குமரி எஸ்.பி. அலுவலகத்தில் புதிய கட்டுப்பாடுகளை தளர்த்த வேண்டும்: பொதுமக்கள் கோரிக்கை

நாகர்கோவில்: குமரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் பொதுமக்களுக்கு கழிவறை, இருக்கை வசதிகள் செய்ய வேண்டும். தற்போது பொதுமக்கள் அமர விதிக்கப்பட்டுள்ள புதிய கட்டுப்பாடுகளை தளர்த்த வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது. குமரி மாவட்ட எஸ்.பி. ஹரிகிரன் பிரசாத் பொறுப்பேற்ற பின் ெபாதுமக்களின் புகார் மனுக்கள் மீது உடனுக்குடன் நடவடிக்கை எடுக்கும் வகையில் பல்வேறு புதிய நடைமுறைகளை அமல்படுத்தி உள்ளார். அதன்படி எஸ்.பி. அலுவலகத்துக்கு வரும் புகார் மனுக்களை விசாரிக்க இன்ஸ்பெக்டர், எஸ்.ஐ. ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.

சுழற்சி முறையில் ஒவ்வொரு காவல் நிலையத்தில் இருந்தும் இன்ஸ்பெக்டர் எஸ்.பி. அலுவலகத்தில் பணியமர்த்தப்பட்டு புகார் மனுக்களை விசாரிக்கிறார். புகார்தாரரிடம் விசாரித்து விட்டு எதிர்மனுதாரரின் செல்போன் நம்பர் இருந்தால் அவரையும் தொடர்பு ெகாண்டு விசாரிக்க வேண்டும்.  ஏற்கனவே காவல் நிலையத்தில் புகார் மனு அளித்திருந்தால் அதன் மீது ஏன்? நடவடிக்கை எடுக்கப்பட வில்லை என்ற விபரத்தை சம்பந்தப்பட்ட காவல் நிலையத்தில் விசாரிக்க வேண்டும். இவ்வாறு விசாரித்து அந்த புகார் மனு தொடர்பான விசாரணை அறிக்கையை மதியம் 1.30க்கு எஸ்.பி.யிடம் சமர்ப்பிக்க வேண்டும். மதியம் 1.45  மணிக்கு எஸ்.பி.,  புகார்தாரர்களை நேரடியாக சந்தித்து புகார் மனு மீதான நடவடிக்கை தொடர்பாக உறுதி அளிக்கிறார்.

தற்போது எஸ்.பி. அலுவலகத்தில் புகார் மனு அளித்தால் உடனடியாக நடவடிக்கை இருப்பதால் தினமும் 50க்கும் மேற்பட்ட புகார்கள் வருகின்றன. இவ்வாறு புகார் அளிக்க வருபவர்கள், எஸ்.பி. அலுவலகத்தில் வாகன பார்க்கிங் பகுதியில் போடப்பட்டுள்ள இருக்கைகளில் அமர வேண்டும். அவர்களுடன் அவரது வழக்கறிஞர் வந்திருந்தால் அமர்ந்திருக்கலாம். மற்றப்படி புகார் மனு அளிப்பவருடன் உறவினர்களோ, நண்பர்களோ வந்திருந்தால் அவர்கள் எஸ்.பி. அலுவலகத்தின் வெளியே தான் அமர்ந்திருக்க வேண்டும்.

எஸ்.பி. அலுவலக நுழைவு வாயில் பகுதியில் பார்வையாளர்கள் அமருவதற்காகவே அங்குள்ள மாமரத்தின் கீழ் பகுதியில் கான்கிரீட் இருக்கைகள் கட்டப்பட்டுள்ளன. பல ஆண்டு காலமாக அங்கு தான் பொதுமக்கள் அமர்ந்து வருகிறார்கள். தற்ேபாது அங்கு யாரும் அமர கூடாது என தடை உத்தரவு போடப்பட்டுள்ளது. இதனால் புகார்மனுதாரருடன் வருபவர்கள் எஸ்.பி. அலுவலகத்தின் வெளியே சாலையோரத்தில் மணிக்கணக்கில் காத்திருக்க வேண்டிய நிலை உள்ளது. இது மட்டுமின்றி காலை 10 மணிக்கு புகார் மனு அளிக்க வந்தால், மதியம் 1.45க்கு எஸ்.பி. பார்த்த பின்னரே செல்ல முடிகிறது. சுமார் 4 மணி நேரம் வரை ஆகிறது.

 இந்த சமயங்களில் கழிவறை செல்ல கூட வசதியில்லாத நிலை உள்ளது. எஸ்.பி. அலுவலகத்தின் கீழ் தளத்தில் கழிவறை உள்ளது. ஆனாலும் அங்கு பொதுமக்கள் அனுமதிக்கப்படுவதில்லை. கழிவறை இருப்பதே தெரியாது. இயற்கை உபாதைகளுக்காக பெரும் சிரமத்தை சந்திக்கிறார்கள். மேலும் பச்சிளம் குழந்தைகளுடன் வருபவர்களும்  அவதிக்குள்ளாகிறார்கள். குடிநீர் வசதி கூட சரிவர இல்லை. பொதுமக்களுக்கு கழிவறை மற்றும் குடிநீர் வசதி செய்வதுடன், மனு அளிப்பவர்களுடன் உடன் வருபவர்கள் எஸ்.பி. அலுவலக வளாகத்தில் உள்ள மாமரத்தின் கீழ் பகுதியில் இருக்கும் காத்திருப்பு பகுதியில் அமர அனுமதிக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.

Related Stories: