×

ஆர்.கே.பேட்டை அருகே ஒரே கிராமத்தில் 6 கோயில்களில் கும்பாபிஷேகம்: திரளான பக்தர்கள் பங்கேற்பு

பள்ளிப்பட்டு : ராகவநாயுடுகுப்பம் கிராமத்தில் 6 கோயில்களுக்கு மஹா கும்பாபிஷேக விழா நேற்று வெகு விமரிசையாக நடைபெற்றது‌. இதில், திரளான பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்து வழிபட்டனர். திருவள்ளூர் மாவட்டம் ஆர்.கே.பேட்டை அடுத்த ராகவநாயுடுகுப்பம் கிராமமக்கள் நிதி உதவியுடன் புதிதாக கமலவிநாயகர் கோயில் பொன்னியம்மன் கோயில், கங்கை அம்மன் கோயில், சப்த கன்னியம்மன் கோயில் பக்த ஆஞ்சநேயருக்கு 20 அடி உயரத்தில் சிலை ஆகிய ஐந்து கோயில்கள், மேலும் கிராமத்தில் பழமையான சீதாராமர் கோயிலுக்கு திருப்பணிகள் செய்யப்பட்டுள்ளது. கோயில்களின் திருப்பணிகள் முடிக்கப்பட்டுள்ளநிலையில் திங்கட்கிழமை முதல் புதன்கிழமை வரை மூன்று நாட்கள் நடைபெற்று. மஹாகும்பாபிஷேக விழாவையொட்டி, கோயில்கள் மற்றும் கிராம வீதிகள் வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டு விழாக்கோலம் பூண்டு காணப்பட்டது‌. கோயில்களின் வளாகங்களில் யாக சாலைகள் அமைக்கப்பட்டு கணபதி பூஜை, நவக்கரக ஹோமம், பூர்ணாஹூதி உட்பட நான்கு கால யாகசாலை பூஜைகள் நடைபெற்றது. நேற்று காலை 6 மணிக்கு மஹா பூர்ணாஹுதி பூஜைகளை தொடர்ந்து முதலில் பொன்னியம்மன் கோயில் மஹாகும்பாபிஷேகமும்,  கங்கை அம்மன், சப்த கன்னிகளுக்கு மஹா கும்பாபிஷேகம் நடைபெற்றது.

மஹா கும்பாபிஷேக விழாவில், புனித நீர் கலசங்களை புறப்பாடு நடைபெற்று கோபுர கலசத்திற்கு மேளத்தாளங்கள் முழங்க சிவாச்சாரியார் குழுவினர் மஹா கும்பாபிஷேகம் நடத்தினர். இறுதியாக கிராமத்தில் புராதன சீதாராமர் கோயில் மஹா கும்பாபிஷேகம் 12 மணிக்கு நடைபெற்றது. ஆர்.கே.பேட்டை சுற்றுவட்டார பகுதிகளிலிருந்து திரளான பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர். மஹா கும்பாபிஷேக விழாவில் பாமக மாநில துணைத்தலைவர் வைத்திலிங்கம், அதிமுக முன்னாள் எம்.பி. திருத்தணி கோ.அரி, திருத்தணி முன்னாள் எம்எல்ஏ பி.எம். நரசிம்மன், பாமக மாவட்ட செயலாளர் தினேஷ்குமார், மாவட்ட தலைவர் விஜயன், ஆர்.கே.பேட்டை மேற்கு ஒன்றிய திமுக செயலாளர் சி.என்‌‌.சண்முகம், அதிமுக ஒன்றிய செயலாளர் நாகபூண்டி கோ.குமார் உட்பட பல்வேறு கட்சிகளின் நிர்வாகிகள் உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் பெண்கள், பக்தர்கள் உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர். கும்பாபிஷேகம் நடைபெற்ற மூன்று நாட்களும் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.  திருக்கோயில் மஹா கும்பாபிஷேக விழா ஏற்பாடுகளை ஊராட்சி மன்ற தலைவர் ஆரியம்மா மணி தலைமையில் விழாக்குழுவினர் மற்றும் கிராம மக்கள் சிறப்பாக செய்திருந்தனர்.


Tags : R.R. K. Kumbaphishekam , Kumbabhishekam at 6 temples in the same village near RKpet: Mass participation of devotees
× RELATED தமிழ்நாட்டில் அதிகபட்சமாக ஈரோட்டில் இன்று 108 டிகிரி ஃபாரன்ஹீட் வெயில்!