பின்னணியில் இருந்து இயக்கும் அதிபர் கோத்தபய 21வது சட்டத் திருத்தத்துக்கு ஆளும் கூட்டணி திடீர் எதிர்ப்பு: இலங்கையில் பிரதமர் ரணிலுக்கு முட்டுக்கட்டை

கொழும்பு : இலங்கையில் அரசியலமைப்பு சட்டத் திருத்தம் 21ஐ அறிமுகப்படுத்தும் பிரதமர் ரணில் விக்ரமசிங்கேவின் திட்டத்துக்கு ஆளும் கூட்டணிக்குள் கடும் எதிர்ப்பு கிளம்பி உள்ளது. இலங்கையில் தவறான ஆட்சி நிர்வாகத்தினால் கடும் நிதி மற்றும் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டுள்ளது. இதற்கு காரணமான அதிபர் கோத்தபய, மகிந்த ராஜபக்சே உள்ளிட்டோர் பதவி விலகவும் கோரிமக்கள் போராட்டத்தில் இறங்கினர். இதையடுத்து, மகிந்த தனது பிரதமர் பதவியை ராஜினாமா செய்த பிறகு, ரணில் விக்கிரமசிங்கே பிரதமரானார். நாட்டின் நலிவடைந்த பொருளாதாரத்தை சீரமைக்க அவரே நிதியமைச்சராகவும் பொறுப்பேற்றார். இந்நிலையில், நாடு முன் எப்போதும் சந்தித்திராத அரசியல் குழப்பம், பொருளாதார சீரழிவில் இருந்து விடுபட, அதிபரின் அதிகாரத்தை குறைத்து நாடாளுமன்றத்துக்கு கூடுதல் அதிகாரம் வழங்கும் 21வது சட்ட திருத்தத்தை நிறைவேற்றும்படி எதிர்க்கட்சிகள் வலியுறுத்தி வருகின்றன. இது தொடர்பாக கடந்த ஞாயிற்றுக்கிழமை அனைத்து கட்சிகளுடனும்  ஆலோசனை நடத்திய பிரதமர் ரணில், 21வது சட்ட திருத்தத்தை அமல்படுத்த ஒருமித்த கருத்து ஏற்பட்டு இருப்பதாக அறிவித்தார். அதிபர் கோத்தபயவும் இதற்கு முழு ஆதரவு அளிப்பதாக தெரிவித்தார்.

ஆனால், இதற்கு ஆளும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனா கூட்டணியில் கடும் எதிர்ப்பு கிளம்பி உள்ளது. அதிபரின் அதிகாரத்தை குறைக்கும் சட்டத் திருத்தத்தை விட, நெருக்கடியில் உள்ள பொருளாதாரத்தை மீட்டெடுப்பதுதான் முதல் கடமை என்று ஒரு தரப்பினரும், பொருளாதார நெருக்கடியை சமாளிக்க தேவையான சர்வதேச நிதி உதவியை பெறுவதற்கு இந்த சட்டத் திருத்தம் மேற்கொள்ளப்பட வேண்டும் என்று ஒரு தரப்பினரும் கூறி வருகின்றனர். முக்கியமாக இரட்டை குடியுரிமை வைத்திருக்கும் அதிபர் கோத்தபயவின் தம்பியும் முன்னாள் நிதியமைச்சருமான பசில் ராஜபக்ச இதற்கு கடும் ஆட்சேபம் தெரிவித்துள்ளார். இதற்கு முக்கிய காரணம் 21வது சட்ட திருத்தம் இரட்டை குடியுரிமைக்கு தடை விதிக்கிறது. இத்திருத்தத்தை கொண்டு வர முயற்சித்தால் ஆளும் கூட்டணியில் இருந்து விலகுவதாக 50 எம்பி.க்கள் எச்சரித்துள்ளனர்.  இதனால், அரசு பெரும்பான்மை இழக்கும் சூழல் ஏற்படும். எனவே, என்ன செய்வதென்று தெரியாமல் பிரதமர் ரணில் திணறி வருகிறார். இந்த திடீர் எதிர்ப்பின் பின்னணியில் அதிபர் கோத்தபய இருப்பதாக சந்தேகம் எழுந்துள்ளது. தனது அதிகாரம் பறிக்கப்படுவதை விரும்பாத அவர், ஆளும் கூட்டணி கட்சி எம்பி.க்களை தூண்டி விட்டு இருப்பதாக கருதப்படுகிறது.இலங்கையின் பொருளாதார வளர்ச்சியை மீட்டெடுக்க உதவும் விதத்தில் கொழும்பில் உள்ள இந்திய தூதரகம், இரு நாடுகளும் பயனடையும் வகையில் வர்த்தக கூட்டமைப்பு நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்துள்ளது.

Related Stories: