×

திருச்சி மத்திய சிறை சிறப்பு முகாமில் வாடும் ஈழத்தமிழ் அகதிகளை விடுதலை செய்ய வேண்டும்: பாமக தலைவர் அன்புமணி வலியுறுத்தல்

சென்னை: திருச்சி மத்திய சிறை சிறப்பு முகாமில் வாடும் ஈழத்தமிழ் அகதிகளை விடுதலை செய்ய வேண்டும் என பாமக தலைவர் அன்புமணி வலியுறுத்தியுள்ளார். இதுகுறித்து அன்புமணி வெளியிட்ட டிவிட்டர் பதிவு: திருச்சி மத்திய சிறை வளாகத்தில் உள்ள சிறப்பு முகாமில் அடைக்கப்பட்டுள்ள ஈழத்தமிழ் அகதிகள் தங்களை விடுதலை செய்ய வேண்டும் என்று கோரி 13வது நாளாக உண்ணாவிரதம் மேற்கொண்டு வருகின்றனர். அவர்களில் மூவர் உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். சிறப்பு முகாம் அகதிகள் மீது எந்த குற்றச்சாட்டும் இல்லை... எந்த வழக்கும் நிலுவையில் இல்லை. விடுதலை செய்தால் தாய்நாட்டுக்கு சென்று சொந்தங்களுடன் வாழவே அவர்கள் விரும்புகின்றனர். அவர்களை காரணமே இல்லாமல் சிறப்பு முகாம்களில் அடைத்து வைப்பது மனித உரிமை மீறல் ஆகும்.

சிறப்பு முகாம் என்பது முகாம் அல்ல... அது சிறையை விட கொடுமையானது; மனிதர்கள் வாழத் தகுதியற்ற இடம். கடந்த காலங்களில் பலமுறை அவர்கள் போராடிய போது விரைவில் விடுதலை செய்வதாக வாக்குறுதி அளித்த தமிழக அரசு இன்று வரை விடுதலை செய்யவில்லை. தமிழ்நாட்டில் ஈழத்தமிழர் நலனுக்காக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பல நடவடிக்கைகளை எடுத்துள்ளார். சிறப்பு முகாம் அகதிகளும் ஈழத்தமிழர்கள் தான். காலவரையின்றி அவர்களை அடைத்து வைப்பது நியாயமல்ல. அவர்களை உடனடியாக விடுதலை செய்ய முதல்வர் ஆணையிட வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Tags : Trichy Central Prison Special Camp ,Eilathamil ,Pambaka ,Anmani , Eelam Tamil refugees in Trichy Central Jail should be released: Pamaka leader Anbumani
× RELATED ஆண்டுக்கு இரண்டரை லட்சம் அரசு வேலை...