திருப்பூரில் 2 மகன்களுடன் பெண் படுகொலை: போலீஸ் தேடிய கள்ளக்காதலன் கிணற்றில் குதித்து தற்கொலை

ராமேஸ்வரம் :  திருப்பூரில் 2 மகன்களுடன் பெண் கொலை செய்யப்பட்ட வழக்கில் போலீஸ் தேடி வந்த கள்ளக்காதலன் காங்கயம் அருகே 80 அடி ஆழ பாழுங்கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டார். திருவாரூர் மாவட்டத்தை சேர்ந்தவர் முத்துமாரி (35). இவருக்கு தர்னிஷ் (9), நித்திஷ் (4) ஆகிய 2 மகன்கள் இருந்தனர். கணவரை பிரிந்து மகன்களுடன் திருப்பூர் அருகே மொட்டுவாதோட்டம் பாலாஜி நகரில் வாடகை வீட்டில் வசித்து வந்தார். பனியன் கம்பெனியில் வேலை பார்த்தார். அப்போது வேறு ஒருவருடன் பழக்கம் ஏற்பட்டு கணவன், மனைவிபோல் வாழ்ந்துள்ளனர். இந்நிலையில்  கடந்த 23ம் தேதி காலை முத்துமாரி மற்றும் அவர்களது 2 மகன்களும் இரும்பு கம்பியால் அடித்து கொடூரமாக கொலை செய்யப்பட்டு கிடந்தனர். இது குறித்து திருமுருகன்பூண்டி போலீசார் வழக்குப்பதிந்து உடன் தங்கியிருந்தவரை தேடி வந்தனர்.

விசாரணையில் அவர் குஜராத் மாநிலம் போர்பந்தரை சேர்ந்த கோபால் என்ற கார்த்தி (50) என்பது தெரியவந்தது. அவரை பிடிக்க 8 தனிப்படைகள் அமைக்கப்பட்டன. கோபால் வேலை செய்து வந்த சூப்பர் மார்க்கெட்டில் அவரது உருவம் பதிவான போட்டோவை கைப்பற்றி விசாரணை நடத்தி வந்தனர். அப்போது கோபால் கடந்த 2 நாட்களுக்கு முன்பு  திருப்பூர் மாநகர பகுதிகளில் சுற்றித்திரிந்ததாகவும், காங்கயம் அருகே படியூர் பகுதியில்  சைக்கிளில் சுற்றித்திரிந்ததாகவும் கண்டுபிடிக்கப்பட்டது. இதனைத்தொடர்ந்து போலீசார் அங்கு கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர். இந்த நிலையில் நேற்று காலை படியூர் அருகே  80 அடி  பாழுங்கிணற்றில் சைக்கிளுடன் ஒருவர் பிணமாக கிடப்பதாக காங்கயம் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. தீயணைப்பு துறையினர் வரவழைக்கப்பட்டு சடலத்தை மீட்டனர். இதில் அவர் முத்துமாரியின் கள்ளக்காதலன் கோபால் என்பது தெரியவந்தது. போலீசார் தேடுவதை அறிந்த கோபால்  கிணற்றில் குதித்து தற்கொலை செய்திருக்கலாம் என தெரிகிறது. அவர் எதற்காக கள்ளக்காதலி மற்றும் 2 மகன்களை கொலை செய்தார் என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Related Stories: