×

100 ஆண்டுகளுக்கு பிறகு கீழமாத்தூரில் புரவி எடுப்பு திருவிழா: கிராம மக்கள் மகிழ்ச்சி

சோழவந்தான்: மதுரை மாவட்டம் சோழவந்தான் அருகே கீழமாத்தூரில் 100 ஆண்டுகளுக்கு பிறகு அய்யனார் கோயில் புரவி எடுப்பு விழா சிறப்பாக நடைபெற்றது. கீழமாத்தூர் கிராமத்தில் பழமை வாய்ந்த செவிடு தீர்த்த அய்யனார் கோயில் உள்ளது. இக்கோயிலில் புரவி எடுப்பு விழா சுமார் 100 ஆண்டுகளுக்கு முன்பு நடைபெற்றதாக கூறப்படுகிறது. அதன் பின் இவ்விழா நடைபெற வில்லை. இந்த ஆண்டு கிராமமக்கள் ஒன்று கூடி, கிராமத்தின் பாரம்பரிய புரவி எடுப்பு விழாவை கொண்டாட முடிவு செய்தனர்.

அதன்படி கடந்த மாதம் 24ம் தேதி செல்வ விநாயகர் கோவிலில் காப்புக் கட்டுதலுடன் விழா துவங்கியது. தொடர்ந்து முனியாண்டி கோவில், அங்காள பரமேஸ்வரி கோவில், மந்தை காளியம்மன் கோவில்களில் சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. முக்கிய நிகழ்வாக நேற்று மாலை, வைகை கரையோரம் உள்ள சுள்ள கரையான் முனியாண்டி கோவிலில் இருந்து புரவி(குதிரை) எடுப்பு விழா நடைபெற்றது.

இரண்டு பெரிய புரவியில் அய்யனார் மற்றும் கருப்பண்ணசாமி ஊர்வலமாக வந்து அருள்பாலித்தனர். வழிநெடுக வீடுகள் தோறும் அபிஷேக ஆராதனைகள் செய்து பக்தர்கள் வழிபட்டனர். புரவிகள் ஊர்வலமாக அம்மச்சியார் அம்மன் கோயில் வந்தடைந்த பின், பெண்கள் மாவிளக்கு எடுத்து வழிபட்டனர். இதில் ஊராட்சி மன்றத்தலைவர் ராஜாத்தி துரைப்பாண்டியன், மாவட்ட கவுன்சிலர் ஜெயக்குமார், துணை தாசில்தார் தெய்வேந்திரன் மற்றும் சாகுல்மைதீன், கிருஷ்ணன், பாலாஜி  மற்றும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

இன்று காலை மீண்டும் புரவிகள் ஊர்வலமாக கிளம்பி, செவிடு தீர்த்த அய்யனார் கோயில் வந்தடைந்தது. அதன்பின் அபிஷேக ஆராதனைகள் நடைபெற்று, கருப்பண்ண சுவாமிக்கு கிடாய் வெட்டுதல், அன்னதானம் உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்றது. நாளை காலை மஞ்சள் நீராடலுடன் திருவிழா நிறைவடைகிறது. விழா ஏற்பாடுகளை திருப்பணிக்குழுவினர், கிராம பொதுமக்கள் செய்திருந்தனர். தற்போதைய தலைமுறையினர் யாரும் பார்த்திராத, முந்தைய தலைமுறையினர் நடத்திய புரவி எடுப்பு விழா நூறாண்டுகளுக்கு பின்னர் தற்போது நடந்ததால் கிராம மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.


Tags : Puravi Takepu festival ,Dumathur , Puravi Edupu Festival in Keelamathur, delight the villagers
× RELATED 100 ஆண்டுகளுக்கு பிறகு கீழமாத்தூரில்...