர். அதிகாரிகள் வருவதை அறிந்ததும் உறவினர்கள் மற்றும் பெற்றோர் ஓட்டம் பிடித்ததால் மணமக்களுக்கு உரிய வயது சான்றிதழ் உள்ளிட்ட ஆவணங்களை பெற முடியவில்லை. இதுகுறித்து தொடர்ந்து விசாரணை நடைபெறும். மைனர் திருமணமாக இருந்தால் சட்டப்படியான நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

Related Stories: