×

போலீசாரின் தடையை மீறி போராட்டம் பாஜ தலைவர் அண்ணாமலை, எச்.ராஜா, நயினார் நாகேந்திரன் உட்பட 4 ஆயிரம் பேர் மீது வழக்கு பதிவு: எழும்பூர் போலீஸ் நடவடிக்கை

சென்னை: போலீசாரின் தடையை மீறி போராட்டத்தில் ஈடுபட்ட பாஜ மாநில தலைவர் அண்ணாமலை, எச்.ராஜா, நயினார் நகேந்திரன் உட்பட 4 ஆயிரம் பேர் மீது எழும்பூர் போலீசார் 3 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்துள்ளனர். தமிழக பாஜக சார்பில் பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து நேற்று எழும்பூர் ராஜரத்தினம் மைதானம் அருகே கோட்டை முற்றுகை போராட்டம் நடைபெற்றது. இந்த போராட்டத்திற்கு போலீசார் அனுமதி அளிக்கவில்லை. இருந்தாலும் போலீசாரின் தடையை மீறி இந்த போராட்டம் நடைபெற்றது.

இந்த போராட்டத்தில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, தேசிய செயலாளர் எச்.ராஜா, சட்டமன்ற பாஜக தலைவர் நயினார் நகேந்திரன், மாநில துணைத் தலைவர் கருநாகராஜன் உட்பட மாநிலம் முழுவதிலும் இருந்த 4 ஆயிரத்திற்கு மேற்பட்ட பாஜகவினர் கலந்து கொண்டனர்.  இதனால் ராஜரத்தினம் மைதானம் அருகே ஆயிரத்திற்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். பின்னர் திட்டமிட்டப்படி போராட்டத்தில் ஈடுபட்ட பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தலைமையில் ராஜரத்தினம் மைதானத்தில் இருந்து கோட்டை நோக்கி பேரணியாக செல்ல முயன்றனர். ஆனால் போலீசார் தடுப்புகள் அமைத்து அனைவரையும் தடுத்து நிறுத்தினர்.

அதைதொடர்ந்து போலீசார் நடத்திய பேச்சுவார்த்தையை தொடர்ந்து அனைவரும் அங்கிருந்து கலைந்து சென்றனர். இந்நிலையில், போலீசாரின் தடையை மீறி போராட்டம் நடைபெற்றதால் எழும்பூர் போலீசார் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, தேசிய செயலாளர் எச்.ராஜா, சட்டமன்ற பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன், பாஜக மாநில துணைத் தலைவர் கருநாகராஜன் உட்பட 4 ஆயிரம் பேர் மீது ஐபிசி 143(சட்ட விரோதமாக கூடுதல்), 188 (அரசு அதிகாரியின் உத்தரவிற்கு கீழ்படியாமை), சென்னை மாநகர காவல் சட்டம் பிரிவு 41 ஆகிய 3 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

Tags : BJP ,Annamalai ,H. Raja ,Nainar Nagendran ,Egmore , BJP leader Annamalai, H. Raja, Nainar Nagendran protest against police ban
× RELATED எச்.ராஜாவின் கனவை தகர்த்த அண்ணாமலை:...