×

4 மணி நேரம் போராடி ஜோகோவிச்சை வீழ்த்தினார் நடால்

பிரெஞ்ச்: ஞ்ச் ஓபன் ஆண்கள் ஒற்றையர் பிரிவு காலிறுதியில் நம்பர் 1 வீரர்  ஜோகோவிச்சுடன் (35 வயது, செர்பியா) மோதிய ஸ்பெயின் நட்சத்திரம் ரபேல் நடால் (35 வயது, 5வது ரேங்க்) 4 மணி, 12 நிமிடம் கடுமையாகப் போராடி வென்று 15வது முறையாக இத்தொடரின் அரையிறுதிக்கு முன்னேறியுள்ளார். டென்னிஸ் ரசிகர்களிடையே மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருந்த இப்போட்டியில், அதிரடியாக விளையாடி புள்ளிகளைக் குவித்த நடால் முதல் செட்டை 6-2 என எளிதில் கைப்பற்றி முன்னிலை பெற்றார். 2வது செட்டில் ஜோகோவிச் 6-4 என வென்று பதிலடி கொடுக்க சமநிலை ஏற்பட்டது. 3வது செட்டில் முழுமையாக ஆதிக்கம் செலுத்திய நடால் 6-2 என வென்று மீண்டும் முன்னிலை பெற்றார். இதைத் தொடர்ந்து, 4வது செட் ஆட்டத்தில் அனல் பறந்தது.

இரு வீரர்களும் விடாப்பிடியாகப் போராட ஆட்டம் டை பிரேக்கருக்கு சென்றது. அதில் சிறப்பாக விளையாடி ஜோகோவிச்சை முறியடித்த நடால் 6-2, 4-6, 6-2, 7-6 (7-4) என்ற செட் கணக்கில் வென்று அரையிறுதிக்கு தகுதி பெற்றார்.
ரசிகர்களுக்கு நல்ல விருந்தாக அமைந்த இப்போட்டி 4 மணி, 12 நிமிடங்களுக்கு நீடித்தது. பிரெஞ்ச் ஓபனில் நடால் இதுவரை 113 போட்டியில் 110 வெற்றிகளை பெற்றுள்ளார். ஏற்கனவே இங்கு 13 முறை சாம்பியன் பட்டம் வென்று மகத்தான சாதனை படைத்துள்ள அவர், கடந்த ஆண்டு அரையிறுதியில் ஜோகோவிச்சிடம் அடைந்த தோல்விக்கு பழிதீர்த்தார். இருவரும் 59 முறை மோதியுள்ளதில் ஜோகோவிச் 30 வெற்றி, நடால் 29 வெற்றி பெற்றுள்ளனர்.
நாளை நடைபெற உள்ள அரையிறுதியில் ஜெர்மனியின் அலெக்சாண்டர் ஸ்வெரவுடன் நடால் மோத உள்ளார். ஸ்பெயினின் இளம் வீரர் கார்லோஸ் அல்கராசுடன் காலிறுதியில் மோதிய ஸ்வெரவ் 6-4, 6-4, 4-6, 7-6 (9-7) என்ற செட் கணக்கில் வெற்றி பெற்றார்.


Tags : Nadal ,Djokovic , Nadal fought for 4 hours and knocked down Djokovic
× RELATED பிஎன்பி பாரிபா ஓபன் டென்னிஸ் ஜோகோவிச்சை வீழ்த்திய சென்னை ஓபன் ரன்னர்!