×

ரூ14 லட்சம் கடன் வாங்கி ஏமாற்றி விட்டதாக ஓய்வுபெற்ற ரயில்வே ஊழியர் தீக்குளித்து தற்கொலை முயற்சி: தலைமை செயலகம் அருகே பரபரப்பு

சென்னை : சென்னை தலைமை செயலகம் பேருந்து நிறுத்தம் அருகே நேற்று முதியவர் கையில் பையுடன் நின்று கொண்டிருந்தார். திடீரென யாரும் எதிர்பார்க்காத நிலையில் அவர் கையில் கொண்டு வந்த மண்ணெண்ணெயை உடலில் ஊற்றி தீ வைத்துக் கொண்டார். பொதுமக்கள் தீயை அணைத்து அவரை மீட்டனர். தகவலறிந்த கோட்டை போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து தீக்குளித்த முதியவரை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர்.

அங்கு அவர் 60% தீக்காயங்களுடன் சிகிச்சை பெற்று வருகிறார். பின்னர் சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தினர். அதில், திருவள்ளூர் மாவட்டம் திருவாலங்காடு நிர்மலா நகரை சேர்ந்த பொன்னுசாமி (72) என்றும், ரயில்வே ஊழியராக பணியாற்றி ஓய்வு பெற்றவர் என தெரியவந்தது. இவர் கொண்டு வந்த பையை போலீசார் ஆய்வு செய்தபோது, புகார் மனு இருந்தது. அதில், தனக்கு தெரிந்த ஓய்வு பெற்ற ரயில்வே ஊழியர் சுப்பிரமணி (எ) ஆனந்த் என்பவரிடம் ஓய்வுக்கு பிறகு சேர்த்து வைத்த ₹14 லட்சத்தை கடன் கொடுத்ததாகவும், திருப்பி கேட்டபோது, அவர் பணத்தை கொடுக்காமல் ஏமாற்றி வந்துள்ளார். இதுகுறித்து, புகார் அளித்தும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே சம்பந்தப்பட்ட நபரிடம் இருந்து பணத்தை மீட்டு தரவேண்டும் என்று முதல்வர் தனிப்பிரிவில் புகார் அளிப்பதற்கான மனுவில் கூறப்பட்டிருந்ததாக போலீசார் தெரிவித்தனர். இதையடுத்து, முதியவரின் புகார் மனு மீது போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவத்தால் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

Tags : Chief Secretariat , Retired railway employee commits suicide by setting himself on fire for defrauding Rs 14 lakh
× RELATED வேட்பாளர்களிடமிருந்து வாக்களிக்க...