×

கோயில் நிலங்கள் அளவீடு பணி துவக்கம்: முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆட்சியில் ஒரு ஆன்மிக புரட்சி: அமைச்சர் பி.கே.சேகர்பாபு பேட்டி

உத்திரமேரூர் : முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆட்சிகாலத்தில், ஆன்மிகத்தில் ஒரு புரட்சி நடப்பதாக அமைச்சர் பி.கே.சேகர்பாபு கூறினார்.தமிழகம் முழுவதும் உள்ள கோயிலுக்கு சொந்தமான நிலங்கள் அளவீடு செய்யும் பணி நடந்து வருகிறது. அதில், இதுவரை 50 ஆயிரம் ஏக்கர் நிலங்கள் அளவீடு செய்யப்பட்டன. இதைதொடர்ந்து, காஞ்சிபுரம் மாவட்டம் உத்திரமேரூர் அடுத்த திருப்புலிவனம் கிராமத்தில் வியாகரபுரீஸ்வரர் கோயிலுக்கு சொந்தமான நிலங்கள் அளவீடு செய்யும் பணிக்கான துவக்க விழா நேற்று நடந்தது.கலெக்டர் டாக்டர் ஆர்த்தி தலைமை தாங்கினார். காஞ்சி திமுக தெற்கு மாவட்ட செயலாளர் க.சுந்தர்  எம்எல்ஏ, எம்பி செல்வம்,  காஞ்சி எம்எல்ஏ எழிலரசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இந்து அறநிலைத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு, சிறு குறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன் ஆகியோர் கலந்து கொண்டு 50,001வது  ஏக்கர் நிலங்கள் அளவீடு செய்யும் பணியை துவக்கி வைத்தனர்.

தொடர்ந்து  அமைச்சர் சேகர்பாபு, செய்தியாளர்களிடம் கூறியதாவது, தமிழக முதல்வர் தலைமையிலான அரசு கோயில்களில் உள்ள தெப்பக் குளங்கள், நந்தவனங்கள் ஆகியவற்றை சீரமைத்து பக்தர்கள் மகிழ்ச்சி பொங்க இறை தரிசனம் பெற அனைத்து கட்டமைப்பு வசதிகளையும் உருவாக்கப்படுகிறது.  மேலும் கோயில்களுக்கு சொந்தமான பல்வேறு ஆவணங்களில்  சுமார் 4 கோடி பக்கங்களை பதிவேற்றம் செய்யும் பணி நடக்கிறது. அதேபோல் கோயிலின் சார்பில் ஏற்கனவே உள்ள அந்தந்த கோயில் சொத்துக்கள் இணையதளத்தில் வெளியிடும் பணிகளும் நடந்து கொண்டிருக்கின்றன.இதையொட்டி, கோயிலுக்கு சொந்தமான  இடங்களை ரேடார் கருவி மூலம் நில அளவீடு செய்து, அந்த கோயிலுக்கு உண்டான நிலங்களை  முழுமையாக பாதுகாக்கும் வகையில் தற்போது திருப்புலிவனம் பகுதிகளில் உள்ள ஈஸ்வரன் கோயிலுக்கு சொந்தமான 9.2 ஏக்கர் நிலம் அளவீடு செய்யும் பணி துவங்கப்பட்டுள்ளது. இந்த பணி கடந்த ஆண்டு மயிலாப்பூர் கோயிலில் 8.9.2021 அன்று 4.52 ஏக்கர் நிலம் அளவீடு செய்யும் பணி முடிவுற்று, கோயிலின் நிலம் என்பதை குறிப்பிடும் வகையில்  ஹெச்ஆர்சிஇ என்ற எழுத்துகள் பொறிக்கப்பட்ட  கருங்கல் பதிக்கப்பட்டுள்ளன. அதேபோல் திருப்புவனம் பகுதியில் அளவீடு செய்யும் பணி இன்று துவங்கியுள்ளது. தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆட்சிகாலத்தில், இது ஒரு ஆன்மிகத்தில் ஒரு புரட்சி எனவும் எடுத்துக் கொள்ளலாம். இந்த பணி மேலும் தொடரவுள்ளது. இந்த நில அளவீடு பணிக்காக ஏற்கனவே 150 பணியாளர்கள் அமைக்கப்பட்டு, சுமார் 100 மண்டலங்களில் 50 குழுக்களாக பிரித்து பணிகள் நடந்து கொண்டிருக்கின்றன.

Tags : Temple Land Survey ,MK Stalin ,Minister ,BK Sekarbabu , Temple Land Survey Launch: A Spiritual Revolution in the Rule of Chief Minister MK Stalin: Interview with Minister BK Sekarbabu
× RELATED முன்னாள் அமைச்சர் இந்திரகுமாரி...