×

கள்ளநோட்டுகள் புழக்கத்தை கட்டுப்படுத்த புதிய வகை ரூ.500 நோட்டுகள் அச்சடிக்க முடிவு: ரிசர்வ் வங்கி அதிரடி

மும்பை: கள்ள நோட்டுகள் புழக்கத்தை கட்டுப்படுத்த கூடுதல் பாதுகாப்பு அம்சங்களுடன் கூடிய புதிய வடிவத்தில் 500 ரூபாய் நோட்டுகள் அச்சிட ரிசர்வ் வங்கி முடிவு செய்துள்ளது. இதற்காக அமெரிக்காவை சேர்ந்த நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது. இந்தியாவில் தற்போது புழக்கத்தில் உள்ள ரூபாய் நோட்டுகளில் எத்தனை மாற்றங்கள் கொண்டு வந்தாலும், அதை கள்ள நோட்டுகளாக அச்சடித்து புழக்கத்தில் விடும் கும்பலும் அதிகரித்து தான் வருகிறது.

அண்மைக்காலமாக 500 ரூபாய் மற்றும் 2 ஆயிரம் ரூபாய் கள்ள நோட்டுகளும் அதிகளவில் வெளிவந்துள்ளன. 2021 - 2022ம் நிதியாண்டில் மட்டும் 2 லட்சத்து 8 ஆயிரத்து 625 கள்ள நோட்டுகள் கண்டுபிடிக்கப்பட்டு பறிமுதல் செய்யப்பட்டன. இந்த நிதி ஆண்டில் இதுவரை 2 லட்சத்து 30 ஆயிரத்து 971 கள்ள நோட்டுகள் புழக்கத்தில் விடப்பட்டது தெரியவந்துள்ளது. கடந்த நிதியாண்டை விட மிக அதிகமாகும்.

இதற்கிடையே கள்ளநோட்டுகள் புழக்கத்தை கட்டுப்படுத்த அதிகபட்ச மதிப்புள்ள 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகள் தற்போது அச்சடிக்கப்படுவதில்லை. இதனால் கள்ள நோட்டு தயாரிக்காமல் இருக்கும் வகையில் புதிய பாதுகாப்பு அம்சங்களுடன் 500 ரூபாய் நோட்டுகளை வெளியிட ரிசர்வ் வங்கி ஏற்பாடுகளை செய்து வருகிறது. குறிப்பாக கள்ள நோட்டுகளை முற்றிலும் ஒழிக்க 500 ரூபாய் நோட்டுகளில்  சில மாற்றங்களை கொண்டு வர ரிசர்வ் வங்கி முடிவு செய்துள்ளது. இதற்காக அமெரிக்காவை சேர்ந்த நிறுவனத்தின் சிறந்த பாதுகாப்புடன் கூடிய காகிதங்கள் மற்றும் மை பயன்படுத்தபட உள்ளது. விரைவில் புதிய 500 ரூபாய் நோட்டுகள் வெளியாகும் எனக் கூறப்படுகிறது.

அதேபோல் ரூ.100, ரூ.200 நாணயத் தாள்களிலும் புதிய பாதுகாப்பு அம்சங்கள் ஏற்படுத்தப்படுகிறது. உயர் மற்றும் நடுத்தர மதிப்பு நோட்டுகளுக்கு நிறம் மாறாத மை, ஃபாயில் பேட்ச், மூன்று வகையான பாதுகாப்பு இழைகள், மைக்ரோ-துளைகள், காகிதம் மற்றும் மை அடிப்படையிலான குறிச்சொற்கள், நுண்ணிய இயற்பியல் மற்றும் ரசாயன குறிப்பான்கள் உள்ளிட்ட பாதுகாப்பு அம்சங்கள் இந்த ரூபாய் நோட்டுகளில் இருக்கும் என்று கூறப்படுகிறது.

Tags : Counterfeit notes in circulation, new type of Rs.500 note, RBI action
× RELATED கெஜ்ரிவால் கைது குறித்து விமர்சித்த...